சனி, 6 டிசம்பர், 2014

நிறுத்தங்கடா எனச் சொல்ல ஒரு தலைவன் இல்லாததால் நிகழ்ந்த கொலை - வன்னியர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கொலை

காடுவெட்டி குரு தலைமையிலான வன்னியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கே..மூர்த்தி மயிலாடுதுறை செம்பனார் கோவில் அருகில் 2.11.2014 அன்று வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.

இந்தப் படுகொலை தொடர்பாக -

ஜி.கே.மணி தலைமையிலான பாமகவின் மாநில துணைப் பொதுச்செயலாளரான அகோரம் ஆலந்தூர் நீதிமன்றத்தில்  3.11.2014 அன்று சரணடைந்துள்ளார்.



பாமகவில் வன்னியரை வன்னியர் வெட்டிக்கொள்வது புதிதல்ல. இது முதலுமல்ல.

2000 ஆண்டில் டாக்டர் ஐயாவை விமர்சித்தால் .கே.நடராசன்; தீரன்; வாழப்பாடி ராமமூர்த்தி தலைகளை வெட்டுவேன் என வன்னியர் சங்கத் தலைவர் காடுவெட்டி குரு பேசி நெற்றிக்கண் இதழில் செய்தி வெளியானபோதே -

வன்னியனை வன்னியன் வெட்டிக் கொண்டு மாளும் கொடுமைகளைப் பட்டியலிட்டு -

நிறுத்துங்கடா எனக் சொல்ல ஒரு தலைவன் இல்லையே என்ற தலைப்பில் மே - 2000 அச்சமில்லை இதழில் கட்டுரை எழுதியிருந்தோம்.  (இந்த இதழில் மறுபதிப்பு செய்திருக்கிறோம்)

14 ஆண்டுகள் ஆன பின்னும் நிலைமை மாறவில்லை.


  • வல்லம் அறிவழகன் படுகொலை.
  • கடலூர் மாவட்ட கவுன்சிலர் வெங்கடேசன் படுகொலை.
  • அரியலூர் சிவா படுகொலை.
  • மகாசங்கத் தலைவர் உ.பலராமன் கொலை முயற்சி.
  • தற்போது மூர்த்தி படுகொலை.

என பாமகவின் வன்னியர் எதிர் வன்னியர் படுகொலைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

வேறு எந்தக் கட்சியிலும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் இப்படி வெட்டிக் கொண்டு சாவதில்லை.

கோடி கோடியாகக் கொள்ளையடிக்கும் ஆளும் கட்சிகளில் கூட ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள் இப்படி வெட்டிக் கொண்டு மடிவதில்லை.

ஆட்சியைக் கனவில் மட்டுமே கண்டு கொண்டிருக்கும் பாமகவில் இத்தனைப் போட்டிகளா? அதற்காக இத்தனை படுகொலைகளா? போதுமடா சாமி போதும்.

இப்போதே இவ்வளவு படுகொலைகள் என்றால் இந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்த பூமிதான்  தாங்குமா? என்று பிறர் எள்ளி நகையாடுவதை எளிதில் புறக்கணித்து விட முடியாது.

*         

இந்தக் கொலையின் பின்னணி என்ன?

அக்டோபர் 6ஆம் தேதி தன் மகள் திருமண அழைப்பிதழைக் கட்சி நிர்வாகிகளுக்குக் கொடுக்க வைத்தீஸ்வரன் கோவிலுக்கு அன்புமணி போனாராம். துணைக்கு ஜி.கே.மணியும் போனாராம்.

அழைப்பிதழ் பெறுவதில் பாமகவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் அகோரத்தின் ஆதரவாளர்களுக்கும்; வன்னியர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவர் கே..மூர்த்தியின் ஆதரவாளர்களுக்கும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

மூர்த்தியின் ஆதரவாளர்கள் தங்களுக்கு அழைப்பிதழ் கிடைக்காததற்கு அகோரம் தான் காரணம் எனக் கருதி அகோரம் ஒழிக எனக் கோஷம் போட்டிருக்கிறார்கள்.

வெறுப்படைந்த அன்புமணி கோபமாக வெளியேறி இருக்கிறார்.

இது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் உங்களுக்குள் என்ன பிரச்சனை என கேட்டிருக்கிறார் ஜி.கே.மணி. மூர்த்தியின் ஆதரவாளர்கள் அகோரத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைக் கூறி இருக்கிறார்கள்.

மூர்த்தி காடுவெட்டி குருவின் ஆதரவாளர் என்றும் அகோரம் ஜி.கே.மணியின் ஆதரவாளர் என்றும் சொல்கிறார்கள்.

தன் ஆதரவாளர் அகோரம் குறித்து தன்னிடமே புகார் கூறுவதா எனக் கோபமடைந்த ஜி.கே.மணி மூர்த்தி ஆதரவாளர் ஒருவரை பொதுமேடையிலேயே கன்னத்தில் அறைந்திருக்கிறார்.

இதனால் கோபமடைந்த மூர்த்தி ஆதரவாளர்கள்; அகோரத்தின் காரை அடித்து சேதப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த சம்பவத்தால் -

மூர்த்திக்கும் அகோரத்திற்கும் இடையே நீயா நானா? யார் பெரியவன் என்ற போட்டி எழுந்து புகைய ஆரம்பித்திருக்கிறது.



2.11.2014 அன்று ஒரு திருமணத்திற்கு தன் நண்பரின் காரில் சென்ற மூர்த்தியை அகோரத்தின் ஆட்கள் வேறு ஒரு காரில் பின் தொடர்ந்து போய் செம்பனார்கோவில் அருகில் வழிமறித்து; வெடிகுண்டு வீசி அவர் சென்ற காரை நிறுத்தி -

மூர்த்தியை வெளியே இழுத்துப் போட்டு அரிவாளால் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். உடனே தலைமறைவாகிவிட்ட அகோரம் கொலை நடந்த மறுநாள்  3.11.2014 அன்று சென்னை ஆலந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்.

அகோரத்தின் கூலிப்படை ஆட்கள் இறந்த மணல்மேடு சங்கரின் தலித் ஆட்கள் என்றும்; இல்லை இல்லை, பாண்டிச்சேரி வன்னியர்கள்தான் என்றும் இருவேறு கருத்துக்களைச் சொல்கிறார்கள்.

கூலிப்படையாகிவிட்டபின் அவன் தலித் என்ன? அவன் வன்னியன் என்ன?

ஆனாலும் -

மூர்த்தி வெட்டிச் சாய்க்கப்பட்டு உயிர் போன பின்னும்; அவரது முகத்தைக் கொத்திக் குதறிய மிருக வெறி கோரக்காட்சியைப் பார்க்கிற போது ஒரு சாதிக்குள் பகைமையின் ஆழம் இவ்வளவு கொடூரமாக இருக்கலாமா என்று நெஞ்சம் பதறுகிறது.

ஜி.கே.மணி ஒரு தலைவருக்குரிய பொறுப்போடும் நடுநிலையோடும் நடந்து கொண்டிருந்தால் -
இந்தப் படுகொலை நடந்திருக்காது.

மூர்த்தியின் குடும்பம் அநாதையாகி நடுத்தெருவுக்கு வந்திருக்காது.

தன் ஆதரவாளரான அகோரமும் கைதாகி சிறைக்குப் போயிருக்க மாட்டார்.

ஜி.கே.மணியின் பக்குவமற்ற செயலால் -

மூர்த்தியின் உயிர் போனது.

அகோரத்தின் அரசியல் வாழ்வும் அஸ்தமனமாகி விட்டது.
*         
இந்தக் கோரக் கொலையைக் கண்டித்து வன்னியர் சங்கம் மற்றும் பாமக நிறுவனரான டாக்டர் ராமதாஸ் இன்றுவரை ஒரு அறிக்கையைக் கூட வெளியிட வில்லை என்பதும் -

இதற்கு முன்பு நடந்த கொலைகளிலும் அவர் மெளனமே சாதித்தார் என்பதும் ‡டாக்டர் ராமதாசோ அன்புமணியோ மூர்த்தியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக்கூட செல்லவில்லை என்பதும் -

இத்தகைய கொலைகள் கேள்வி கேட்பாரற்று அவரது கட்சியிலும் சங்கத்திலும் தொடர்வதற்கு ராமதாசின் இந்த மெளனம்தான் காரணமோ என்ற கருத்து வன்னியர்களிடம் பெருகி வருகிறது.

இது வன்னியர் சமூகத்தைக் கவலை கொள்ளச் செய்து வருகிறது என்பது ஒருபுறமிருக்கட்டும். ராமதாசின் வன்னியர் சங்கத்திற்கும்; பாமகவிற்கும் இது நல்லதல்ல என்பதை ராமதாசு கவனத்தில் கொள்ள வேண்டிய தருணம் இது.

இந்தக் கொலைக் கும்பலுக்கு எதிராக நிறுத்துங்கடா எனச் சொல்லிச் சாட்டையைச் சுழற்றுவதில்தான் டாக்டர் ராமதாசின் தலைமைக்கான அடித்தளம் இருக்கிறது என்பதை அவருக்கு கவனப் படுத்துகிறோம்.

- ஆசிரியர் குழு


_______________________________________________________________________________________ 
மே 2000 அச்சமில்லை இதழில் வெளிவந்த கட்டுரை
_______________________________________________________________________________________

நிறுத்துங்கடா எனச்சொல்ல

ஒரு தலைவன் இல்லையே!

மே 2000 அச்சமில்லை இதழில் வெளியிட்ட கட்டுரை





எந்த நாய் கழுதை வேண்டுமானாலும் வன்னியர்களை வெட்டிக் கொல்லலாம் என்கிற அவல நிலை ஒரு புறம் நெஞ்சை அறுக்கிறது.



வன்னியர்களே வன்னியர்களை வெட்டிக் கொண்டு மடிகிற அறியாமையும் அகம்பாவமும் ஒரு புறம் நெஞ்சைப் பிசைகிறது.



தற்காப்பற்ற நிலை ஒரு புறமும், தற்கொலை அகம்பாவம் மறுபுறமும் பற்றி எரிய, வன்னிய சமூகம் இருதலைக் கொள்ளியாய்ச் சீரழிந்து கொண்டிருக் கிறது. இது வன்னியர்களைத் தலைகுனிய வைக்கிறது.


வன்னியர் சமூகம் ஒரு தற்காப்பற்ற சமூகமா?


காக்கிச் சட்டைப் பாதுகாப்பு இருக்கிறது என்ற தைரியத்தில் வெறிநாயாய் மாறிய வால்டர் தேவாரம், படித்து பட்டம் பெற்ற தருமபுரியைச் சேர்ந்த தொண்ணூறு வன்னிய இளைஞர்களை நக்சலைட் என முத்திரை குத்தி சுட்டுக் கொன்றான்.



ஒரே நாளில்  26 வன்னிய இளைஞர்களைக் கொன்று சாதனை படைத்ததாக அந்த வெறிநாய் மார்தட்டிக் கொண்டதாம்.



ஜாலியன் வாலாபாக் படுகொலையை விட கொடுமையானது இந்த பச்சைப் படுகொலைகள். வேறு எந்த சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்களையாவது இப்படிக் கூண்டோடு சுட்டுக் கொல்ல முடியுமா இந்த அரக்கனால்.



தமிழ்நாடே தீப்பற்றி எரிந்திருக்காதா? அந்தத் தீயில இந்த வெறிநாயும் அவனது வாரிசுகளும் சாம்பலாக்கப்பட்டிருக்க மாட்டார்களா?



வன்னிய சமூகம் தற்காப்பற்ற அநாதைச் சமூகம் என்பதால்தான் தன் குலக் கொழுந்துகள் 90 பேரை தேவாரம் துடிக்கத் துடிக்கச் சுட்டுக் கொன்ற போதும், கைகட்டி வாய் பொத்தி இருந்தது வன்னிய சமூகம்.


 *         


காலம் காலமாகச் சென்னைத் துறைமுகத்தின் லாரி போக்குவரத்து வணிகத்தை வன்னியர்கள் மேற்கொண்டு வந்தார்கள். ஆண்டு ஒன்றுக்குப் பல நூறு கோடிகள் புரளும் தொழில் இது.

.

வன்னிய சமூகத்தவரிடமிருந்து இந்தத் தொழிலை அபகரிக்கத் திட்டமிட்டு சதி செய்து, இந்த தொழிலை நடத்திக் கொண்டிருந்த வன்னியர்களான வடசென்னை ஏழுமலை நாயகரையும், ஜீ.வி.சிவா நாயகரையும் கொன்று குவித்தது வந்தேறிக் கும்பல்.



கொலையுண்ட ஏழுமலை நாயகர் மதிமுகவின் முக்கிய பிரமுகர். மதிமுக வரலாற்றில் இனி எவரும் இப்படியோர் பேரணியை நடத்திவிட முடியாது என்கிற அளவுக்கு முதல் பேரணியையே மாபெரும் வெற்றிப் பேரணியாக நடத்தி சாதனை புரிந்தவர். செயல் வீரர்.



அவரது கொலை மதிமுகவுக்கு பேரிழப்பு. அவரைக் கொன்ற கயவர்கள் யார் என்பது மதிமுக தலைமைக்குத் தெரியாதா? அல்லது பிற கட்சி வன்னியர் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுக்கும் தெரியாதா?



இவர்கள் ஏன் இந்த கொலைக்கு நீதி கேட்டு போதிய அளவு போராட்டம் நடத்தவில்லை?



பிற கட்சி வன்னியர்கள் கொலையுண்ட ஏழுமலை நாயகர் ஒரு வன்னியர் எனப் பார்ப்பதற்கு பதிலாக அவரை ஒரு மதிமுக நபர் என மட்டுமே பார்த்தனர். மதிமுக தலைமையோ ஏழுமலை நாயகரை தன் கட்சியின் முக்கியப் பிரமுகர் எனப் பார்ப்பதற்குப் பதிலாக அவர் ஒரு வன்னியர்தானே எனப் பார்த்தது.



இதனால் மதிமுக தலைமை ஓரம் ஒதுங்கி நின்று ஒப்புக்கு ஒப்பாரி வைப்பதோடு தன் கடமை முடிந்து விட்டது என நினைத்தது. வன்னியத் தலைவர்களோ ஒப்புக்கு அழுவதற்குக் கூட முன் வராது அமைதி காத்தனர். கட்சிகளை மறந்து ஜாதியை மட்டுமே உயிர் மூச்சாய் நினைக்கிற பிற சாதிகள் மத்தியில், ஜாதியைவிடக் கட்சியே உயிர் மூச்சு என வன்னியர்கள் மயங்கிக் கிடந்ததால், வீரார்ந்த செயல் தளபதியான ஏழுமலை நாயகரின் பிணம் அனாதைப் பிணமாகிப் போனது.



ஏழுமலை நாயகருக்கே இதுதான் கதி எனத் தெரிந்து போனதால், ஜீ.வி.சிவா நாயகரைத் தீர்த்துக் கட்டுவது கொலைகாரக் கும்பலுக்கு மிக எளிதாய்ப் போனது.



இந்தக் கொலைகளை நடத்திய ஆதிக்க சாதி எது? அந்த கும்பலுக்குத் துணை போன காக்கிச் சட்டைக் கும்பலின் சாதி என்ன? இதில் காக்கிச் சட்டைப் பங்கு என்ன?



இந்த இரு கொலைகளுக்கும் நியாயம் கேட்டுக் கிளர்ந்தெழத் தவறியதன் விளைவாய், வன்னிய சமூகம் தான் ஒரு தற்காப்பற்ற சமூகம் என்பதை வெளிச்சமிட்டுக் காட்டியது.



இதன் விளைவாக -



மதிமுகவின் இன்னொரு பிரமுகரான சிதம்பரம் பழநிவேல் வந்தேறிகளால் வெட்டிச் சாய்க்கப்பட்டார். தன் கும்பகர்ணத் தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு இனியும் வன்னிய சமூகம் அநாதைச் சமூகம் அல்லவென மற்றவர்கள் உணரும் வகையில் முதல் முறையாகக் கிளர்ந்து எழுந்தது சிதம்பரம் பழநிவேல் கொலையில்தான்.



மற்ற சாதிகளுக்கு கட்சிகள் என்பது கால் செருப்புகள் தான். ஜாதிதான் அவர்களுக்கு உயிர் மூச்சு. வன்னியனுக்கோ கட்சிகள் தான் உயிர்மூச்சு, ஜாதி கால் செருப்பு மாதிரி. எந்தக் கட்சிக்குப் போனாலும் ஜாதியைக் கழட்டி வெளியில் வைத்து விட்டுவிடுவான். மற்ற  சாதிகளைப் போலவே, கட்சிகள் எங்களுக்கும் இனி கால் செருப்புகளே என உதறி எறியும் பக்குவத்தை வன்னிய  சமூகம் நடைமுறைப்படுத்தியது முதல் முறையாகப் பழநிவேல் கொலையில்தான்.



இந்த விழிப்புணர்வு அணையாது பாதுகாக்கப்படுமானால், வன்னிய சமூகம் இனிமேல் தற்காப்பற்ற அனாதைச் சமூகம் அல்ல என்பது நிலை நாட்டப்படும். வன்னியர்கள் பெருமைப் பட்டுக் கொள்ளும்படியான சமூக மாற்றம் இது என தலை நிமிர்கிறபோது; இன்னொரு இடி விழுகிறது.



வன்னிய சமூகம் தங்களைத் தாங்களே வெட்டிக்கொண்டு மடிகிற தற்கொலைச் சமூகமாக அதி வேகத்தில் மாறிக்கொண்டு வருகிறது என்பதுதான் அந்தப் பேரிடி.



வன்னிய சமூகம் ஒரு தற்கொலைச் சமூகமா?



மற்ற சாதிகள் இந்த வன்னிய சாதியை வெட்டி சாய்ப்பது போதாது என்று, தங்களைத் தாங்களே அரசியல்வாதிகள் சேர்ந்து வெட்டிக் கொன்ற வெடடிக் கொண்டு மடிகிறதை வழக்கமாக்கிக் கொண்டிருப்பது இன்று நேற்றல்ல. வரலாற்றுக் காலம் தொட்டுத் தொடரும் பழி இது.



வெள்ளையர்களால் வெட்டி வீழ்த்த முடியாத பாயும் புலி பண்டார வன்னியனின் தலை, காக்கை வன்னியன் காட்டிக் கொடுத்ததால் மண்ணில் சாய்ந்தது என்பது வரலாறு.


*         


இந்தியா சுதந்திரம் பெற்றபின், அரசியல் காரணங்களுக்காக தமிழ்நாட்டில் முதல் முதலாக ரத்தம சிந்தியது உடையார்பாளையம் வேலாயுதம் கொலை மூலம் தான். கொலையுண்ட வேலாயுதம் வன்னியர். அவரைக் கொன்ற கொலைகாரனும் வன்னியனே.


*         


கட்சித் தலைவர் பதவி, பொதுச் செயலாளர் பதவி, பொருளாளர் பதவி, மாவட்டச் செயலாளர் பதவி, முதல் மந்திரி பதவி, மத்திய கேபினட் அமைச்சர் பதவி, மேயர் பதவி எனப் பெரும் பெரும் பதவிகளை எல்லாம் கட்சிகளில் உள்ள சிறுபான்மைச் சாதிகள் ஓசைப்படாமல் கைப்பற்றிக் கொள்கிறார்கள்.



மேற்கண்ட பதவிகளை அனுபவிக்கும் சிறுபான்மைக் கும்பல்களுக்கு முறைவாசல் செய்யும் பதவிகளான வட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர் பதவிகளுக்கு வன்னியர்களை வன்னியர்களையே வெட்டிக் கொண்டு சாவது கேவலமாகவும், அவமானமாகவும் உள்ளது.



சில வருடங்களுக்கு முன்பு சென்னை சூளைமேட்டுப் பகுதியைச் சேர்ந்த பாண்டியன் என்ற வன்னியரை அரசியல் போட்டி காரணமாக குள்ளமணி என்கிற வன்னியன் வெட்டிக் கொன்றான். பாண்டியனின் உறவினர்கள்  சமீபத்தில் அந்த குள்ளமணியை வெட்டிக் கொன்று விட்டார்கள், இப்படி குள்ளமணி உறவினர்களைப் பாண்டியன் உறவினர்களும், பாண்டியனின் உறவினர்களைக் குள்ளமணியின் உறவினர்களும் எனக் கொலைகள் தொடர்ந்தால் அதற்கு முடிவு ஏது?


*         


சேலம் மாவட்டம் நங்கவல்லி பாமக ஒன்றியத் தலைவராக பி.எம். வெங்கடேசன் என்பவர் இருந்தார். அவரை அதிமுக கட்சிக் காரரான முருகன் என்பவர் பஞ்சாயத்து பொதுமேடையில் வைத்து குத்திக் கொன்றிருக்கிறான். இருவரும் தாசகாப்பட்டி என்ற ஒரே ஊர்க்காரர்கள். இருவரும் ஒரே சாதி. வன்னிய சாதிதான்.


*         


செங்கற்பட்டுக்கு அருகில் உள்ள திம்மாவரம் என்ற ஊரைச் சேர்ந்த ஆதிகேசவ நாயகரை ஆதிக்க சாதியைச் சேர்ந்த சாராய வியாபாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சேர்ந்து வெட்டிக் கொன்ற செய்தியையும் கொலை செய்யப்படப் போகிறார் ஆதிகேசவ நாயகர் என்ற மொட்டைக் கடிதம் பற்றியும   அச்சமில்லை இதழில் வெளியிட்டிருந்தோம். அந்த கொலைத் தொடர்பாக குமார் என்ற வன்னியர் ஒருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய செயலாளர்  / ஜெயலலிதா பேரவைச் செயலாளர் போன்ற அற்பமான பதவிகளுக்காக நடந்த இந்த கொலையில் ஒரு வன்னியரின் பங்கும் இருக்கிறது என்பது குமார் என்பவர் கைதானதன் மூலம் தெரிகிறது.



கடந்த  50 ஆண்டுகளில் இப்படி அரசியல் காரணங்களுக்காக வன்னியரை வன்னியரே வெட்டி வீழ்த்திய சில நூறு கொலைகளுக்கு மேலான விபரங்கள் உள்ளன.



அரசியலில் அற்பப் பதவிகளுக்காக வெட்டிக் கொண்டு சாகிற ஒரே சாதி தமிழ்நாட்டிலேயே வன்னிய சாதியாகத்தான் இருக்க முடியும். வேறு சாதியயைச் சேர்ந்த யாரும் அரசியல் காரணங்களுக்காக வெட்டிக் கொண்டு சாவதில்லை என்பதைப் பார்த்தாவது வன்னியர்களுக்கு புத்தி வர  வேண்டாமா?



சமுட்டிக் குப்பம் வல்லம்படுகை கிராமங்கள்


கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டத்தில் உள்ள வல்லம்படுகை கிராமம் பெரியாரின் பகுத்தறிவு தழைத்தோங்கும் கிராமம் என்கிறார்கள். திருவள்ளுவன், தமிழ்க்கடல் என்பன போன்ற பெயர்களே இதை உறுதி செய்வனவாக உள்ளன. இருந்தும் என்ன?



நண்பர்களாக இருந்த திருவள்ளுவன், ராமச்சந்திரன் ஆகியோருக்கிடையில் மோதல் ஏற்படுகிறது. இருவர் தலைமையிலும் இரு குழுக்கள் உருவாகின்றன. இரு குழுக்களுக்கிடையில் பகை வளர்கிறது.



ஒரு நாள் -



திருவள்ளுவன் தலைமையிலான குழு ராமச்சந்திரனின் தலையை வெட்டி வீசுகிறது. திருவள்ளுவன் கைதாகி ஜெயிலில்.



தங்கள் தலைவன் ராமச்சந்திரனைக் கொன்ற பழி தீர்ப்புக்காக திருவள்ளுவன் தம்பியான தமிழ்க்கடலின் தலையை வெட்டி வீசுகிறார்கள், ராமச்சந்திரன் அணியினர்.



அப்படியும் வெறி தீரவில்லை. திருவள்ளுவன் வெளியில் வந்தால் தங்களைத் தீர்த்துக்கட்டி விடுவான் என அஞ்சிய இந்தக் கொலைக்கும்பல், விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு திருவள்ளுவனைப்  பேருந்தில் அழைத்து வரும் சேதியைத் தெரிந்து கொண்டு, பேருந்தை வழிமறித்து திருவள்ளுவனையும், அவனோடு கை விலங்கிடப் பட்டிருந்த இன்னொரு கைதியான சங்கர் என்பவனையும் வெட்டிக் கொல்கிறார்கள்.



விசாரணைக் கைதிகளின் காவலுக்கு வந்த போலீஸ் சுட்டதில், கொலைக் கும்பலில் இருந்த இருவர் குண்டடிபட்டு அங்கேயே இறந்திருக்கிறார்கள்.



இதில் கொலையுண்ட ஆறு பேருமே வன்னியர்கள் என்பதும் ஆறு பேரும்  25 வயதும் நிரம்பாத இளைஞர்கள் என்பதும் நெஞ்சைப் பதற வைக்கிறது.



கடந்த ஒரு வருட காலத்தில் இப்பகுதியில் மேலும் 5 வன்னிய இளைஞர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்களாம். இந்த இளைஞர்களைப் பெற்ற வயிறுகள்

எப்படிப் பற்றி எரியும்?


*         


சமுட்டிக் குப்பம் கிராமம் கடலூர் அருகே உள்ளது. இந்த கிராமத்தில் ஏற்பட்ட பங்காளிச் சண்டையில் மாற்றி மாற்றி  20க்கும் மேற்பட்ட கொலைகள் நடந்திருக்கின்றதாம். கடலூர் சிறையில் இந்த கிராமத்தைச் சேர்ந்த  80 பேர்கள் இருக்கிறார்களாம். பல குடும்பங்கள் இந்த கொலைகளால் ஆண்கள் இல்லாமல் தவிக்கிறதாம். இதில் கொல்லப்பட்ட அனைவரும், கொலை செய்த அனைவரும் வன்னியர்கள்.



அரசியல் தலைவர்கள் இருக்கிறார்கள், சமுதாயத் தலைவர்கள் இருக்கிறார்கள், யாரும் இவர்களைக் கட்டுப்படுத்த முயற்சி செய்யவில்லையா? அல்லது இவர்கள் யாருக்குமே கட்டுப் படாதவர்களா?



தமிழ்நாடு விடுதலைப் படையில் நடப்பது என்ன?


சாதாரண தனி மனிதர்கள்தான் இப்படி அர்த்தமற்று வெட்டி மடிகிறார்கள் என்றால், புரட்சிகர சிந்தனைகளடிப்படையில் தோற்றுவிக் கப்பட்டதாகச் சொல்லப்படுவதும், புரட்சிகர இயக்கம் என வர்ணிக்கப்படுவதுமாகிய தமிழ்நாடு  விடுதலைப்படை அமைப்பு எப்படிச் செயல்படுகிறது என்று பார்த்தால், அங்கேயும் இதே வேதனைதான் மிஞ்சுகிறது. இதில் அவர் தலைமையில் ஒரு குழு; இவர் தலைமையில் ஒரு குழு எனப் பிரிந்து கிடப்பதும், குழுக்கள் ஒன்றை ஒன்று வெட்டிச் சாய்ப்பதும்தான் இந்த தீவிரவாத அமைப்பின் தீவிரச் செயலாக வெளியில் தெரிகிறது.கடந்த ஓராண்டில் மட்டும் இந்த அமைப்பைச் சேர்ந்த பதினேழு பேர்கள் வெட்டிக் கொண்டு என அஞ்சிய இந்தக் கொலைக்கும்பல், மடிந்திருக்கிறார்களாம். இந்த புரட்சியாளர்களிலும் வெட்டுகிறவனும், வெட்டப்படுகிறவனும் வன்னியன் தான் என்ற கொடுமையை யாரிடம் சொல்லி அழுவது?



சாதாரண வன்னிய தனிநபர் குணாம்சம்தான் இந்த அமைப்பின் குணாம்சமாகவும் இருக்கிறது என்பது பெருமைப்படக்கூடிய விஷயமல்ல.



வன்னியர் சங்கத்தின் பெயராலும்



வன்னியர் நலங் காக்க வேண்டிய வன்னியர் சங்கத்தையும் இந்த நோய் விட்டு வைக்கவில்லை என்பதுதான் வன்னிய சமூகத்தின் சாபக்கேடாகும். சமீபத்தில் பாமகவின் வன்னியர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் காடுவெட்டி குரு. குரு வெளியிட்ட முதல் கொள்கைப் பிரகடனமே வன்னியர்களான ஏ.கே.நடராசன், தீரன், வாழப்பாடி ராமமூர்த்தி ஆகிய தலைவர்களின் தலைகளை வெட்டுவேன் என்பதுதான். வன்னியர் சங்கத்திற்கு இந்த அறிவிப்பு அடுத்த கட்ட வளர்ச்சி.



இதற்கு பிறகு மறுப்பு தெரிவித்து விட்டாலும் சமூக செய்தி மடலில் ஏ.கே.நடராசன், தீரன் போன்றவர்களை  நடமாட விடமாட்டேன் என்ற அறிவிப்பு வருகிறது. தலைகளை வெட்டுவேன் என்பதற்கும் வெளியில் நடமாட விடமாட்டேன் என்பதற்கும் அதிக வித்தியாசம் இல்லை. முதல் அறிவிப்பு  RAW ஆனது; அடுத்தது  polish செய்யப்பட்டது.



பாமக தயவினால் பல கோடிகளுக்கு அதிபதியாகி விட்ட தலித் எழில்மலை செய்யாத துரோகத்தையும், அவரது மகள் எழில் கரோலின் செய்யாத அருவருப்பான விமர்சனத்தையும் விடவா மேற்கண்ட வன்னியத் தலைவர்கள் டாக்டர் ராமதாசை செய்துவிடப் போகிறார்கள்?



தலித் எழில்மலையின் துரோகத்தையும்; எழில் கரோலின் விமர்சனத்தையும் சகித்துக் கொண்டு அவர்களைப் பற்றி வாய் திறவாத குரு. வன்னியத் தலைவர்கள் தலை, கைகளை வெட்டுவேன் என்பது என்ன மாதிரியான செயல்?



வன்னியர் என்றால் வன்னியர் சங்கத்திற்கு கூட இளக்காரம் என்ற நிலை இருக்கலாமா?



மேற்கண்டகொள்கைப் பிரகடனத்தினால் குரு மூட்டியிருக்கும் தீயில், எத்தனை வன்னியத் தலைகள் உருளப் போகின்றதோ? எத்தனை வன்னியத் தாய்மார்களின் தாலிகள் அறுபடப் போகின்றதோ?



பண்ணப் பழகடா பச்சைப் படுகொலை என தலித் இளைஞர்களுக்கு வேதம் ஓதி ஓதி வன்னியர் தலைகளுக்கு திருமாவளவன் ஒரு புறம் குறி வைக்கிறார். குரு இன்னொரு புறம் என்றால் வன்னிய சமூகம் எப்படித் தாங்கும்?


*         


வல்லம்படுகைத் திருவள்ளுவன்கள், தமிழர் விடுதலைப் படைத் தலைவர்கள், காடுவெட்டி குருக்கள் போன்ற அகப் பகைகள் கொலை வாளினைத் தூக்கும்போதும்,



வால்டர் தேவாரங்களும், வாண்டையார்களும் திருமாவளன்களும் போன்ற புறப் பகைகள் தலைவெட்டப் புறப்படும் போதும்... நிறுத்துங்கடா என ஆணையிட்டுத் தடுக்கும் சக்தியாக ஒரு தலைமை இல்லையே என்ற ஏக்கம் நெஞ்சில் கணக்கிறது.

-X-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக