வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

பிரிக்கப்பட்ட தெலங்கானாவும் பிரிக்கப்பட வேண்டிய வடதமிழ்நாடும்..!

நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தி; பலநூறு உயிர்களைப் பலி கொடுத்து; 57 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனி மாநிலமாகியுள்ள தெலங்கானாவை வாழ்த்தி வரவேற்கிறோம்.

அயராது போராடிய தெலங்கானா போரளி கே.சந்திரசேகர ராவ் அவர்களுக்கும் நமது வாழ்த்துக்கள்.

வரலாற்றை அறியாதவர்கள் - ஆந்திராவிலிருந்து தெலங்கானாவைப் பிரித்து புதிய மாநிலத்தை உருவாக்கப் போவது போல பேசுகிறார்கள். எழுதுகிறார்கள்.
இது உண்மை அல்ல.

தெலங்கானா மாநிலத்தின் பழைய வரலாறு


இந்தியா சுதந்திரம் அடைந்த போது - சென்னை; பம்பாய்; உத்திரப்பிரதேசம்; மத்தியப் பிரதேசம்; பீகார்; ஒரிசா; மேற்கு வங்கம்; அசாம்; பஞ்சாப் என 9 மாநிலங்களையும்- தன்னாட்சி உரிமை பெற்ற 562 சமஸ்தானங்களை கொண்டதாக இருந்தது.


இந்தியா சுதந்திரம் பெற்று ஓராண்டு ஆன நிலையில் - 1948 இல் - தன்னாட்சி உரிமை பெற்ற அனைத்து சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணைக்கும் நடவடிக்கையில் இறங்கினார்; அப்போது இந்தியாவின் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல்.

இந்த முடிவை அறிவித்தவுடன் பெரும்பாலான குட்டி குட்டி சமஸ்தானங்கள் எல்லாம் தாமாகவே முன்வந்து இந்தியாவுடன் இணைந்து கொண்டன.

இணைய மறுத்த சமஸ்தானங்களை ராணுவத்தை அனுப்பிப் பணிய வைத்தார்; உள்துறை அமைச்சரான வல்லபாய் பட்டேல். அப்படி ராணுவத்தின் மூலம் பணிய வைக்கப்பட்ட சமஸ்தானங்களில் ஒன்று நிஜாம் ஆளுகைக்கு உட்பட்டிருந்த ஹைதராபாத் சமஸ்தானம் என்கிற தெலங்கானா பகுதி.

பெரும்பாலான குட்டி குட்டி சமஸ்தானங்கள் எல்லாம் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த மாநிலங்களோடு இணைக்கப்பட்டன. பெரிய நிலப்பரப்பைக் கொண்டதாக இருந்த ஹைதராபாத் சமஸ்தானம்; ஹைதராபாத் மாநிலமாக 17.9.1948 முதல் தனி மாநிலமாக்கப்பட்டது.

அப்போது ஆந்திரா என்ற ஒரு மாநிலமே இல்லை.

17.9.1948 முதல் 31.10.1956 வரை எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஹைதராபாத் மாநிலம் என்ற பெயரில் தெலங்கானா தனி மாநிலமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது.


1953-இல் ஆந்திர மாநிலம் உருவான கதை

இந்தியா சுதந்திரம் அடைந்த போது - தற்போதைய ஆந்திரத்தில் உள்ள தெலங்கானா பகுதி நீங்கலாக மற்ற ஆந்திரப் பகுதிகள் சென்னை ராஜதானி என்ற மாகாணத்தின் ஒரு பகுதியாகத்தான் இருந்தது.

சென்னை ராஜதானி மாகாணத்தில் தமிழர்களே பெரும்பான்மை. தமிழர்கள் 53 சதவீதம்; தெலுங்கர்கள் 38 சதவீதம்; மலபார் மற்றும் கர்நாடகப் பகுதிகளைச் சேர்ந்த மலையாளிகளும் கன்னடர்களும் 9 சதவீதம்.

சுதந்திரத்திற்கு முன் -

1920 முதல் நடந்த தேர்தல்களில் நீதிக் கட்சியின் சார்பில் 6 முறை அமைச்சரவை அமைக்கப் பட்டன. காங்கிரசின் சுயராஜ்யக் கட்சியின் சார்பில் நான்கு முறை அமைச்சரவை அமைக்கப் பட்டன.

நீதிக்கட்சி சார்பாக அமைந்த அமைச்சரவைகளானாலும்; காங்கிரசை சேர்ந்த சுயராஜ்யக் கட்சியைச் சேர்ந்தவர்களானாலும்; ஆந்திரப் பகுதியைச் சேர்ந்த தெலுங்கர்களே முதலமைச்சர்களானார்கள். 53 சதவீதம் கொண்ட மக்களைக் கொண்ட தமிழர்கள் ஒரு முறைகூட முதலமைச்சராக வர விட்டதில்லை. 


இது மட்டுமல்ல - பெரும்பாலான அமைச்சரவைகளில் தமிழர்களில் யாரும் அமைச்சராகக் கூட ஆக்கப் பட்டதில்லை. பெரும் பான்மையினரான தமிழர்களை ஒதுக்கி ஒடுக்கி விட்டு; சென்னை மாகாணத்தை ஆளப்பிறந்தவர்கள் தாங்களே என்ற ஆதிக்க வெறியில் ஊறி திளைத்தவர்களாக இருந்தார்கள் ஆந்திரப் பகுதி தெலுங்கர்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபின் நடந்த 1952 பொதுத் தேர்தலுக்குப் பின் முதன் முறையாக -

தமிழரான ராஜாஜி தலைமையில் ஆட்சி அமைந்தது.

பலமுறை சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த பிரகாசத்தால் இதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

சென்னை மாகாணத்திலிருந்து தெலங்கர்கள் வாழும் மாவட்டங்களைப் பிரித்து ஆந்திர மாநிலம் அமைக்க வேண்டுமென போராட ஆரம்பித்து விட்டார்கள்.

பொட்டி ஸ்ரீராமுலு என்பவர் இதற்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார். போராட்டம் தீப்பற்றிக் கொண்டது. 


இதனால் - 1953 ஆம் ஆண்டு மொழியை அடையாளமாக வைத்து சுதந்திர இந்தியாவில் முதல் புதிய மாநிலமாகவும்; முதல் மொழி வழி மாநிலமாகவும் ஆந்திர மாநிலம் உருவாக்கப் பட்டது.

தெலுங்கர்களின் ஆதிக்க வெறிக்கு கிடைத்த பரிசு ஆந்திர மாநிலம்.

1948இல் பிறந்த தெலங்கானா மாநிலத்தை , 1953இல் பிறந்த ஆந்திர மாநிலம் விழுங்கிய கதை
மொழி அடிப்படையில் ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து; இந்திய மாநிலங்களை மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. 


எனவே - மாநிலங்களை மொழிவழி மாநிலங்களாகத் திருத்தி அமைப்பதற்காக தனி ஆணையம் ஒன்றை மத்திய அரசு 1956இல் அமைத்தது.

1948இல் ஹைதராபாத் மாநில நிதிநிலை அறிக்கைப்படி - ரூ 60 கோடி உபரி நிதியைக் கொண்டதாக இருந்தது.

1953 இல் ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது அதனிடம் சென்னை மாகாணம் கொடுத்த 1 கோடி மட்டுமே அதன் கையிருப்பாக இருந்தது. கடலோர ஆந்திரா; ராயலசீமா ஆகிய பகுதிகளின் நிதி ஆதாரத்தை விட மிக உயர்ந்த நிலையில் இருந்தது ஹைதராபாத் மாநில நிதி ஆதாரம்.

இந்தியாவின் பெரிய நதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள கோதாவரி; கிருஷ்ணா நதிகள் தெலங்கானா பகுதிகள் மூலம் ஆந்திராவுக்கு வருவதால் ஆந்திரப் பகுதியை விட ஹைதராபாத் மாநிலத்தின் நீர்வளமும் மிகுந்ததாகவே இருந்தது.

எனவே - தெலங்கானா மாநிலத்தை ஆந்திராவோடு இணைத்தால்தான் தங்கள் பகுதியை வளமுடையதாக்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டு - மொழி வழி மாநில சீரமைப்பு ஆணையத்திடம் - ஒரே மொழி பேசுவதை அடிப்படையாக வைத்து இரண்டு மாநிலங்களையும் இணைத்து - விசால ஆந்திரா மாநிலமாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தனர் ஆந்திர மாநிலத் தலைவர்கள்.

ஆந்திர மாநிலத்துடன் தங்கள் மாநிலத்தை இணைக்கக் கூடாது என்றும் தங்களைத் தனி மாநிலமாகவே செயல்பட அனுமதிக்க வேண்டும் என்றும் தெலங்கானா மக்களும் மொழி வழி மாநில சீரமைப்பு ஆணையத்திடம் கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

மொழிவழி மாநில சீர்திருத்த ஆணையமும் -

தெலங்கானா தனி மாநிலமாக இருப்பதுதான் அதன் வளர்ச்சிக்கு உதவும் எனக்கூறி இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தது. இந்தியப் பிரதமர் நேருவும் - இந்த இணைப்பு கோரிக்கை சர்வாதிகார ஆக்கிரமிப்பு மனப்பான்மைக் கொண்டதென இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

இருந்தாலும் இந்த எதிர்ப்புகளை எல்லாம் மீறி; மொழிவழி மாநிலங்கள் 1956

இல் அமைக்கப்பட்டபோது;

1948 முதல் தனிமாநிலமாக இருந்த தெலங்கானாவை; 1953இல் புதிய மாநிலமாக உருவாக்கப்பட்ட ஆந்திர மாநிலம் விசால ஆந்திரா என்ற பெயரால் விழுங்கி விட்டது.
இதற்கு என்ன காரணம்?

இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னெடுத்த ஆந்திரா தலைவர்களான நீலம் சஞ்சீவ ரெட்டி; பிரம்மானந்த ரெட்டி போன்றவர்கள் அகில இந்திய அளவில் செல்வாக்கு மிக்கத் தலைவர்களாக இருந்தது முதல் காரணம்.

நிஜாம் ஆளுகைக்கு உட்பட்டிருந்த காரணத்தால் தெலங்கானாப் பகுதியில் நீலம் சஞ்சீவரெட்டி; பிரம்மானந்த ரெட்டி போன்ற செல்வாக்கு பெற்ற தலைவர்கள் யாரும் இல்லை என்பது இரண்டாவது காரணம்.

இந்திய வரலாற்றில் புதிய மாநிலங்கள் பிரிக்கப்பட்டதற்கு உதாரணங்கள் உண்டே தவிர;
இரண்டு மாநிலங்களாக இருந்த மாநிலங்களை ஒன்றாக இணைத்து பெரிய மாநிலமாக்கியதற்கான உதாரணம் தெலங்கானா ஆந்திர இணைப்பைத் தவிர வேறு எந்த உதாரணமும் இல்லை.

1956இல் இணைக்கப்பட்ட நாள் முதலாகவே - இந்த இணைப்புக்கு எதிராக தெலங்கானா பகுதி மக்கள் போராடிக் கொண்டு தான் இருந்தார்கள். எனவே தெலங்கானா மக்கள் -
ஆந்திரத்திலிருந்து பிரித்து புதிய மாநிலம் (Bifrication)கேட்கவில்லை.

1956இல் ஆந்திராவோடு ஒட்டப்பட்ட தங்கள் மாநிலத்தை ஒட்டு நீக்கும்படி (de-merge) தான் கேட்கிறார்கள்.

தெலங்கானாவை ஆந்திராவுடன் இணைத்த நாள் முதல் எங்கள் மாநில வளங்களை சுரண்ட ஆரம்பித்து விட்டார்கள். எங்களை சுரண்டி தங்களை வளப்படுத்திக் கொண்டு; ஆதிக்க சக்திகளாகி எங்களை அடிமை நிலைக்குத் தள்ளி விட்டார்கள். என்பது தெலங்கானா பகுதி மக்களின் குற்றச்சாட்டு. கொதிப்பு. தெலங்கானா மக்களின் முக்கிய குற்றச்சாட்டுகள் குறித்து சுருக்கமாகப் பார்ப்போம்.

நதி நீர்ச் சுரண்டல்

தெற்கின் கங்கை என்று அழைக்கப்படும் கோதாவரி நதி தெலங்கானா பகுதியில் மட்டும் 600 கி.மீடடர் துரம் பாய்ந்தோடுகிறது. இந்த நதிநீரில் 80 சதவீதம் நீர் தெலங்கானா நீர்பிடிப்பு பகுதியில் இருந்து கிடைக்கிறது.

மாநிலங்களிடையேயான நீர்ப்பங்கீட்டு ஒப்பந்தப்படி விசால ஆந்திராவின் மொத்த பங்கு 1480 டி.எம்.சி. பாய்ந்தோடும் நதியின் நீளம்; நீர்ப்பிடிப்பு பகுதிகள் என்ற அடிப்படையில் கோதாவரி நதிநீரான 1480 டி.எம்.சியில் - 80 சதவீதமான 1184 டி.எம்.சி நீரை தெலங்கானாவின் பாசனத்திற்கு பயன்படுத்தும் திட்டங்களை அரசு உருவாக்கி இருக்க வேண்டும். 600 கி.மீ நீளம் பாயும்இந்த நதியில் ஸ்ரீராம் சாகர் அணைத்திட்டம் என்ற ஒரே திட்டம் மட்டுமே ஆரம்பிக்கப்பட்டு கடந்த 50 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் 1184 டி.எம்.சி நீரைப் பயன்படுத்தும் உரிமையுடைய தெலங்கானா 50 டி.எம்.சி நீரைக்கூட பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கின்றது.

இதேபோல் கிருஷ்ணா நதி 400 கி.மீ தூரம் தெலங்கானா பகுதியில் எல்லையாகப் பாய்ந்தோடுகிறது. இதற்கான நீர் அளவலான 811 டி.எம்.சியில் 70 சதவீத நீர்ப்பிடிப்பு பகுதி தெலங்கானாவில் உள்ளது. இந்த அடிப்படையில் 811 டி.எம்.சி நீரில் 70 சதவீதம் தெலங்கானாவுக்கு உரியது. அதாவது 568 டி.எம்.சி நீர் தெலங்கானாவுக்கு உரியது. இந்த நதியில் குறுக்கே கட்டப்பட்ட ஸ்ரீசைலம் நீர்த்தேக்கம்; நாகார்ஜூனா நீர்த்தேக்கங்களை திறந்து வைத்த பிரதமர் நேரு - நவீன இந்தியாவின் ஆலயங்கள் எனப் புகழ்ந்தார்.

இந்த நவீன இந்தியாவின் ஆலயங்கள் மூலமான பாசன வசதியும்; மின் உற்பத்தியும் 90 சதவீதம் ஆந்திராவுக்கும்; 10 சதவீதம் மட்டும் தெலங்கானாவுக்கும் பயன்படுகிறது.

இதனால் நீர்வளம் மிக்கதாக இருக்க வேண்டிய தெலங்கானா பாலைவனமாக்கப்பட்டு விட்டது என்பதும் - இதனால் - ஆந்திராவில் இருந்து தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளில் 90 சதவீதம் பேர்கள் தெலங்கானாவைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்பதும் தெலங்கானா மக்களின் குற்றச்சாட்டு.

மின் உற்பத்தி

தெலங்கானாவின் மின்சாரத் தேவை மின் உற்பத்தியில் 56 சதவீதம் ஆனால் தெலங்கானாவுக்கு ஒதுக்கப்படும் மின்சாரம் 36 சதவீதம் எனபதும் - ஆந்திரா பகுதிக்கு மின்சாரத் தேவை மின் உற்பத்தியில் 44 சதவீதம்; ஆனால் அங்கே ஒதுக்கப்படும் மின்சாரம் 66 சதவீதம். இதன் காரணமாக தெலங்கானா பகுதியில் தொழில் முன்னேற்றமும் இல்லை. விவசாயிகளுக்கான மின்சாரமும் இல்லை. இதனால் தெலங்கானா பகுதியின் தொழில்கள் முடக்கப்பட்டு அழிக்கப்பட்டு விட்டன என்பது தெலங்கானா மக்களின் குற்றச்சாட்டு.

வேலைவாய்ப்புகள் அபகரிப்பு

ஆந்திர மாநிலத்தில் மொத்த அரசு ஊழியர்கள் சுமார் 15 லட்சம். ஆந்திர மக்கள் தொகையில் 40 சதவீத மக்கள் தொயைக் கொண்ட தெலங்கானா பகுதியினர் குறைந்தது 6 லட்சம் பேர் இருக்க வேண்டும். ஆனால் 3 லட்சத்திற்கும் குறைவான - அதுவும் கடைநிலைப் பதவிகளில் மட்டுமே தெலங்கானாப் பகுதியினர்.

ஆந்திரா தலைமைச் செயலகத்தில் வேலை பார்க்கும் 5000 பேரில் 500 பேர்களுக்குக் குறைவானவர்களே தெலங்கானா பகுதியினர்.

வேலை வாய்ப்புகளை அபகரித்துக் கொண்டு வேலை தேடும் அகதிகளாக்கி விட்டனர் என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

வருவாய்

ஹைதராபாத் மாவட்டம் மட்டும் ஆந்திர வருவாயில் சுமார் 40 சதவீதம் இதர தெலங்கானாப் பகுதி சுமார் 28 சதவீதம். ஆந்திரப் பகுதி வருவாய் வெறும் 32 சதவீதம் மட்டுமே இப்பகுதி மக்களுக்காக செலவிடப் படும் தொகை மொத்த வருவாயில் 25 முதல் 30 சதவீதம் மட்டுமே.

ஆனால் ஆந்திரா பகுதி முன்னேற்றத்திற்காக செலவிடப்படும் தொகை மொத்த வருவாயில் 70 முதல் 75 சதவீதம் வரை


இதன் மூலம் எங்கள் வருவாயைத் திருடி தங்களுக்கான திட்டங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள் என்பது தெலங்கானா மக்களின் கோபம்.

கல்வி முன்னேற்றம்

ஆந்திராப் பகுதியில் 22 பல்கலைக் கழகங்கள். ஆனால் தெலங்கானா பகுதயில் மொத்தம் 14 பல்கலைக் கழகங்கள். இதில் ஹைதராபாத்தில மட்டும் 8 பல்கலைக் கழகங்கள். இது தெலங்கானாப் பகுதியில் இருந்தாலும் இதில் 90 சதவீத இடங்களை ஆக்கிரமித்துக் கொள்பவர்கள் ஹைதராபாத் நகரை ஆக்கிரமித்துக் கொண்ட ஆந்திரப் பகுதி மாணவர்களே. எனவே ஆந்திரக் காரர்களின் பயன்பாட்டிற்காக மொத்தம் 30 பல்கலைக் கழகங்கள். தெலஙகானா பகுதியினர் பயன்பாட்டிற்கு 6 பல்கலைக் கழகங்களே.

இது எங்கள் கல்வி முன்னேற்றத்தை முடக்கி எங்களை பாமரர்களாகவே வைத்துக் கொள்வதற்கான சதித் திட்டமே என்கிறார்கள் தெலங்கானாப் பகுதி மக்கள்.
தொழிற்சாலைகள் மூடல்

நிஜாம் ஆட்சியில் உருவாக்கப்பட்ட அனைத்து தொழிற்சாலைகளையும் ஒவ்வொன்றாக மூடிவிட்டார்கள். புதிதாக தெலங்கானாப் பகுதியில் எந்த தொழிற்சாலையையும் எந்த அரசும் தொடங்கவில்லை.

ஹைதராபாத் மட்டுமே புதிய புதிய தொழிற்சாலைகள் உருவாக்கப் பட்டன. இவைகளில் 95 சதவிகித வேலை வாய்ப்புகளை ஆந்திரப் பகுதியிலிருந்து வந்த குடியேறியவர்களே ஆக்கிரமித்துக் கொண்டனர். எங்கள் தொழிற்சாலைகளை எல்லாம் மூடி எங்களை வேலைதேடி அலையும் நாடோடிகளாக்கி விட்டனர்.

தலைநகர் ஹைதராபாத்

இந்திய சுதந்திரத்திற்கு முன்பே இந்தியாவின் வளர்ச்சியடைந்த நகரங்களில் ஒன்றாக இருந்தது ஹைதராபாத். அகலமான சாலைகள்; அழகிய பூங்காக்கள் பெரிய கடல் போனற ஏரிகளால் சூழப்பட்ட நகரமாக இருந்தது.

தெலங்கானா மாநில இணைப்புக்குப் பிறகு - ஹைதராபாத் பூர்வ குடிகளின் நிலங்களையும் குடியிருப்புகளையும் ஆந்திராவிலிருந்து வந்த பண முதலைகள் வாங்கிக் குவித்துக் கொண்டு; ஹைதராபாத்தை தங்கள் சொர்க்கபுரியாக்கிக் கொண்டனர். பூர்வகுடிகள் ஹைதராபாத்துக்கு புறக்குடிகளாகி கூலிகளாக்கப் பட்டுவிட்டனர்.
ஆட்சியில் ஆந்திரர்கள்

மக்கள் தொகையில் 42 சதவீத மக்களையும்; 43 சதவீத நிலப்பரப்பையும் கொண்டது தெலங்கனா. 294 சட்ட மன்ற உறுப்பினர்களில் 119 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்டது.

அப்படி இருந்தும் - 30 செப்டம்பர் 71 முதல் 10 ஜனவரி 1973 வரை பி.வி.நரசிம்மராவ் 1 வருடம் 3 மாதமும்

6 மார்ச் 1978 முதல் 11 அக்டோபர் 1980 வரை சென்னாரெட்டி 2 வருடம் 6 மாதமும்

11 அக்டோபர் 1980 முதல் 24 பிப்ரவரி 24 பிப்ரவரி 1982 வரை அஞ்சய்யா 1 வருடம் 3 மாதம் 3 டிசம்பர் 1989 முதல் 17 டிசம்பர் 1990 வரை சென்னா ரெட்டி 1 வருடம் என மொத்தம் 6 ஆண்டுகள் மட்டுமே முதல்வர்களாக வந்துள்ளனர் தெலங்கானாவைச் சேர்ந்தவர்கள்,

இதிலே சென்னா ரெட்டி தெலங்கானா மாநில கோரிக்கையை ஒழிப்பதற்காக துரோகி ஆக்கப்பட்டவர். அதற்கு பரிசாக முதல்வர் பதவி அவருக்கு கொடுக்கப்பட்டது.

மீதி 51 ஆண்டுகளும் ஆந்திராவைச் சேர்ந்தவர்களே முதல்வர்களாகி ஆண்டுள்ளனர். இதனால் ஆந்திராவின் காலனியாகிப் போனது தெலங்கானா.

அதிலிருந்து விடுபட - தெலங்கானா மக்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி பலநூறு உயிர்ப்பலி கொடுத்து - தெலங்கானா மாநிலத்தை மீட்டு விட்டார்கள்.

தெலங்கானாவைப் போலவே வடதமிழ்நாடும் சுரண்டப் படுகிறது. இது குறித்து

“ஏன் வேண்டும் வடதமிழ்நாடு” என்ற தொடர் அடுத்த இதழில் இருந்து ஆரம்பமாகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக