சனி, 15 பிப்ரவரி, 2014

ஏன் வேண்டும்? வடதமிழ்நாடு!

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எழுதிய கடிதம்

மத்திய உள்துறை அமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்.

இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் புதிய மாநிலக் கோரிக்கைகள் எழுந்துள்ளன என்பது குறித்து; இந்திய உள்துறைச் செயலகம் வெளியிட்ட பட்டியல் ஒன்றைச் செய்தித்தாள்களில் சமீபத்தில் பார்த்தேன்.

வடதமிழ்நாடு தென்தமிழ்நாடு எனத் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்தும் இந்திய அரசின் உள்துறைச் செயலாகம் வெளியிட்ட பட்டியலில் தமிழ்நாடு சேர்க்கப்படாதது ஆச்சரிய மளிக்கிறது.

இது தொடர்பாகவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.


காமராசர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும்; பின்னர் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வடதமிழ்நாடு தனி மாநிலமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர் தலைமையிலான உழைப்பாளர் பொதுநலக் கட்சியின் மூலம் வலியுறுத்தி வந்துள்ளார். நூற்றுக்கணக்கானோர் இது தொடர்பான ஆர்ப்பாட்டங்களில் கைதாகியும் உள்ளனர்.

17.3.1976-ல் திட்டக்குடியில் இதற்கென்றே இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட மாநாடு ஒன்றையும் நடத்தியுள்ளார் இது இந்திய அரசின் எமர்ஜென்சி காலம்.

இந்த மாநாடு தொடர்பாக ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் புதிய மாநிலத்தை அடைந்தே தீர்வோம் என்ற வாசகம் ஆட்சேபகரமானது எனக்கூறி - மாநாட்டுப் பொறுப்பாளர் , சுவரொட்டிகளை அச்சிட்ட அச்சகப் பொறுப்பாளர் ஆகியோரைக் கைது செய்து வழக்கும் தொடுத்தது அப்போதைய தமிழக அரசு.

தனிமாநிலம் கேட்பது சட்டப்படி குற்றமல்ல; கோரிக்கையை ஏற்பதோ மறுப்பதோ அரசின் முடிவு என - உளுந்தூர்பேட்டை நீதிமன்ற முதன்மை நீதிபதி கருணாகரன் 7.12.1977 அன்று தீர்ப்பு வழங்கி வழக்கைத் தள்ளுபடி செய்தார்.

தெலங்கானா தனி மாநிலக் கோரிக்கை அமைப்பான தெலங்கானா பிரஜா சமதி அமைப்பின் தலைவராக இருந்த சென்னா ரெட்டியை 1972 சட்டமன்றத் தேர்தலுக்குமுன்; காங்கிரசில் இணைத்து - தெலங்கானா கோரிக்கையை நீர்த்துப் போக வைத்ததன் பரிசாக ஆநதிர மாநில முதல்வராகவும் ஆக்கப்பட்டார் சென்னாரெட்டி - அதைப் போலவே - தமிழ்நாட்டில் தனி மாநிலம் கேட்டு இயக்கம் நடத்திய எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாரையும் ஆசைகாட்டி காங்கிரசில் இணைத்து வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கைளைக் கைவிட வைத்தது.

என்றாலும்- தெலங்கானாவைப் போலவே - வடதமிழ்நாடு தனிமாநிலக் கோரிக்கையும் கனன்று கொண்டு தான் இருக்கிறது.

எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியாருக்குப் பிறகு ‡ வடதமிழ்நாடு கல்வியில்; வேலைவாய்ப்பில்; அரசியலில் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதைக் கண்டித்து - வடதமிழ்நாடு தனி மாநிலமாகப் பிரிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி விளிம்பு நிலை மக்கள் கலை இலக்கிய இயக்கம் தன் கொள்கை பரப்பு இதழான அச்சமில்லை மாத இதழின் மூலம் தொடர்ந்து பரப்புரை செய்து வருகிறது.

1999 முதல் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டிய அவசியம் குறித்து - அறிஞர்கள்; சான்றோர்கள் அரசியல் தலைவர்களின் கருத்துக்களையும் நேர்காணல்களையும் வெளியிட்டு வருகிறது.


விளிம்பு நிலை மக்கள் கலை இலககிய இயக்கத்தின் ஒவ்வொரு கூட்டத்திலும் தமிழ்நாட்டிலிருந்து வடதமிழ்நாட்டைத் தனி மாநிலமாகப் பிரிக்க வேண்டுமென்ற தீர்மானங்கள் நிறைவேற்றி தமிழக அரசுக்கும் அனுப்பியுள்ளோம்.

இயக்கத் தோழர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி 14.2.2004 அன்று கும்பகோணம் வட்டம், குடிதாங்கி கிராமத்தில் உள்ள சியாபாட்டன் திடலில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் - விளிம்புநிலை மக்கள் இயக்கத்தை - வடதமிழ்நாடு மக்கள் இயக்கம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கைக்காகப் போராடி வருகிறோம்.
இக்கோரிக்கைக்காக இயக்கத்தின் சார்பாக அச்சமில்லை, வடதமிழ்நாடு என்கிற இரண்டு மாத இதழ்களையும் நடத்தி வருகிறோம்.

வடதமிழ்நாடு தனிமாநிலமாக அமைக்க வேண்டிய அவசியம் குறித்த விரிவான விளக்கங்கள் அடங்கிய வடதமிழ்நாடு என்ற புத்தகத்தையும் வெளியிட்டுள்ளோம்.

வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கைக்கு பா.ம.கட்சி நிறுவனத் தலைவரான டாக்டர் இராமதாஸ் அவ்வப்போது ஆதரவு தெரிவித்து வருகிறார்.


தென்தமிழ்நாடு தனி மாநிலம் கேட்டு மூவேந்தர் முன்னேற்ற முன்னணி கட்சியின் தலைவரான டாக்டர் சேதுராமன் அவர்களும் போராடி வருகிறார்.


தென்தமிழ்நாட்டுக்கென மதுரையில் தனி உயர்நீதிமன்றமும் காவல்துறை தலைமை அலுவலகமும் திறக்கப்பட்டாயிற்று. தலைமைச் செயலகம் அமைப்பது ஒன்றுதான் பாக்கி.
எனவே தமிழ்நாட்டின் மாநிலப் பிரிவினை - இரு பகுதியினரும் வரவேற்கும் ஒரு கோரிக்கை.

எங்கள் கோரிக்கையை ஏற்று புதிய மாநிலங்களை உருவாக்கத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறேன்.

ஏன் வேண்டும் வடதமிழ்நாடு புதிய மாநிலம் என்பதற்கான காரணங்களில் சிலவற்றை இக்கடிதத்தின் இணைப்பாகக் கொடுத்துள்ளேன்.

ந.இறைவன்
16.12.2009

மாநிலப்பிரிவினைக் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்ற ப.சிதம்பரத்திற்கு பதில் தமிழ்நாட்டை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என்பது அபத்தமானது. 

அதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்று கருணாநிதியைச் சந்தித்து விட்டு கருணாநிதியின் வீட்டுப் படிக்கட்டில் நின்று முழங்கி விட்டு போயிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

போராட்டங்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என்றெல்லாம் கருணாநிதி அடிக்கடி வீர வசனம் பேசுவார். அதிர்ந்து பேசாதவர் என்று பெயரெடுத்த ப.சிதம்பரத்தையும் இந்த நோய் தொற்றிக்கொள்ளும் என்பது நாம் எதிர்பார்க்காத ஒன்று. கருணாநிதி வீட்டுப் படிக்கட்டை அடிக்கடி மிதிக்க நேர்ந்த பழக்க தோசத்தால் ஏற்பட்ட விபத்தாகவும் இருக்கலாம்.

இருந்தாலும் - தன் நிதானத்தைக் காத்துக் கொள்ள - எந்த மருந்தை தின்றால் இந்த பித்தம் தெளியும் என்பதைத் தேர்ந்து தெளிய வேண்டிய ப.சிதம்பரத்தின் உடனடித் தேவை என்பதே நாம் அவருக்குச் சொல்லும் ஆலோசனை.

கொஞ்ச நாளைக்கு முன்புதான் ப.சிதம்பரத்தின் உள்துறை அமைச்சகம் தமிழ்நாட்டில் மாநிலப் பிரிவினைக் கோரிக்கை இல்லாததைப் போல ஒரு பட்டியலை வெளியிட்டது.

இப்போது - மாநிலப் பிரிவினைக் கோரிக்கையை முளைக்கும் போதே கிள்ளி எறிய வேண்டும் என்று கூறி இருப்பதன் மூலம் தமிழ்நாட்டிலும் மாநிலப் பிரிவினைக் கோரிக்கை முளைத்து விட்டது என்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்தமைக்காக உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இது நமது கடிதம் ஏற்படுத்திய மாற்றம்.

இனி, வடதமிழ்நாடு கோரிக்கை அபத்தமானதா? முளையிலே கிள்ளி எறிய வேண்டும் என்ற சிதம்பரத்தின் பேச்சு அபத்தமானதா? என்பதைப் பார்ப்போம்.

ப.சிதம்பரம் உலகப் புகழ் பெற்ற ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர். சென்னை உயர் நீதி மன்றத்திலும் உச்சநீதி மன்றத்திலும் சிறந்த வழக்கறிஞர் என்று பாராட்டப் படும் அளவுக்கு வழக் கறிஞர் தொழில் புரிந்து வந்தவர். சட்டம் தெரிந்தவர்களால், சட்ட மேதை என்றெல்லாம் கூட கொண்டாடப் பட்டவர்.

மாநிலப் பிரிவினைகளை இந்திய அரசியலமைப்புப் பகுதி - 1 சடட விதி - 2 அனுமதிக்கிறது என்பது சாதாரண சட்ட அறிவு உள்ளவர்களுக்கே புரியும்.

சட்டமேதை எனக் கொண்டா டப்படும் சிதம்பரத்திற்கு எப்படி இந்தச் சட்டம் புரியாமல் போனது?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட வட தமிழ்நாடு மாநிலக் கோரிக்கையை அபத்தமானது எனச் சொல்வது - மேற்கண்ட அரசியல் சட்டத் தையே அபத்தமானது எனச் சொல்லி அவமதிக்கும் செயலாகும். மத்திய அரசின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் சிதம்பரமே இப்படிச் சட்டத்தை அவமதித் தால், வேறு யார்தான் சட்டத்தை மதிப்பார்கள்?

“அவனைத் தூக்குங்கடா” என்பது நமது சினிமா வில்லன்கள் அடிக்கடி பேசும் வசனம்.

சட்டத்திற்கு உட்பட்ட எங்களது வடதமிழ்நாடு மாநிலக் கோரிக்கையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்ற உள்துறை அமைச்சரின் பேச்சுக்கும் மேற்கண்ட வசனம் பேசும் வில்லன்களுக்கும் என்ன வித்தியாசம்?


முன்னதை நடிகர்கள் பேசுகிறார்கள். பின்னதை இந்திய உள்துறை அமைச்சர் பேசுகிறார் என்பதைத் தவிர வேறு ஒரு வித்தியாசமும் இல்லை.

இரண்டுமே சட்டத்தை மதியாத அடாவடிப் பேச்சுக்களே.


அறிவு ஜீவிகளைக்கூட அதிகார போதை குப்புறத் தள்ளி - குழி பறித்து மண் அள்ளிப் போட்டு மூடிவிடும் என்பார்கள். சிதம்பரத்திற்கு அத்தகைய விபத்து ஏற்பட்டிருப்பதற்கு நமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் டெல்லி எஜமா னர்கள் இரண்டாவது மாநில மறுசீரமைப்பு ஆணையத்தை அமைப்பதற்கான கொள்கை முடிவினை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் - மத்திய அரசின் கொள்கை முடிவிற்கு எதிராக மாநிலப் பிரிவினையை முளையிலேயே கிள்ளி எறிவேன் என எகிறி குதிப்பது - இரண்டாவது மாநில மறுசீரமைப்பு ஆணையம் அமைப்போம் என்ற அறிவிப்பைக் கேலிக் கூத்தாக்கியுள்ளது.

மத்திய அரசின் கொள்கை முடிவுககு எதிராக, மத்திய அரசின் ஒரு அங்கமாக இருக்கும் உள்துறை அமைச்சரே இப்படிப் பேசுவதை மத்திய அரசு எப்படி அனுமதிக்கிறது?

30 கோடி மக்கள் தொகையைக் கொண்ட அமெரிக்காவில் 50 மாநிலங்கள் இருக்கின்றன. சுமார் 120 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில் வெறும் 28 மாநிலங்கள் மட்டுமே உள்ளன.

அமெரிக்க அடிப்படையில் பார்த்தால், பல மாநிலங்களைக் கொண்ட நாடாக இந்தியா இருக்க வேண்டும். இந்தியாவில் இருப்பதோ 28 மாநிலங்கள் மட்டுமே. இந்த நிலையில் புதிய மாநிலங்கள் கேட்பதை அபத்தம் என்றும், அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அமெரிக்காவின் தாசானுதாசனாக இருக்கும் சிதம்பரத்தால் எப்படி இப்படி முரண்பாடாகப் பேச முடிகிறது? இதற்கு என்ன காரணம்?

அண்ணன் எப்போ சாவான்; திண்ணை எப்போ காலியாகுமெனக் காத்திருக்கிறான் என கிராமத்தில் ஒரு கேலிப்பேச்சு உண்டு. அதுபோல், தமிழக முதல்வர் நாற்காலி கனவோடு காத்திருக்கிறார் சிதம்பரம் எனத் தமிழகப் பத்திரிகைகள் அடிக்கடி செய்திகளை வெளியிட்டு அவரது ஆசைகளைப் பேராசைகளாக்கி வருகின்றன.

இதன் விளைவாக முதலமைச்சர் நாற்காலிக் கனவு சிதம்பரத்தின் மனதிலும் வேர் பதித்து விட்டது. வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கை தனது தமிழக முதல்வர் நாற்காலிக் கனவைக் கருவிலேயே கலைத்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகத்தான், முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்பன போன்ற சட்ட விரோதப் பேச்சுக்களைப் பேச ஆரம்பித்திருக்கிறார் சிதம்பரம்.

ஆசை வெட்கம் அறியாது என்பது பழமொழி. ஆசை அறிவையும் அறியாது என்பது சிதம்பரத்தின் பேச்சின் மூலம் நாம் அறியும் உண்மை.

பழங்குடிமக்களும்; மண்ணின் மைந்தர்களும் ஆட்சி அதிகார உரிமைகளைப் பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு அமைக்கப்பட்டது தான் ஜார்கண்ட், சட்டீஸ்கார் உத்தராஞ்சல் போன்ற புதிய மாநிலங்கள்.

இந்த அடிப்படையில் - நெடுங்காலமாக ஆட்சி அதிகாரங்களை இழந்து தாழ்ந்து கிடக்கும் இரண்டரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட வன்னியர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் ஆட்சி அதிகாரங்களைப் பெற்று முன்னேற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தை உயிர் மூச்சாகக் கொண்டதுதான் வடதமிழ்நாடு தனி மாநிலக் கோரிக்கை.

சிதம்பரம், கருணாநிதி, ஜெய லலிதா போன்றோரின் சுயநல வேட்கையால், அவர்களது உருட் டல் மிரட்டல்களால், இரண் டரை கோடி உழைக்கும் மக்களின் ஆட்சி உரிமைக் கோரிக்கையான வட தமிழ்நாடு தனி மாநிலக் கோரிக் கையை இனியும் தடுத்து நிறுத்தி விட முடியாது. இதனைப் புரிந்து, உணர்ந்து, ஒதுங்கி நில்லுங்கள் என அவர்களைக் கேட்டுக் கொள் கிறோம்.

- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக