வெள்ளி, 31 அக்டோபர், 2014

[4] ஏன் வேண்டும் வடதமிழ்நாடு - நதிநீர் சிக்கல்களுக்குக் காமராசரே காரணம்.

தெலங்கானாவுக்குப் பெரும்பகுதியும் உரிமையுடையதாக இருந்தும், கிருஷ்ணா நதிநீரும், கோதாவரி நதிநீரும், தெலங்கானாவுக்குப் பயன்படாமல் செய்து., எப்படி எல்லாம் தெலங்கானாவை வறண்ட பூமியாக்கினார்களோ  அதுபோலவே -


வடதமிழ்நாட்டிற்கு உரிமையுடையதாக இருக்கும் காவிரியும் பாலாறும் வடதமிழ்நாட்டிற்கு பயன்படாமல் போகும்படி, இந்த நதிகளின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை, நமது தலைவர்கள் எவ்வாறெல்லாம் காவு கொடுத்தார்கள் என்பதை விரிவாகக் காண்போம்.

வெள்ளைக்காரன் ஆண்ட காலத்தில், இந்த இரண்டு நதிகளிலும் தமிழ்நாட்டிற்கு உரிய உரிமைகளைப் போராடிக் காத்து வந்தார்கள்.

சுதந்திரம் வந்தது. தமிழ்நாட்டுக்கான இந்த நதிநீர் உரிமைகளைக் காக்க வேண்டும் என்ற எண்ணமோ  பொறுப்போ இல்லாதவர்கள் முதல்வர்களானார்கள்.

இதன் காரணமாக, வெள்ளையன் ஆண்டபோது ஜீவநதியாக இருந்த இவ்விரு நதிகளும், இன்று கானல் நீரோடும் மணல் ஓடைகளாகி வறண்டு வருகின்றன.

இதற்கு -

தமிழகத்தை ஆண்ட முதல்வர்கள் அனைவருமே காரணம் என்றாலும் - முக்கியக் காரணம் காமராசரும் கருணாநிதியும்தான்.

தமிழ்நாட்டின் இன்றைய நதி நீர்ச் சிக்கல்கள் அனைத்திற்கும் முழுமுதல் காரணம் காமராசர்.

மொழிவழி மாநிலங்கள் 1956இல் ஏற்படுத்தப்பட்டன. அப்போது தமிழ்நாட்டின் முதல்வராக இருந்தவர் காமராசர்.

காவிரி உற்பத்தியாகிற குடகு மாவட்டம், கூர்க் மொழியைப் பேசுகிற ஒரு தனிப்பகுதியாகும். அது கன்னடம் பேசுகிற கர்நாடகப் பகுதியல்ல.

மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது கூர்க் மாவட்ட மக்களும் அப்பகுதித் தலைவர்களும், அப்போது இந்தியத் தலைவர்களாக இருந்த கூர்க்  இனத்தைச் சேர்ந்த ஜெனரல் கரியப்பாவும், ஜெனரல் திம்மையாவும், குடகு மாவட்டத்தைத்  தமிழ்நாட்டோடு இணைக்க வேண்டும் அல்லது மத்திய ஆட்சிப் பகுதியாக்க வேண்டும் என்று போராடினார்கள். இப்போதும் கூர்க் இன மக்கள் தங்களுக்கான தனி மாநிலப் கோரிக்கையை எழுப்பிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

கர்நாடகா தலைவர்கள் எவரும் கூர்க் மாவட்டம் தங்கள் மாநிலத்தோடுதான் இருக்க வேண்டும் என்று அப்போது கேட்கவும் இல்லை.

இந்த நிலையில், தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த காமராசர், தொலைநோக்குப் பார்வையோடு கூர்க் மக்களின் கோரிக்கையை ஏற்று அதைத் தமிழ்நாட்டோடு சேர்க்க வேண்டும் என்று ஒரே ஒரு வார்த்தை சொல்லி இருந்தால், அப்போது மத்திய அரசில் அவருக்கிருந்த செல்வாக்கால். குடகு மாவட்டம் எந்தவிதத் தடையுமில்லாமல் தமிழ்நாட்டோடு சேர்ந்திருக்கும், குடகு மக்களது கோரிக்கையும்; இனிதாக நிறைவேறி இருக்கும்.
[ ந.இறைவன் ]

காமராசருக்கு ஒரு தமிழினத் தலைவருக்குரிய தொலைநோக்குப் பார்வை இல்லாததாலோ-

காவிரி இருந்தால் அது வடதமிழ் நாட்டிற்குத்தானே பயன்படும் அதனால்  தென்தமிழ்நாட்டு நாடார்களுக்கு என்ன பயன்  என்று கருதியதாலோ,

தமிழ்நாட்டோடு சேர வேண்டும் என்ற கூர்க் மக்களின் கோரிக்கையை ஆதரிக்க மறுத்தார். கூர்க்  இன மக்கள் வாழும் குடகுப் பகுதி கர்நாடகாவுடன் சேர்க்கப்பட்டது. காவிரியைக் கர்நாடகக்காரன்  தனக்கே உரியதெனச் சொந்தம் கொண்டாட இது காரணமாகிவிட்டது.

காவிரி தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று இப்போது கன்னடத்துக்காரன் குதிக்கின்ற நிலை  ஏற்பட்டிருப்பதற்கு காமராசரே காரணம். எனவே, காவிரி நதிநீர்ச் சிக்கலுக்குக் காமராசரே முழுமுதல் காரணம்.

இது மட்டுமல்ல, இன்று கர்நாடகாவில் உள்ள  கோலார், கொள்ளேகால், பெங்களூர் உள்ளிட்ட தமிழர்கள் பெருமளவில் உள்ள தமிழ் பேசும் பகுதிகளையும், கர்நாடகாவுக்குத் தாரை வார்த்துக் கொடுத்தவரும் காமராசர்தான்.

தமிழகப் பகுதியான திருப்பதி, திருக்காளத்தி  உள்ளடக்கிய சித்தூர் மாவட்டத்தை, தமிழ்  நாட்டோடு சேர்க்க வேண்டுமென சிலம்புச் செல்வர் ம.பொ.சி., தளபதி விநாயகம் போன்றோர் போராடியபோது தமிழகத்தின் முதல்வராக இருந்தவர் காமராசர். இவர் மேற்கண்ட தமிழ்ப் பகுதிகளை ஆந்திராவிற்கு விட்டுக் கொடுக்க முடியாதெனப் போராடியிருந்தால். பாலாற்றிலும் பொன்னையாற்றிலும் இன்று ஏற்பட்டிருக்கும் நதிநீர்ச்சிக்கல், ஏற்பட வாய்ப்பே இல்லை.

முல்லைப் பெரியாறு நீர்த்தேக்கம் உள்ள தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை, நெடுமாங்காடு, கொச்சின், சித்தூர், உடும்பன்சோலை உள்ளிட்ட தமிழ்பேசும் பகுதிகளைக் கேரளாவோடு சேர்க்கக் கூடாதென அப்பகுதி மக்கள் போராடினார்கள். காமராசரோ, குளமாவது மேடாவது.. எனக் குதர்க்கம் பேசி இப்பகுதிகளைக் கேரளாவுக்குக் காவு கொடுத்தார். அதன் விளைவு, இன்றைக்கு முல்லைப் பெரியாறு நீர்த்தேக்க சிக்கல் தீராத சிக்கலாகிவிட்டது.

காமராசர் ஏன் இப்படிச் செய்தார்?

ஆந்திராவில் முதல்வராக இருந்த நீலம் சஞ்சீவி ரெட்டி, கர்நாடகத்தில் முதல்வராக இருந்த தாசப்பா, கேரளாவில் முதல்வராக இருந்த பனம்பள்ளி கோவிந்த மேனன் ஆகியோரிடம் நட்போடு இருந்ததால்  தென்னிந்தியாவில் தன் செல்வாக்குப் பெருகி, மத்திய அரசிலும், காங்கிரஸ் கட்சியிலும் வலுவான தலைவராக இருக்க முடியும் என்பதற்காக, தமிழக எல்லையோரத் தமிழ்ப் பகுதிகளை ஆந்திராவுக்கும் கர்நாடகாவுக்கும் கேரளாவுக்கும் காவு கொடுத்தார் காமராசர். தமிழ்நாட்டிற்கும் தமிழர்களுக்கும் காமராசர் செய்த மிகப் பெரிய துரோகம் இது.

இப்படி, எண்ணற்ற தமிழக எல்லைப் பகுதிகளை அண்டை மாநிலங்களுக்குக் காவு கொடுத்த காமராசர், நாடார்கள் அடர்ந்து வாழும் கன்னியாகுமரி மாவட்டத்தை மட்டும், கேரளத்திலுருந்து தமிழ்நாட்டோடு சேர்ப்பதில் குறியாக இருந்து வெற்றி பெற்றார். இது மறுக்க முடியாத வரலாற்றுப் பதிவு.

இந்தியா சுதந்திரம் அடைந்த கையோடு, கர்நாடக ஆட்சியாளர்கள், கர்நாடகப் பகுதியில் பாலாற்றின் இருபக்கமும், பெரிய பெரிய ஏரிகளை வெட்டி பாலாற்றின் நீரை முழுவதுமாகத் தடுக்க ஆரம்பித்தனர்.

இந்த அபாயத்தை உணர்ந்த வேலூர் மற்றும் செங்கற்பட்டு விவசாயிகள், 1954இல் வேலூரில் மாநாடு கூட்டி, கர்நாடகாவின் இந்த அத்துமீறலைத் தடுக்க வேண்டுமென்று தீர்மானம் நிறைவேற்றி முதல்வர் காமராசரை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்தார்கள்.

வேலூர் செங்கற்பட்டு விவசாயிகளின் இந்த அபாய அறிவிப்பும், கர்நாடகாவின் அத்துமீறலைத் தடுக்க வேண்டுமென்ற கோரிக்கையும், செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனதே தவிர, தடுப்பு நடவடிக்கை எதையும் தமிழக முதல்வரான காமராசர் எடுக்கவே இல்லை.

இதன் காரணமாக  தமிழகம் - வேலியில்லாத பூமி என்பது கர்நாடகாக்காரனுக்குப் புரிந்து போனது இதன்பிறகு துணிந்து தன் எல்லையில், பாலாறு ஓடும் 90 கி.மீ. தூரம் முழுவதும் பெரிய பெரிய ஏரிகளை  வெட்டி, பாலாற்று நீரைத் தன்னிஷ்டம் போல் தேக்கி வைத்துக் கொள்ள ஆரம்பித்தது கர்நாடகம். ஜீவநதியாக இருந்த பாலாறு, மணலாறாகிப் போனது. முப்போகமும் விளைந்து வளங்கொழிக்கும் பகுதியாக இருந்த பாலாற்றுக் கரையோர கிராமங்கள் - இன்று சீமைக் கருவேல முட்கள் வளரும் காடாகிப் போனது.

காமராசர், நாடார் என்ற உணர்வோடு இருந்தார். கன்னியாகுமரி பகுதியைத் தமிழ்நாட்டோடு  இணைத்தார்.

அண்டை மாநிலங்களான கேரளாவும், கர்நாடகாவும், ஆந்திராவும் தமிழர் பகுதிகளைக் காவு கொண்டதைத் தடுக்காமல், கைகட்டி வாய் பொத்தி காமராசர் நின்றதற்குக் காரணம் அவர் தான் ஒரு தமிழன் என்ற உணர்வோடு இல்லாமல் போனதே.

ஈ.வெ.ரா கொடுத்த பச்சைத் தமிழர் பட்டத்தில் மட்டுமே அவர் தமிழராக இருந்தார். அவர் தேசியத்தலைவராக இருந்தார் என்பது சந்தேகத்திற்கு அப்பாற்பட்டது என்பதால், அதற்கு ஆதாரம் காட்ட வேண்டிய அவசியமில்லை.

நாடார் என்ற உணர்வோடு இருந்ததைப் போல, இந்தியத் தேசியவாதி என்ற உணர்வோடு இருந்ததைப் போல, தான் ஒரு தமிழன் என்ற உணர்வோடு அவர் இல்லாமல் போனதன் காரணமாக தமிழகம், அதிலும் குறிப்பாக வடதமிழ்நாடு நிறையவே பாதிப்புகளை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

அவர் தான் ஒரு தமிழன் என்ற உணர்வோடு அன்று செயல்பட்டிருந்தால், இன்று தமிழகத்தின் வரலாறே
வேறாகி இருந்திருக்கும்.


செவ்வாய், 28 அக்டோபர், 2014

தெலங்கானா தனி மாநிலம் தமிழ்நாட்டுக்குப் பாடம்


தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களை முன்னேற்றுவதற்குப் போதிய அளவு நிதியை அரசு ஒதுக்குகிறது. 

தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டங்களாக இருக்கிற -
திருவண்ணாமலை
கடலூர்
விழுப்புரம்
பெரம்பலூர்
தருமபுரி
அரியலூர்
ஆகிய வடதமிழ்நாட்டில் உள்ள வடமாவட்டங்களை தொடர்ந்து புறக்கணிக்கின்றன தமிழக அரசுகள்.

தெலங்கானா பிரிவினைக்கு பண்பாடு; மொழி ஆகியவற்றை விட தெலங்கானாவின் பின்தங்கிய நிலையும் முன்னேற்றம் என்பதே இல்லாத புறக்கணிப்புமே காரணம்.

தமிழ்நாட்டிலும் 

வடதமிழ்நாட்டில் உள்ள  6 மாவட்டங்களை தமிழ்நாட்டின் எல்லா அரசுகளும் புறக்கணித்தே வந்துள்ளன. தமிழ்நாட்டில் மாநிலப் பிரிவினைக் கோரிக்கை இல்லை என்றாலும் ‡ வடக்கு மாவட்டங்களுக்கும் தெற்கு மாவட்டங்களுக்கும்
இடையிலான ஏற்றத் தாழ்வுகள் தொடர்வது தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என்கிறார்கள் வல்லுநர்கள்.

திருவண்ணாமலை; கடலூர்; விழுப்புரம்; பெரம்பலூர்; அரியலூர்; தருமபுரி மாவட்டங்கள் நிலையை முன்னேறிய மற்ற மாவட்டங்களோடு ஒப்பிட்டால் இந்த மாவட்டங்கள் முன்னேறிய மாவட்டங்களின் பின்னால் நொண்டி அடித்துக்கொண்டுதான் கிடக்கின்றன.

தருமபுரியில் கல்வியறிவு  68.5 சதவீதமாக இருக்கின்றது. எல்லா மாவட்டங்களை விடவும் இதுதான் கடைசியில் இருக்கின்றது என்கிறது புள்ளி விபரம்.

அரசு தென் மாவட்டங்கள் முன்னேற்றத்திற்கு மிக நன்றாகவே உதவுகிறது ‡ ஆனால் வடமாவட்டங்களை ஏறத்தாழ புறக்கணித்து ஒதுக்கித் தள்ளி விடுகின்றது. பாட்டாளி மக்கள் கட்சி வலுவாக உள்ள இந்த பின்தங்கிய மாவட்டங்களின் முன்னேற்றத்திற்கோ இந்த மாவட்டங்களின் தனி மாநில நிலைக்கோ பாட்டாளி மக்கள் கட்சி அரசின் கவனத்தை ஈர்க்கும் கோரிக்கை
எதுவுமற்று இருக்கிறது.


மிகவும் பின்தங்கிய இந்த மாவட்டங்கள் கல்வி அறிவிலும் இதர முன்னேற்றங்களிலும் பின்தங்கி இருந்தாலும் ‡ மது விற்பனையில் மட்டும் முன்னிலை வகிக்கின்றன.

இந்த மாவட்டங்கள் ‡சுய முன்னேற்றத்திற்கு வழி ஏதுமில்லை.

 அதிக அளவில் பள்ளிகள்; கல்லூரிகள்; ஆரம்ப சுகாதார நிலையங்கள்; அரசு மருத்துவமனைகள் ஆகியவற்றை அரசே ஏற்படுத்தி இப்பகுதி மக்கள் முன்னேற்றத்திற்கு உதவி புரிய வேண்டும். அப்போதுதான் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும் என்கிறார் சென்னைப் பல்லைக் கழக பொருளாதார வல்லுநரான ஆர்.சீனிவாசன்.

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

பாமகவுக்கு ஒரு நியாயம்; அதிமுகவுக்கு ஒரு நியாயமா?

மரக்காணம் கலவரத்தைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தச் சென்ற டாக்டர் இராமதாசை கைது செய்து சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. இதனைக் கண்டித்து பாமகவினர் போராட்டம் நடத்தினர்.

18 ஆண்டு காலம் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை நடத்தி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் காரணமாக தண்டனை பெற்று கைதாகி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் ஜெயலலிதா. இதனைக் கண்டித்து அதிமுகவினர் போராட்டம் செய்கிறார்கள்.

இரண்டும் ஒன்றல்ல.
 
முன்னது ஜனநாயகம் அனுமதித்துள்ள நடைமுறை.
பின்னது நீதிமன்றத்தை அவமதிக்கும் நடவடிக்கை.



இராமதாசின் கைது, ஜெயலலிதாவின் விருப்பு வெறுப்பை அடிப்படையாகக் கொண்டது.
ஜெயலலிதா கைது சட்டப்படியான தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டது.

இராமதாஸ் கைது தொடர்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்களை ஜெயலலிதா அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்தது ‡கலவரத்தில் ஏற்பட்ட இழப்பை பாமகவினரிடமிருந்து வசூலிக்க வேண்டுமெனக் கூறி பாதிக்கப்பட்ட அரசு நிறுவனங்கள் வருவாய்த் துறை ஆணையரிடம் இழப்பீடு குறித்து விண்ணப்பிக்க வேண்டுமென ஜெயலலிதா அரசு வேண்டுகோள் விடுத்தது.

ஜனநாயக நடைமுறைப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவரை கைது செய்ததைக் கண்டித்து செய்யப்பட்ட போராட்டத்திற்கு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது. இழப்பீடுகளை பாமகவினரிடமிருந்து வசூலிக்க வேண்டுமென அரசு உத்தரவு என்றால் ‡நீதிமன்றம் மூலம் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஜெயலலிதாவுக்காக போராட்டம் நடத்தியவர்களை எத்தனை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வது?

அவர்கள் கலவரத்தால் எரிக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் தொடர்பாக ஏற்பட்ட இழப்பினை அதிமுகவினரிடமிருந்து வசூலிக்க ஜெயலலிதாவின் பினாமி அரசு எப்போது உத்தரவிடப் போகிறது?



ஜெயலலிதாவைவிட ஊழலில் திளைத்த கருணாநிதி குடும்பத்தினர் கைதாகவில்லையே ‡ சிறையில் அடைக்கப்பட வில்லையே என்ற ஆதங்கம் அதிமுகவினருக்கு இருப்பது நியாயமானதே. ஆனால் ‡கருணாநிதி மீதான குற்றங்கள் ஒன்று கூட இதுவரை நிரூபிக்கப்படவில்லையே?

காலம் வரும் அவரது ஊழலும் தண்டணைக்குள்ளாகும். இதைக் காரணமாக வைத்து ஜெயலலிதா புனிதமானவர் எனக்கலவரம் செய்வது கண்டிக்கத்தக்கது.