புதன், 24 டிசம்பர், 2014

வக்கீல்கள் துணையோடு நடக்கும் மோசடித் திருமணங்கள் செல்லாதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு



வக்கீல்கள் துணையோடு
நடக்கும் மோசடித் திருமணங்கள்
செல்லாதென உயர்நீதிமன்றம் தீர்ப்பு

வக்கீல்கள் அறைகளிலும்; வக்கீல்  சங்க அறைகளிலும் திருமணங்கள் நடந்ததாக போலிச் சான்றிதழ்களை வக்கீல்கள் வழங்குவதும் -

அதை வைத்து பதிவாளர் அலுவலகங்களில் திருமணங்களைப் பதிவு செய்வதும் செல்லாது எனவும்;

சம்பந்தப்பட்ட ஆணும் பெண்ணும் பதிவாளர் அலுவலகத்தில் நேரில் ஆஜராகாமல் திருமணங்களைப் பதிவுசெய்யக் கூடாது எனவும் -

சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

*       

தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பாண்டியன் என்பவரும் -

சென்னையைச் சேர்ந்த ராமபிரசாத் என்பவரும் -

தங்கள் மனைவிகளை அவர்களது பெற்றோர்கள்  சட்ட விரோதமாகக் காவலில் வைத்திருப்பதாகத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்களைத் தனித்தனியாகத் தாக்கல் செய்திருந்தனர். இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி  ராஜேஸ்வரன் நிதிபதி பிரகாஷ் அடங்கிய டிவிஷன் பெஞ்ச்சில் விசாரணைக்கு வந்தது.

இந்த இரண்டு வழக்குகள் தொடர்பான பெண்களும் நீதிமன்றத்திற்கு வந்தனர்.

பாலகிருஷ்ணன் தன் மனைவியாகக் குறிப்பிட்ட பெண்; பாலகிருஷ்ணனை தனக்குத் தெரியும்; ஆனால் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் -

எங்களுக்குத் திருமணம் நடந்ததாக சான்றிதழ் அளித்துள்ள வக்கீலையும் தெரியாது; அவரது அலுவலகமும் தெரியாது என்றும் கூறி மறுத்தார்.

இதேபோல் ராம் பிரசாத் தன் மனைவி எனக் கூறிய பெண்ணும் வக்கீல் கொடுத்திருக்கும் - திருமணச் சான்றிதழ் மோசடியானது அந்த வக்கீலைப் பார்த்ததுமில்லை அவர் அலுவலகத்திற்குச் சென்றதுமில்லை எனவும் மறுத்துள்ளார்.

திருமணச்  சான்றிதழ்கள் இரண்டும் ஒரே வக்கீல் கொடுத்திருப்பதும்; பாரிமுனை அங்கப்ப நாயகன் தெருவில் உள்ள ஒரே முகவரியிலிருந்து வழங்கப்பட்டிருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

மேலும் -

பாலகிருஷ்ணன் அளித்த வழக்கறிஞர் சான்றிதழில் திருமணம் அங்கப்ப  நாயகன் தெருவில்  நடந்ததாகவும்; ஆட்கொணர்வு மனுவில் திருமணம் வடபழநி கோவிலில் நடந்ததாகவும் குறிப்பிடப் பட்டிருப்பதும் நீதிபதிகளுக்குச்  சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

எனவே - இந்த மனுக்கள் குறித்தும்; இதுபோன்று வக்கீல்கள்  நடத்தி வைத்ததாக கூறும் இதர திருமணங்கள்   குறித்தும் விசாரித்து அறிக்கை தரும்படி சி.பி.சி.ஐ.டி எஸ்.பி.யான ஜெயகெளரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எஸ்.பி.ஜெயகெளரி விசாரித்து அளித்துள்ள அறிக்கை வக்கீல்களின் மோசடிகளையும்; திருமணப் பதிவாளர்களின் மோசடிகளையும் அம்பலப்படுத்தி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

சென்னை ராயபுரம் சார் பதிவாளர் அலுவலகம்; சென்னை வடக்கு இணை சார்பதிவாளர் அலுவலகம் ஆகிய இரு பதிவாளர் அலுவலகங்களில் 2013 ஆண்டு மட்டும் 3500 க்கும் மேற்பட்ட திருமணங்கள் வக்கீல்கள் சான்றிதழ்களை வைத்துப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

மணமக்களை நேரில் அழைத்து வராமல் தங்கள் சான்றிதழை வைத்து திருமணங்களைப் பதிவு செய்ய வேண்டுமென வழக்கறிஞர்கள் கும்பலாகப் போய் ஒரு சார்பதிவாளரை மிரட்டும் காட்சி சி.சி.டிவி கேமராவில் பதிவு செய்திருப்பதையும் தனது அறிக்கையில் ஜெயகெளரி குறிப்பிட்டுள்ளார்.

சென்னை வழக்கறிஞர் நரசிம்மன்
 - 676 திருமணங்களையும்
சென்னை வழக்கறிஞர் நீல நாராயணன்
- 382 திருமணங்களையும்
சென்னை வழக்கறிஞர் அதிதம்
- 318 திருமணங்களையும்
சென்னை வழக்கறிஞர் எஸ்.வெங்கடேசன்
- 277 திருமணங்களையும்
சென்னை வழக்கறிஞர் அலமேலு
- 269 திருமணங்களையும்
நடத்தி வைத்திருக்கிறார்கள்.

பிரபலமான கோவில்களில் புரோகிதர்கள் நடத்தி வைத்த திருமணங்களை விட இது அதிகம் என்கிறார் ஒரு பிரபல வழக்கறிஞர்.

இது பற்றி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பால் கனகராஜ் நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டபோது சுயமரியாதைத் திருமணச்  சட்டத்தில், மரியாதைக்குரிய ஒரு நபரின் முன் திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டுள்ளதைப் பயன்படுத்தியே -

வழக்கறிஞர்கள் இத்தகைய திருமணங்களை செய்து வைத்திருக்கிறார்கள். எனினும் நீதிமன்றம் பிறப்பிக்கும் உத்தரவை ஏற்பதாகவும் -

இது போன்ற திருமணங்களுக்கு வழக்கறிஞர் சங்கத்தின் பெயரையோ; அலுவலகத்தையோ பயன்படுத்தினால் விசாரித்து அந்த வழக்கறிஞர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதாகவும் -

பொதுவாகவே பதிவுத் திருமணங்களானாலும்; காதல் திருமணங்களானாலும் பெற்றோர்களின் ஒப்புதலோடு நடக்க வேண்டும் எனத் தெரிவித்ததாகவும் கூறியுள்ளார்.

இவைகளை எல்லாம் பார்த்த பிறகே -

வக்கீல் சான்றிதழ் அடிப்படையில் பதிவு செய்த திருமணங்கள் செல்லாதென நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர்.

இது போன்ற திருமணங்கள் சென்னையில் மட்டுமல்ல - மாவட்டத் தலைநகரங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களிலும் ஏராளமாக நடந்து வருகின்றன. உதாரணமாக கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் இத்தகைய திருமணங்கள் தினந்தோறும நூற்றுக்கணக்கில் நடைபெறுகின்றன.

இவைகள் எல்லாம் குறித்து விரிவாக விசாரணை நடத்தி இவைகளுக்கு தீர்வாகும் தீர்ப்பினை உயர்நீதிமன்றம் வழங்க வேண்டும். இந்தத் திருமணங்கள் செல்லாதென அறிவித்தது வரவேற்கத் தக்கது; ஓரளவு மோசடித் திருமணங்களைக் குறைக்கும் என்றாலும் -

இது போதாது என்பதும்; இத்தகைய போலிச் சான்றிதழ் கொடுத்து திருமணங்களை நடத்தும் வழக்கறிஞர்கள் மீது கிரிமினல் வழக்குகள் தொடர்ந்து தண்டிக்கப்படவும் வேண்டும் என்பதும் அவசியமான ஒன்றாகும்.

வழக்கறிஞர்கள் முன் நடக்கும் திருமணங்கள் சட்டத்தின் ஒப்புதலோடு நடக்கும் திருமணம் என்ற பாமர நம்பிக்கையும் இத்தகைய திருமணங்கள் இவ்வளவு பேரளவில் நடந்திருப்பதற்கான காரணமாகும்.

போலித் திருமணங்களை நடத்தும் வழக்கறிஞர்கள் தண்டிக்கப்பட்டால் தான் மக்களிடம் உள்ள மேற்கண்டி பாமரத்தனமான நம்பிக்கை ஒழியும்.

வழக்கறிஞர்களின் மோசடிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டும் தீர்ப்பும் அவசியமாகும்.

சமீபகாலமாக கிரிமினல் குற்றங்களில் ஈடுபடுவது வக்கீல்களின் பிறப்புரிமை என்றாகி வருகிறது.

1 கருத்து: