சனி, 15 பிப்ரவரி, 2014

சாகித்திய அகாதெமி விருது பெற்ற பன்முகப் படைப்பாளி, சேலம் தமிழ்நாடன் இலா.வின்சென்ட்

நாங்கள் எல்லாம் கண்மூடிக் கிடக்குமிந்த 
மனிதருக்காய்க் கூவுகிறோம்

இது புதிய ஞானம்

புதிய ராகம்

புதிய பாட்டு

என முழங்கிய வானம்பாடி தமிழ்நாடன். பெரியாரியம், மார்க்சியம் இரண்டும் கலந்தது அவரது இலக்கிய ஆத்மா.

யாதும் என்மொழி யாவரும் என் மக்கள்; மண்ணுலகின் மகன் நான் என்று பிரகடனப் படுத்தியவர்; பொய்மைக்கு ஏவல் செய்து வாழ்வதைவிட உண்மையிடத்து போரிட்டுச் சாகலாம் என்பது அவரது போர்க்குணம், இத்தகு பெருமைக்குரிய தமிழ்நாடன் கடந்த 09.11.2013 அன்று இயற்கை எய்தினார்.

தமிழ்நாடன் சேலம் மாவட்டம் ஏர்வாடியில் 1943ல் பிறந்தவர். தாய் இருசாயம்மாள், தந்தை ஆறுமுகம். பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் சுப்பிரமணியம்.

வியத்நாம் போரின் உச்சம். தமிழ் நாடனின் போர் நாய்க்கு என்றொரு கவிதை (1965). வாழ்வு அழிக்கப்பட்ட ஒரு வியத்நாமிய சகோதரி “என்னை வேசியாக்கி யவன் ஜான்சன்” என்று பாடுவதாய் இன்னொரு கவிதை (1966). இரண்டையும் தெசினியின் கவிதை இதழ் வெளியிட்டது. அவற்றை ஆங்கிலமாக்கி, புது டெல்லி அமெரிக்கத் தூதரகம் மூலம் அதிபர் ஜான்சனுக்கு அனுப்பி வைத்தார் தமிழ்நாடன்.

1972ல் வானம்பாடிகளின் புதுக்கவிதை இயக்கம், கங்கை கொண்டான், சிற்பி, ஞானி, சுந்தரம், மேத்தா, பாலா, புவியரசு, சி.ஆர்.ரவீந்திரன் ஆகியோருடன் தமிழ்நாடன் தோழமை கொண்டார். அவரது வேள்வி (மரபு) கவிதைத் தொகுதி வெளிவந்தது. தொடர்ந்து மண்ணின் மாண்பு (1973) இதில் இரண்டு கவிதைகள் மகாத்மா காந்தியை விமர்சித்தன. அந்நேரத்தில்தான் மார்க்சிய லெனினியவாதிகள் காந்தி சிலைகளைத் தகர்த்துக் கொண்டிருந்தார்கள். கவிதைக்காக தமிழ்நாடன் கைதானார். இருப்பினும் அவர் கவிதையின், பேச்சின் வீரியம் குறையவில்லை.

1978ல் தமிழ்நாடனின் அம்மா அம்மா கவிதைத் தொகுப்பை கவிஞர் மீரா வெளியிட்டார். இத்தொகுப்பு உலகக் கவிதையின் உயரம் தொடும் உன்னதம் நிறைந்தது. அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, இந்தோனே´யா இஸ்ரேல், எகிப்து, சீனா, பிரிட்டன், பொலிவயா. ர´யா, ஆகிய பத்துத் தாய்களுக்குமான பாட்டுப் படையல் அது. தாய் மொழியையும தாய் நாட்டையும் அம்மா என்றழைத்த தமிழ்க் கவிதை இன்று உலகத்தை யேஅம்மா என்றழைக்கும உன்னத நிலைக்கு உயர்ந்திருக்கிறது. உயர்த்தியிருப்பவர் தமிழ்நாடன்.

தமிழ்நாடனின் கதைப் படைப்புகள்

சாரா. கலாசாகரம், திரெளபதை சம்வாதம். அன்னை கதீஜா. ஆதாம் ஆப்பிள் தேடுகிறான். ஏவாள் மறுத்த ஆப்பிள் (வேலிகள்), மகாநிவேதனம், ஆதியாகமம், மனிதப்பிம்பம், கடவுளுக்குக் காதுகள் இல்லை. பிரம்மாவின் மரணம் என்னும் 11 கதைகளின் தொகுப்பு தமிழ் நாடனின் கதைகள் (2003).

தமிழ்நாடனின் மற்றொரு ஆற்றல் முகம் மொழிபெயர்ப்பு, இலக்கியம் மனித இனத்தை ஒன்றுபடுத்தும் சக்தி. அதில் மொழியாக்கம் பல்வேறு இன, மொழி, நாடு சார்ந்த மக்களுக்கான உறவுப்பாலம். அவரின் அண்மைக் கால தமிழாக்க வெளியீடுகள் இரண்டு. ஒன்று உலகக் கவிதைகள் (2010). இங்கிலாந்து, அமெரிக்கா, வியத்நாம், கொரியா, சீனம், ஜப்பான், ஆஸ்திரேலியா, கம்போடியா, திபெத், நேப்பாளம் நாட்டுக் கவிதைகளின் தமிழாக்கம்.

இன்னொன்று இந்தியக் கவிதைகள் புதுமையின் பாதை (2011). இந்திய மொழிகளான தோஹ்ரி, காஷ்மீரி, சிந்தி, பஞ்சாபி, ராஜஸ்தானி, மைதிலி, அசாமி, வங்கம், ஒரியா, இந்தி, உருது, குஜராத்தி, மராத்தி, கொங்கணி, தெலுகு, கன்னடம், மலையாளம் மொழிக் கவிதைகளின தமிழாக்கம்.

அவரது மனுதருமம் தமிழாக்கம் (1988) ஐந்து பதிப்புகள் கண்டுள்ளது. கெளடில்யரின் அர்த்த சாஸ்திரம், (2011) தமிழில் தந்தார். ஒரிய எழுத்தாளர் ரி´கேஷ் பாண்டாவின் சிறுகதை களை ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும் எனத் தமிழாக்கினார். அது தமிழ் நாடனுக்கு மொழிபெயர் ப்புக்கான சாகித்ய அகாதெமி விருதைப் (2000) பெற்றுத் தந்தது.

தமிழ்நாடனின் உரைநடை பிரமிடுகளின் கல்லடுக்குப் போன்றசொல்லடுக்குக் கொண்டவை. அவ்வளவு இறுக்கம். கட்டுரைக்குக் கட்டுரை புதுப் புதுப் பதச் சேர்க்கை, கலைச் சொற்கள்.

ஒரு வானம்பாடியின் இலக்கியவனம் (1990) சேலம் கலையும் இலக்கியமும் (2001). என் மொழி என் மக்கள் என் நாடு (1997), புதுமையின் வேர்கள் (2000), சாகித்ய அகாதெமி தமிழ் விருதுகள், சில விவரங்கள் சில விசாரங்கள் (2001), கலைகள் ‡ உறவும் உருமாற்றமும் (2001), உயிர் ஒன்று உடல் நான்கு (2001), ஜப்பானியக் கவிதை (2001), தமிழ்நாடன் கட்டுரைகள் (2008) அவரது உரைநடை ஆக்கங்களாம்.

அண்மைக்காலப் படைப்புகள் திருக்குறள் புதிர்கள் (2009), அறிஞர் அண்ணாவின் கனவு (2010), அல்குல் (2010).

200 ஆண்டுகாலச் சேலம் மாவட்டம் பரமத்தி அப்பாவு, வள்ளல் சம்புகுல சேகர கந்தசாமி கண்டர், தமிழ் மொழியின் முதல் அச்சுப் புத்தகம், சேலம் திருமணிமுத்தாறு போல்வன தமிழ்நாடனின் வரலாற்று ஆய்வு நூல்கள். சேலம் மாவட்டம் சில ஆய்வுகள், தருமபுரி மாவட்டம் புதிய ஆய்வுகள், தமிழ்நாட்டு மலைவாழ் பழங்குடி மக்கள், கெட்டிமுதலி அரசர்கள், இடும்பை இல; போல்வன தமிழ்நாடன் தொகுத்தவை.

அலெக்சாண்டர் ரீடுவின் அறிக்கை 1800, பாரதிதாசன் எழுதிய குமரகுருபர நாடகம், சோழர் கால செப்பு நாணயங்கள், பன்னாட்டார் பட்டயம், வீரபத்திர சதகம் ஓலைச்சுவடி, திருக்குறள் (பரிதியார் உரையோடு) ஓலைச்சுவடி அவர் கண்டறிந்து தமிழர்க்குத் தந்தவை.
தமிழ்ப் புதுக்கவிதை மீது அமெரிக்கக் கவிதையின் தாக்கம் என்ற பொருளில் ஆய்வு செய்துள்ளார் தமிழ்நாடன். கொங்கு ஆய்வகம் சார்பில் பல வரலாற்றுப் பண்பாட்டு ஆய்வரங்குகள் நடத்தியுள்ளார். அவர் கொங்கு களஞ்சியம் தொகுப்பு நூல் ஆசிரியர்களுள் ஒருவர்.

தமிழ்நாடன் ஒரு ஓவியருமாவார், தொடக்க நாட்களில் அவருடைய கவிதைகளுக்கான ஓவியங்களை அவரே வரைந்தார். அவர் சேலத்தில் தேசிய அளவிலான முதல் ஓவியக் கண்காட்சி (1975) நடததினார். தென்னிந்திய ஓவியர் 50 பேர் கலந்து கொண்ட ஓவியம் சிற்பம் குறித்த இலவச பயிற்சி முகாம் (1999) அமைத்தார். தான் தீட்டியதும் தன்னிடம் இருந்ததுமான இரண்டு லட்சம் மதிக்கத்தக்க ஓவியங்களைச் சேலம் அருங்காட்சியகத்துக்கு அன்பளித்தார். ஆதிமூலம், ராஜவேலு, வீரசந்தனம், விஸ்வம்., பொன். ரகுநாதன் போன்ற ஓவிய மேதைகளும் தட்சிணாமூர்த்தி, சீனிவாசன் போன்ற சிற்பிகளும் இவரது கலையுலக நண்பர்கள்.

சேலத்துச் செம்மல் விருது ‡ 1984, இந்திய அரசின் ஆசிரியர் விருது ‡1988, பாவேந்தர் பாரதிதாசன் விருது ‡ 1991, திருப்பூர் தமிழ்ச் சங்கம் இலக்கிய விருது ‡ 1994, சேலம் மாநகராட்சி இலக்கிய விருது ‡ 2000, சிற்பி இலக்கிய விருது ‡ 2003 எனத் தமிழ்நாடன் பல விருதுகறையும் பாராட்டுக்களையும் பெற்றவர்.

கவிஞர், அறிஞர், நாவலாசிரியர், கட்டுரையாளர். மொழி பெயர்ப்பாளர், ஆய்வாளர், ஓவியர் எனப் பன்முகம் கொண்ட படைப்புக் கலைஞர் தமிழ்நாடன். அவரது இறப்பு தமிழுலகுக்கு இழப்பு. இந்த மாபெரும் படைப்பாளிக்கு அஞ்சலி செலுத்துகின்றோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக