சனி, 15 பிப்ரவரி, 2014

“அறிவுசார் அரசியல் அரங்கம்”

இணையதள வன்னியர்களின் கலந்துரையாடல் கூட்டம் “அறிவுசார் அரசியல் அரங்கம்” என்ற பெயரில் 18.8.2013 அன்று புதுவையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அச்சமில்லை ந.இறைவன், டாக்டர் விமுனாமூர்த்தி, தர்மபுரி டாக்டர் செந்தில், பொங்கலூர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் எந்த ஒரு சாதியும் தனித்தே வெல்வது இயலாது!

இணையதள வன்னியர் கலந்துரையாடலில் டாக்டர் விமுனாமூர்த்தி பேச்சு

அரசியலில் அறிவுக்கூர்மை என்கிற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ள வலைத்தள நண்பர்கள் குழுவினரே!

நூற்றுக்கணக்கில் கூடியுள்ள இளைஞர்களே, தோழர்களே, எனக்கு முன் இங்கு உரையாற்றி அமர்ந்திருக்கின்ற நாடாளுமன்ற மேநாள் உறுப்பினர் டாக்டர் செந்தில் அவர்களே! அச்சமில்லை இதழின் ஆசிரியர் இறைவன் அவர்களே! வருகை புரிந்திருக்கிற பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கப் பொறுப்பாளர்களே. உங்கள் அனைவருக்கும் என் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிகழ்வில் உங்களிடம் உரையாற்றுவதற்கு முன் நான் என்னை அறிமுகப் படுத்திக் கொள்ள விரும்புகிறேன். கதிரியல் மருத்துவத்தில் பட்டயப் படிப்பு முடித்த நான் மருத்துவமும், சமூக நீதியும் கலந்த பொதுப்பணியை ஆற்றிக் கொண்டிருப்பவன்.

டாக்டர். இராமதாஸ் அவர்களோடு கடந்த இருபத்தைந்து ஆண்டு காலமாக நட்போடு இருப்பவன்.

1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் ஒரே இரவில் ஒரே நெடுஞ்சாலையில் துப்பாக்கிச் சூட்டில் பதினோரு பேர்களையும், அடுத்தடுத்த நாட்களில் இன்னும் பதினான்கு பேரையும் இழந்து வீரகாவியம் படைத்த இட ஒதுக்கீட்டுக்கான ஏழு நாட்கள் சாலை மறியல் முடிந்த சில நாட்களில் திண்டிவனத்தில் முதன் முறையாக டாக்டர் இராமதாசைச் சந்தித்தேன்.

இட ஒதுக்கீட்டுப் போரில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்திட வேண்டும் என்கிற வேண்டு கோளோடு என் பங்கு இதோ என இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தேன். அதை அவர் வாங்கிக் கொள்ள மறுத்து, எனக்கும் அந்த எண்ணம் இருக்கிறது, செயல்படுத்த வேண்டி உங்கள் ஊருக்கே சிலரை அனுப்ப உள்ளேன். அப்போது தாருங்கள் என்று கேட்டுக் கொண்டார்.

சாலை மறியல் போராட்டத்தில் பிற சமூகத்தினருக்கும் உயிரிழப்பு ஏற்பட்டதாகச் சொல்கிறார்களே என்று என் ஐயத்தை வெளியிட்டேன். சாலை மறியலால் பிற சமூகத்தினர் யாரும் உயிரிழக்கவில்லை,

விக்கிரவாண்டியில் பால் வியாபாரம் செய்த யாதவர் ஒருவர் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதாலும், கண்டரக்கோட்டையில் பத்தர் ஒருவரை முன்விரோதம் காரணமாக தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் நிகழ்த்திய கத்திக்குத்தாலும் உயிரிழப்பு நேர்ந்துள்ளது என்று விளக்கமளித்தார்.


பிறகு சில மாதங்களில் பாட்டாளி மக்கள் கட்சி உருவாக்கம் பெறத் தொடங்கியது.

சாதிச் சங்கங்களால் போராட மட்டுமே முடியும். தனிச் சாதியாக ஆட்சிக் கட்டிலில் அமர முடியாது. அதற்குப் பிற சமூக மக்களின் ஆதரவும் தேவை என்பதை நன்கு உணர்ந்தே பாட்டாளி மக்கள் கட்சியை டாக்டர் இராமதாஸ் அவர்கள் நிறுவினார். பிற்பட்டோர், மிகப் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மைச் சமூக உழைக்கும் மக்களின் கூட்டமைப்பாகத்தான் பாட்டாளி மக்கள் கட்சி வடிவம் பெற்றது.

டாக்டர் இராமதாஸ் அவர்கள் மேற்கொண்ட நல்ல முயற்சிகளுக்கெல்லாம் நான் என்னால் இயன்ற ஒத்துழைப்பைத தந்ததின் காரணமாக எங்கள் நட்பு தொடர்ந்தது. அவருடைய எண்ணத்தில் மலர்ந்து அனைவரையும் வியந்திட வைத்த தமிழர் வாழ்வுரிமை மாநாடும், ஈழத் தமிழர் பாதுகாப்புப் பேரணி - மாநாடும் என்னால் மறக்க முடியாதவை.

மிக வலிமையான அரசியல் கட்சியாக வளர்ச்சி பெற்று சமூகநீதியின் அடையாளமாக விளங்கிய பாட்டாளி மக்கள் கட்சி இன்று எல்லோராலும் ஏளனம் செய்யப்படுகிற நிலை எதனால் வந்தது? இதை எண்ணிப் பார்த்து விடை காணும் ஆர்வத்தோடும், கோபத்தோடும்தான் இங்கே குழுமி இருக்கிறீர்கள். எனவேதான் உங்களோடு சில கருத்துகளைப்; பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

தர்மபுரியில் நடந்த ஒரு சம்பவம் பல கட்சிகளாலும், ஊடகங்களாலும் மிகைப்படுத்தப் பட்டு வன்னியர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இழிவுவடுத்தப் படுகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சி தனிமைப் படுத்தப்படுகிறது.

இரு ஒரு பெரும் அநீதி. ஆளும் கட்சியாலும், பிற ஆட்கள் இல்லாத கட்சிகளாலும் திட்டமிட்டுச் செய்யப்படுகிற சூழ்ச்சிதான் இது. தென்தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வடதமிழ்நாட்டிலும் சாதிக்கலவரம் நடக்கத்தான் செய்கிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்தித் தன் தென்தமிழ்நாட்டு வாக்கு வங்கியைப் பெருமைப் படுத்தவும், இழப்பீடு தந்து தன் வட தமிழ்நாட்டு தலித் வாக்கு வங்கியைப் பெருக்கிக் கொள்ளவும் செய்யப்பட்ட ஏற்பாடுதான் தர்மபுரி கலவரம்.

முன்னூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிக்கப்பட்டதாகக் கூச்சலிட்டார்கள். நாயக்கன் கொட்டாயிலும், கொண்டம் பட்டியிலும் ஏது குடிசைகள்? எல்லாமே செங்கற்களாலும் ஓடுகளாலும் கட்டப்பட்ட வீடுகள்தானே அங்கே உள்ளன? வன்முறை பெருமளவில் நடந்ததாய்ச் சொன்னார்களே, அதைத் தடுத்திட ஒரு தடியடி உண்டா? கண்ணீர்ப் புகை வீச்சு உண்டா? காவல்துறை ஏன் வேடிக்கைப் பார்த்தது? தாழ்த்தப் பட்டவர்கள் எவருக்காவது சிறு காயமாவது ஏற்பட்டதா? இவற்றையயல்லாம் ஊடகங்கள் வெளிப்படுத்தவில்லை. அச்சமில்லை இதழும் நெற்றிக்கண் என்கிற வார ஏடும்தான் உண்மை நிலையை எடுத்துரைத்தன.

திவ்யாவின் தந்தை நாகராஜனுக்கு ஏற்பட்ட தவிப்பு இன்று திரைப்பட இயக்குநர் சேரனுக்கு ஏற்பட்டுள்ளது. சேரனின் மகள் தாமினி விசாரிக்கப்பட்டு பெண்கள் காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட காவல்துறையின் அணுகுமுறையை டாக்டர் இராமதாஸ் அவர்களும் பாராட்டி உள்ளார். சேரனுக்கு ஆதரவாய் இன்றைக்குத் திரையுலகமே திரண்டு வருகிறது.

ஆனால், சேரனைப் போன்றே மன உளைச்சலுக்கு ஆளாகி காவல்துறை உதவி ஆய்வாளரின் ஏளனத்துக்கும் கடுஞ் சொல்லுக்கும் உட்படுத்தப் பட்டுத் தற்கொலை செய்து கொண்ட நாகராஜனையோ அவரது குடும்பத்தையோ ஆதரிக்க எவரும் உடனடியாக முன்வரவில்லை.

அச்சமில்லை ஆசிரியர் இறைவன் அவர்கள்தான் திவ்யாவின் தாயையும் தம்பியையும் சேலத்துக்கு வரவழைத்து அவர்களுக்கு ஆதரவாக நாங்கள் இருக்கிறோம் என்று ஆறுதல் சொல்லி வேலி அறக்கட்டளையின் சார்பாக ஒரு இலட்சம் ரூபாய் பணமும் வழங்கியுள்ளார்.

காதல் என்பது செய்யப்படுவது அல்ல. அது ஒரு மலரைப் போல முகிழ்ப்பது. அப்படி இருவர் மனமொத்து தங்கள் விருப்பத்தைப் பெற்றோர்களிடம் தெரிவித்து அவர்களின் சம்மதத்துக்காக காத்திருக்கும் காதலை யாரும் எதிர்க்கவில்லை. காதல் செய்வீர், சாதியை ஒழிப்பீர்! என்ற புதிய முழக்கம் ஓர் அமைப்பால் முன் வைக்கப்படுகிறது. காதல் என்ன சட்டியா, பானையா செய்வதற்கு?

அத்து மீறு என்று அரசியல் தலைவர் ஒருவர் முழக்கமிடுகிறார். கூடவே, திமிறி எழு, திருப்பி அடி என்கிறார்.

அத்து மீறு என்கிற கருத்தைத் தந்தவர் செஞ்சீனப் புரட்சியாளர் மாசேதுங் ஆவார். ஒரு தவறைச் சரி செய்ய வேண்டும் என்றால் உரிய எல்லைகள் மீறப்பட வேண்டும்.. இல்லையயன்றால் தவறைச் சரி செய்ய முடியாது proper limits have to be exceeded in order right a wrong, or else wrong can not be right என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார் மாசேதுங்.

எதற்கெல்லாம் அத்துமீறுவது என்பதில் தெளிவு வேண்டாமா? அடுத்த வீட்டுப் பெண்ணைக் கடத்திக் கொண்டு போவதற்கா அத்துமீறல் வழிமுறையைக் கடைபிடிப்பது? வன்னியர்களில் உள்ள பெரும்பான்மை மக்களைப் போலவே தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் உடைமைச் சாதியாக இல்லாமல் உழைப்புச் சாதியாகவே உள்ளனர்.

அவர்களைத் தவறான திசையில் வழிநடத்தி அவர்களின் படிப்படியான முன்னேற்றத்தைப் பாழ்படுத்தி விடக்கூடாது.

அரசியலில் அறிவுக் கூர்மை பற்றி விளக்கும்போது தோழர் கணேஷ் அவர்கள் சில குறிப்புகளைத் திரையில் காட்டி மிகச் சிறப்பாகத் தெளிவுபடுத்தினார். எவரோடும் எந்தப் பிரிவினரும் பகைமை பாராட்டக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்தார். அவரது முயற்சியை நான் பாராட்டுகிறேன். அறிவுக் கூர்மையை அரசியலில் செலுத்திட ஆர்வம் கொண்டுள்ள நீங்கள் காரல் மார்க்சைப் படிக்க வேண்டும்;

தந்தைப் பெரியாரைப் படிக்க வேண்டும்; அண்ணல் அம்பேத்காரைப் படிக்க வேண்டும்; அப்போதுதான் அரசியலில் வெற்றி பெறுவதற்கான வழிகளைக் கண்டறிய முடியும்.

இரண்டு கோடி, இரண்டரை கோடி பேர் வன்னியர்கள் இருக்கிறோம் என்று பெருமைப்பட்டுக் கொள்வதில் எந்தப் பயனும் இல்லை. ஒன்றை நீங்கள் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் வன்னியர் சாதி ஒரு பெரிய சாதிதானே தவிர பெரும்பான்மைச் சாதியல்ல;

வன்னியர்கள் தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் ஓர் இருபத்தைந்து விழுக்காடு என்று வைத்துக் கொண்டாலும், பிற சமூகத்தினர் எல்லோருமாகச் சேர்ந்து எழுபத்தி ஐந்து சதவீதத்தினராக உள்ளனர். அவர்களை முற்றிலுமாகப் புறந்தள்ளிவிட்டு ஒரு சாதி மட்டுமே ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட முடியாது.

சாதிச் சங்கம் என்பது கோரிக்கைகள் அடிப்படையில் போராடலாம்; கோரிக்கைகள் சிலவற்றை ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளச் செய்யலாம். ஆனால், அதிகாரத்தை ஒரு சாதி மக்கள் மட்டுமே ஒருங்கிணைந்து பெற்றுவிட முடியும் என்பது சாத்தியமல்ல.

எனவே, எந்த ஒரு அரசியல் கட்சியும் பிற சமுதாய மக்களின் ஓட்டுக்களே தேவையில்லை என்று ஓங்கி ஒலிக்கக் கூடாது. அதேபோல திராவிட என்கிற ஒரு சொல்லைக் காரணம் காட்டி எல்லாக் கட்சிகளிடமிருந்தும் தனிமைப்பட்டு விடுவதும் அறிவுத்திறன் சார் அரசியலாக இருக்க முடியாது.

இறுதியாக ஒன்றை உங்களின் சிந்தனைக்கு வைக்க ஆசைப்படுகிறேன். அரசியலில் அறிவுக்கூர்மை என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் என்பதாலேயே அதை நான் கட்டாயமாகச் சொல்ல வேண்டியுள்ளது. மேடையில் அமைக்கப்பட்டுள்ள வண்ணமிகு திரைச்சீலையைப் பாருங்கள். டாக்டர் அன்புமணியை சின்ன அய்யா என்று போட்டிருக்கிறீர்கள். அவரை டாக்டர் அன்புமணி என்றோ, அன்புமணி ராமதாஸ் என்றோ குறிப்பிடாமல் சின்ன அய்யா என்று குறிப்பிடுவது அறிவுத்திறன் சார் அரசியல்தானா என்பதை யோசித்துப் பாருங்கள். பேரார்வத்தின் காரணமாக எஜமான், சின்ன எஜமான் என்றெல்லாம் அழைப்பது நிலப்பிரபுத்துவத்தின் நீட்சி ஆகாதா? சிந்தியுங்கள். ஒன்றுபடுவோம். முன்னோக்கிச் செல்வோம்!

உங்கள் முன் உரையாற்ற எனக்கும் ஒரு வாய்ப்பு தந்தமைக்காக என் வணக்கத்தையும் நன்றியையும் உரித்தாக்கி விடைபெறுகிறேன். நன்றி!

--------

டாக்டர் ராமதாசை தோற்கடிப்பது எங்கள் நோக்கமல்ல


டாக்டர் ராமதாசு வன்னியர் சமூகத்தைத் தோற்கடித்துவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம்


இணையதள நண்பர்கள் கூட்டத்தில் ந.இறைவன் பேச்சு

அன்புள்ள இணையதள சொந்தங்களே - பாமக நிர்வாகிகளே - நண்பர் மணிகண்டன் அவர்களே
அனைவருக்கும் வணக்கம்.

இந்த இணையதள நண்பர்கள் கூட்டத்தில் பேச நான் எந்த வகையில் பொருத்தமானவன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஏன் எனில் இணையதளம் பற்றிய அறிவில் நான் ஒரு பாமரன். இ.மெயில் எப்படி அனுப்புவது என்பது கூட தெரியாத அளவுக்குப் பாமரன்.

நண்பர் பொங்கலூர் மணிகண்டன் அவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு - உங்கள் சமூகத்தை சேர்ந்த இணையதள நண்பர்கள் கூட்டத்தில் என்னைப் பேச அழைத்திருக்கிறார்கள். நீங்களும் வாருங்கள் என்று அழைத்தவர்; உங்களைக் கூப்பிடச் சொன்னேன் கூப்பிடவில்லையா என்றும் கேட்டார். இல்லை என்றேன். மணிகண்டன் தொடர்பு துண்டிக்கப்பட்ட பத்தாவது நிமிடம நண்பர் ஜெயகுமார் தொடர்பு கொண்டு அழைத்தார்.
எதற்கான கூட்டமிது என்று நானும் கேட்கவில்லை. எது பற்றி பேச வேண்டும் என்று நீங்களும் சொல்லவில்லை. எனவே எதைப் பேசுவது என்ற தீர்மானம் இன்றியே இந்தக் கூட்டத்திற்கு வந்தேன்.

எனக்கு முன் பேசியவர்கள் பாமக என்றும்; மருத்துவர் ஐயா என்றும் சொல்கிறபோதெல்லாம் எழுந்த உங்கள் கைத்தட்டலைப் பார்த்து - எதிர்வரும் நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களில்; பாமகவுக்கு அறிவு சார் அரசியல் வேட்பாளர்களுக்குப் பஞ்சமிருக்காது என்பது தெரிகிறது.

உங்களில் பலபேர் பாமக எம்.எல்.ஏக்களாகவும் எம்.பிக்களாகவும் ஆகிற கனவுகளில் இருக்கிறீர்கள் என்பதும் புரிகிறது.

உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

உங்களைப் போன்ற அறிவுசார் அரசியல்வாதிகள் எம்.எல். ஏக்களாகவும் எம்.பிக்களாகவும் வந்தால்தான் இந்த சமூகம் சில இலக்குகளை அடையும்.

இங்கே எனக்கு முன் பேசிய எல்லோருமே தருமபுரி கலவரம் குறித்தும்; மரக்காணம் கலவரம் அதன்பின் நிகழ்வுகள் குறித்தும் தான் பேசினார்கள். நாங்களும் கடந்த மூன்று அச்சமில்லை இதழ்களிலும் விரிவாக எழுதி விட்டோம். எனவே நான் மீண்டும் அதையே இங்கே பேச விரும்பவில்லை.

இங்கே வந்த பிறகே - வரும் 2014 நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சிகளோடும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிடும் என்று அறிவித்துள்ள பாமகவை வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்து ஆதரிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக கூட்டப்பட்ட கூட்டம் இது என்று அறிந்து கொண்டேன் மகிழ்ச்சி.

இது நல்ல ஆசைதான்

இது சாத்தியமும் தான்

எப்படி சாத்தியம்?

ஏன் இதுவரை சாத்தியமாக வில்லை?

இவைகள் குறித்து விவாதிக்க வேண்டும்.

கடந்த காலங்களில் நாம் செய்த தவறுகளால்தான் நாம் பெற்றிருக்க வேண்டிய வெற்றிகளைக் கை நழுவ விட்டிருக்கிறோம். இது குறித்து சிந்திக்க வேண்டும்.

சிந்தித்து திருத்திக் கொள்வதுதான் இழந்த வெற்றிகளை மீட்பதற்கான வழி என்பதே என் கருத்து. இது தொடர்பாக சில விபரங்களை உங்கள் பரிசீலனைக்கு வைக்கிறேன்.

1931இல் எடுக்கப்பட்ட சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி - நாம் தான் தமிழ்நாட்டின் நம்பர் 1 பெரும்பான்மைச் சமூகம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கும் உண்மை.
அப்படி இருந்தும் - தமிழ்நாட்டின் ஆட்சியிலும் அதிகாரத்திலும் நாம் இல்லையே ஏன்?

ஏறத்தாழ 60 ஆண்டுகளாக இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிப் போராடியே களைத்துப் போன சமூகம் நம் சமூகம் மட்டும்தான்.

இதற்கான போராட்டங்களில் இந்த சமூகம் தன் சக்தியை வீணடித்து விட்டது என்பதே என் எண்ணம். இன்னமும் இந்த சிந்தனை நம்மை விட்டபாடில்லை.

இன்னமும் நம் தலைவர்கள் தனி இட ஒதுக்கீட்டிற்காகப் போராடுவோம் என அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

வேறு எந்த சமூகமாவது இட ஒதுக்கீடு கேட்டு போராட்டங்களை நடத்திக் கொண்டு இருக்கிறதா என்றால் இல்லை.

இன்னொரு சாலை மறியல் போராட்டத்தை நாம் நடத்த நேர்ந்தால் - இட ஒதுக்கீட்டிற்கான இன்னொரு சாலை மறியல் போராட்டமாக அது இருக்கக் கூடாது என்பதும்;
வடதமிழ்நாடு தனி மாநிலத் திற்கான போராட்டமாகவே அது இருக்க வேண்டும் என்பதே என் எண்ணமும் விருப்பமும்.

எதற்காக வடதமிழ்நாடு தனி மாநிலமாக வேண்டும்?
எனக்கு முன்னே பேசிய - நமது டாக்டர் விமுனா மூர்த்தி அவர்கள் - தமிழ்நாட்டில் நாம் 25 சதவீதம் தான். ஆகவே நாம் பெரிய சமூகமே தவிர பெரும்பான்மைச் சமூகம் அல்ல. எனவே நாம் தனித்து நின்றெல்லாம் ஆட்சிக்கு வர முடியாது என்றார்கள்.

தமிழ்நாட்டில் 25 சதவீதம் என்பது டாக்டரின் கணக்கு.

தமிழ்நாட்டில் 30 சதவீதம் என்பது எங்கள் கணக்கு.

இந்தக் கணக்கு வித்தியாசம் என்பது ஒரு பிரச்சனையே அல்ல. அவர் கணக்குப்படி நாம் 25 சதவீதம் என்பதாகவே இருக்கட்டும்.

இந்த 25 சதவீதமும் பரவலாக இல்லாமல் வடதமிழ்நாட்டில் மட்டுமே குவிந்து வாழ்வதால் - ஜனநாயகத்தில் நமது பலம் மேலும் கூடுதலானதாகும்.


ஒட்டு மொத்த தமிழ்நாட்டின் மக்கள் தொகை 7 கோடி என்றால் அதில் சரிபாதி மக்கள் தொகையைக் கொண்ட வடதமிழ்நாட்டின் மக்கள் தொகை மூன்றரை கோடி. 7 கோடியில் 25 சதவீதமாக இருக்கும் நாம்;

வடதமிழ்நாட்டு மக்கள் தொகையான மூன்றரை கோடியில் 50 சதவீதமாக இருக்கிறோம்.

வடதமிழ்நாட்டில் 50 சதவீதமாக இருக்கும் நாம் வெற்றி பெறாமல் வேறு யார்தான் வெற்றி பெற முடியும்?


டாக்டர் சொல்வது போல் இப்போது பெரிய சமூகமாக இருக்கும் நம்மை பெரும்பான்மைச் சமூகமாக மாற்றும் மந்திர சக்தி நாம் கேட்கும் வடதமிழ்நாடு மாநிலத்திற்கு உண்டு.

இப்போது நம் கனவாக இருக்கும் ஆட்சி; அப்போது நம் உரிமை என்றாகிவிடும்.

இப்போது போராடியும் கிடைக்காத இட ஒதுக்கீட்டுப் பலன்; அப்போது போராடாமலேயே நமக்கு உரிய பங்கு நமக்கு எளிதாக வந்தடையும்.

எனவேதான் - சாலைமறியல் போன்ற இன்னொரு போராட்டம் நடந்தால் அது வடதமிழ்நாடு மாநில கோரிக்கைக்கானதாக இருகக வேண்டுமெனக் கூறினேன்.

தமிழ்நாட்டின் முதல் பெரிய சமூகம் என்ற அடிப்படையில் ஒட்டு மொத்த தமிழகத்தின் ஆட்சி கூட முதலில் நமக்குத்தானே உரிமையுடையது? நாம் தானே ஆட்சியில் இருந்திருக்க வேண்டும்? ஏன் இல்லை? கேள்விகள் நியாயமானதுதான்.

இந்த நியாயத்தின் அடிப்படையில்தான் - வன்னியர்கள் ஒற்றுமையாக இருந்தால் தமிழ்நாட்டை வன்னியர்களே ஆள்வார்கள் என்று குமுதம் இதழ் எழுதியது.

இந்திய அளவில் நம் சமூகத்திற்கு இணையாக சொல்லக் கூடிய அளவுக்கு இருப்பது மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள மராட்டா சமூகமே.


1931 சாதிவாரிக் கணக்கெடுப்பில் அந்த மாநில மக்கள் தொகையில் அந்த சமூகம் 31 சதவீதம். குஜராத் பிரிந்த பிறகு எஞ்சிய மகாராஷ்டிர மக்கள் தொகையில் மராட்டா சமூக மக்கள் தொகை சற்று கூடுதலாகி இருக்கலாம்.

நமக்குத் தெரிந்து அந்துலே; ஷிண்டே சிவசேனாவைச் சேர்ந்த ஒரு முதல்வர் ஆகிய மூன்று பேர்களைத் தவிர மற்ற மந்திரி சபைகளில் எல்லாம் மராட்டா சமூகத்தவர்களே முதல்வர்கள்.
மாநில ஆட்சியில் இந்த சமூகம் எந்த அளவுக்கு ஆதிக்கம் செலுத்துகிறது என்பதற்கு விலாசராவ் தேஷ்முக் தலைமையில் அமைந்த அமைச்சரவை ஒரு உதாரணம்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விலாசராவ் தேஷ்முக் முதல்வர் அவர் ஒரு மராட்டா.
கூட்டணி மந்திரி சபையான அதில்; தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆர்.ஆர்.பாட்டீல் துணை முதல்வர் அவரும் ஒரு மராட்டா. சிவசேனாக் கட்சியைச் சேர்ந்த நாராயண ரானே எதிர்க்கட்சித் தலைவர் அவரும் ஒரு மராட்டா எந்தக் கட்சியானாலும் மராட்டா சமூகத்தைச் சேர்ந்தவர்களை முன்னிலைப் படுத்தாமல் அங்கே கட்சி நடத்த முடியாது என்பதற்கான உதாரணம் மேற்கண்டவை - இது மட்டுமல்ல - 40 அமைச்சர்களைக் கொண்ட அவரது அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வகித்த 20 அமைச்சர்கள் மராட்டா சமூகத்தவர்கள்.

288 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மன்றத்தில் 160க்கும் மேற்பட்டவர்கள் மராட்டா சமூகத்தவர்கள்.


பெரும்பான்மைச் சமூகமான மராட்டா சமூகத்தின் அரசியல் ஆதிக்கம் இது. தமிழ்நாட்டின் பெரும்பான்மைச் சமூகமான வன்னியர்கள் இப்படியோர் அரசியல் ஆதிக்கத்தை எப்போது எட்டுவது?


குமுதம் சொன்ன அந்த ஒற்றுமையை நாம் எப்படி அடைவது?

ராமதாஸ் சொல்வது போல் எல்லா வன்னியர்களும் பாமகவுக்கு வந்து விட்டால் அந்த ஒற்றுமை ஏற்பட்டு விடுமா? பாமக மூலம் வன்னியர்கள் தொடர்ந்து ஆள முடியுமா?

எந்த ஒரு சமுதாயமாவது ஒரே கட்சி மூலம் ஒரு மாநிலத்தை தொடர்ந்து ஆண்டிருக்கிறதா?
மகாராஷ்டிரா மாநிலத்தில் மராட்டா சமூகம் கூட காங்கிரஸ்; தேசியவாத காங்கிரஸ் என பல கட்சிகள் மூலமே முதல்வர்களாகி அரசியல் ஆதிக்கம் செலுத்தி இருக்கிறார்கள்.

பாமக அரசியல் ஆதிக்கம் பெறுவதற்கு வேண்டுமானால் எல்லா வன்னியர்களும் பாமகவை ஆதரிப்பது உதவுமே தவிர - வன்னியர் அரசியல் ஆதிக்கம் பெறுவதற்கு இது உதவாது.

வன்னியர்களை ஒதுக்கிவிட்டு இங்கே நாம் கட்சி நடத்த முடியாது என்று எல்லாக் கட்சியும் நனைக்கிற நிலைமையை என்றைக்கு நாம் உருவாக்குகிறோமோ அன்றைக்குத் தான் மராட்டா சமூகத்தைப் போன்ற; குமுதம் சொல்வது போன்ற நிலையான அரசியல் ஆதிக்கத்தை வன்னியர் சமூகம் இங்கே பெற முடியும்.


வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தனித்து நின்று 10 எம்.பிக்களைப் பெறுவோம்; 15 எம்.பிக்களைப் பெறுவோம் என்பதும்;

2016 இல் தனித்து நின்று வன்னியர் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்பதும் -

தொண்டர்களை தற்காலிகமாக ஊக்கப்படுத்த உதவுமே தவிர இப்போதைக்கு நடைமுறைச் சாத்தியமில்லாதது என்பதே என் கருத்து.

மேற்கண்ட கனவுகளில் நாம் வெற்றி பெற வேண்டுமானால் கடந்த காலத் தவறுகளைத் திருத்திக் கொண்டு வன்னியர் சமூக ஒற்றுமையை ஏற்படுத்த பகீரதப் பிரயத்தனங்களை பாமக தலைமை மேற்கொள்ள வேண்டும்.,

வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 10, 15 எம்பிக்களைப் பெறுவோம் என்று சொல்கிற போது -
1952 முதல் 2009 வரை நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் இந்த சமூகம் எத்தனை எம்.பிக்களைப் பெற்றது என்ற பழங்கணக்கைப் பார்க்க வேண்டியது அவசியம். என்ன அந்த பழங்கணக்கு?

1952 -இல் வன்னிய எம்பிக்கள் - 4
1957 -               ”                           - 2
1962 -               ”                           - 1
1967 -               ”                           - 1
1971 -               ”                           - 2
1977 -               ”                           - 5
1980 -               ”                           - 6
1984 -               ”                           - 5
1989 - இல் வன்னிய எம்பிக்கள் - 6
1991 -               ”                            - 5
1996 -               ”                            - 5
1998 -               ”                            - 10
1999 -               ”                            - 8
2004 -               ”                            - 6
2009 -               ”                            - 5


1952ஆம் ஆண்டு தேர்தலில், நாம் 4 எம்.பிக்களைக் பெற்றதற்கு கூட வன்னியர் சமூகத்தின் முதல் அரசியல் போராளிகளான எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் உழைப்பாளர் கட்சியின் மூலம் 3 எம்.பிக்களையும்; மாணிக்கவேல் நாயகரின் பொதுநலக்கட்சியின் மூலம் 1 எம்.பியையும் பெற்றதுவே காரணம் ஆகும்.

இவர்கள் இல்லை என்றால், காமராசர் தலைமையிலான காங்கிரஸ் கட்சி, நம்மை ஜீரோவாக்கி இருக்கும் அந்த நேரத்தில்.

1957 முதல் 1971 வரையிலான தேர்தல்களில் காங்கிரஸ் திமுக ஆகிய இரு கட்சிகளின் ஆதிக்கமே. எந்த ஒரு தேர்தலிலும் வன்னியர் எம்பிக்களின் எண்ணிக்கை இரண்டை தாண்டவே இல்லை.

மொத்தம் 6 எம்.பிக்களை பெற்றதில் 5 எம்பிக்கள் காங்கிரஸ் மூலம் பெற்றது. ஒன்றே ஒன்று மட்டும் திமுக மூலம் வந்தது.

திமுகவுக்கு ஆளும் கட்சி அந்தஸ்தையும் திமுக தலைவர்களுக்கு முதல்வர் என்ற முகவரியையும் தந்த வன்னியர் சமூகத்திற்கு திமுக செய்தது எவ்வளவு பெரிய துரோகம்?

1977 தேர்தலில் எம்.ஜி. ராமச்சந்திரனின் அதிமுக தேர்தல் களத்திற்கு வருகிறது இதற்கு பிறகுதான் வன்னியர் எம்.பிக்களின் எண்ணிக்கை 5ஆக உயர்கிறது, 6ஆக உயர்கிறது. 1991 வரை திமுக தேர்தல் களத்திற்கு வந்து 9 தேர்தல்களின் மூலம் வன்னியர்களுக்கு கொடுத்த எம்.பி. பதவிகளின் எண்ணிக்கை இரண்டே இரண்டுதான். அவ்வளவு பெரிய துரோகம்.

1971 தேர்தலில் திமுக 25 தொகுதிகளில் போட்டியிட்டு 25 தொகுதிகளிலும் எம்.பி பதவிகளை பெறுகிறது. அப்போது அதில் ஒருவர் கூட வன்னியர் இல்லை என்பது இமாலய துரோகமாகும். அந்த கணம் முதலே திமுகவை அழித்து ஆழக் குழி தோண்டி புதைப்பதற்கு வன்னியர்கள் சபதம் செய்திருக் வேண்டும்.

இதற்கு பிறகும் வன்னியர்கள் அந்த கட்சியைத் தூக்கிச் சுமந்தார்கள் என்பது நாம் எவ்வளவு முட்டாள்களாக இருந்திருக்கிறோம் என்பதற்கான அடையாளமாகும்.

1998 தேர்தலில்தான் உச்ச பட்சமாக 10 எம்.பிக்களைப் பெறுகிறோம். இதற்கு காரணம் இந்த தேர்தலில் பாமக 3 திமுக 2 மதிமுக 1 அதிமுக 2 த.ரா.க 1 தமாக 1 என 6 கட்சிகள் மூலம் நமக்கு எம்.பி பதவிகள் கிடைத்ததே முக்கிய காரணம் ஆகும்.

இந்த நேரத்தில் வேறொன்றையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். 1998 தேர்தலில் 10 எம்பிக்ளை பெற்றோம். அதிலே 11 எம்பிக்களைப் பெறுவதற்கான வாய்ப்பு எப்படி கை நழுவிப் போனது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் 1998 தேர்தலில் செங்கற்பட்டு தொகுதியில் திமுக வன்னியரான பரசுராமனுக்கும் அதிமுக முதலியாரான பன்னீர் செல்வத்தற்கும் போட்டி. அதிமுகவுடன் பாமக கூட்டணி என்பதால் திமுக வன்னியரை தோற்கடித்து அதிமுக முதலியாரை வெற்றி பெற வைக்க பாமக அரும்பாடுபட்டது ஒரு முக்கிய காரணம் ஆகும்.

1999 தேர்தலில் பாமகவுக்கு அச்சமில்லை ஒரு வேண்டுகோளை வைத்தது.

பாமக திமுகவோடோ, அதிமுகவோடோ எந்தக் கட்சியுடன் வேண்டு மானாலும் கூட்டணி வைத்துக்கொள்ளட்டும். கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தையின்போது வன்னியர் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் பாமகவுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் அந்த கட்சி தன்னுடைய வேட்பாளராக வன்னியரையே நிறுத்த வேண்டும் என்ற நிபந்தனை வைத்து கூட்டணி சேர வேண்டும் என்பதே அந்த வேண்டுகோள்.

இதை நடைமுறைப் படுத்தி இருந்தால் - பாமகவின் வன்னியருக்கு மட்டுமல்ல திமுக, அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகளில் உள்ள வன்னியரகளுக்கும் வெளிப்படையாக இல்லாமல் இருந்திருந்தாலும் உள்ளூர தலைவராக ராமதாஸ்தான் இருந்திருப்பார்.

இப்போது என்ன நிலைமை?

இவர் கூட்டணிக்கு வந்ததால் வன்னியர் கோட்டாவுக்கு ராமதாசுக்கு தொகுதி ஒதுக்கப் பட்டாயிற்று நம் கட்சியில் வன்னியர்களுக்கு எதற்கு தொகுதி ஒதுக்க வேண்டும் என் எண்ணத்தில் திமுகவும் அதிமுகவும் வன்னியர் அல்லாதவர்களை வேட்பாளர்களாக நிறுத்தி ராமதாசின் பிரச்சாரத்தின் மூலம் வெற்றியைப்பெற்றுக் கொள் கிறார்கள்.

இவ்விரு கட்சிகளிலும் உள்ள வன்னியர்கள்இவரால்தான் நமக்கான வாய்ப்பு பறிக்கப் பட்டது என்று எண்ணி டாக்டர் ராமதாசை பகைவராக பார்க்கும் நிலைமை.

1998 தேர்தலில் ராமதாஸ் 3வன்னிய எம்பிக்கள் உட்பட மொத்தம் 4 எம்.பிக்களைப் பெற்றிருந்தார். ஒட்டு மொத்த வன்னியர் எம்.பிக்களின் எண்ணிக்கை 10ஆக இருந்தது.

1999 தேர்தலில் பாமகவின் எண்ணிக்கை 4 வன்னியர் எம்.பிக்களின் எண்ணிக்கையோடு 5 ஆக உயர்ந்தது.ஒட்டு மொத்த வன்னியர் எம்.பிக்களின் எண்ணிக்கை 8 ஆக குறைந்தது.

2004 தேர்தலில் பாமகவின் எம்.பிக்களின்எண்ணிக்கை 4 வன்னிய எம்.பிக்களோடு சேர்த்து 6 ஆக உயர்ந்தது. ஆனால் ஒட்டு மொத்த வன்னிய எம்.பிக்களின் எண்ணிக்கை 6 ஆக குறைந்தது

இப்படி பாமக எம்.பிக்களின் எண்ணிக்கை கூடும்போது எல்லாம் வன்னியர்எம்.பிக்களின்எண்ணிக்கைகுறைந்து வந்ததால்தான் 2009 தேர்தலில் பாமக ஜீரோ ஆகி தோற்றது.

வன்னிய எம்.பிக்களின் எண்ணிக்கையும் மீண்டும் 1996 இல் இருந்த நிலைக்கு இறங்கி 5 ஆனது.
டாக்டர் ராமதாசின் வளர்ச்சி வன்னிய சமுதாயத்தின் வீழ்ச்சிக்கு காரணமானது.

இந்த நிலையில் பாமக என்கிற ஒரே கட்சியின் முலம் மட்டும் 10, 15 எம்.பிக்களை எப்படிப் பெற முடியும்? வென்றால் பெருமை மிக்க வரலாற்றுச் சாதனைதான்.

இனி நாம் பாண்டிச்சேரி மாநிலத்தின் கணக்கையும் பார்ப்போம்.

பாண்டிச்சேரி மாநிலத்தில் வன்னியர் சமூக மக்கள் தொகை ஏறத்தாழ 60 சதவீதம் இருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தை போலவே இங்கும் நாம்தான் தொடர்ந்து ஆட்சியில் இருந்து வந்திருக்க வேண்டும். ஆனால் தமிழகத்தை போலவே இங்கும் நாம் ஆட்சி அதிகாரத்திற்கு வர ஏறத்தாழ 38 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலைமை வந்தது.

ஒவ்வொரு சட்டமன்ற தேர்தலின் போதும் மற்ற எல்லா சாதிகளை விடவும் வன்னியர் சாதி எம்.எல்.ஏக்கள் தான் தொடர்ந்து அதிகமாக இருந்து வந்துள்ளனர். இருந்தும் முதல்வர் பதவி என்பது வன்னியர் சமூகத்திற்கு எட்டாக்கனியாகவே 1964 முதல் 2001 வரை இருந்து வந்துள்ளது.

இது தொடர்பாக 1964 முதல் 2001 வரை நடந்த தேர்தல்களில வன்னியர் சமூகம் பெற்ற எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை என்ன?

1964- 5 எம்.எல்.ஏக்கள்
1969- 9     “
1974- 5     “
1977- 8     “
1980- 8     “
1985- 5     “
1990- 7     “
1991- 6     “
1996- 7     “
---------------------------------
2001- 4     “
---------------------------------
2006- 7     “
2011- 10   “


2001 தேர்தலின் போதுதான் புதுச்சேரியில் வன்னியர் ஆட்சி அமைப்போம் என உரிமைக்குரல் எழுப்பி பாமக தேர்தலில் நிற்கிறது.

இந்த தேர்தலில் பாமக நிறுத்திய 5 வன்னிய வேட்பாளர்களும் ஒரு சதவீதம் மக்கள் தொகை கூட இல்லாத நாயுடு, ரெட்டியார் சமூகங்களிடம் தோற்கிறது. மற்ற சமூகத்தைச் சேர்ந்த மீதி 5 வேட்பாளர்களும் தோற்கிறார்கள்.

வன்னியர் தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று சொன்ன கட்சி அனைத்து இடங்களிலும் தோற்றது மட்டுமல்லாமல் பாண்டிச்சேரியில் 2001 ற்கு முன்பு நடந்த அனைத்து தேர்தல்களிலும் பெற்ற வன்னிய எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை விட குறைந்த எண்ணிக்கையில் வன்னியர் எம்.எல்.ஏக்கள் வந்தது 2001 தேர்தலில் தான்.

இந்த 2001 தேர்தலில், வன்னியர்கள் 4 பேர் மட்டுமே எம்எல்ஏக்களாக ஆகி இருந்தாலும் அதில் ஒருவரான ரெங்கசாமி முதல்வர் ஆனார். இன்னொருவர் அமைச்சராகிறார். இன்னொருவர் கொறடா ஆகிறார்.

வன்னியர் சமூகத்தின் துரதிஷ்டம் மிக்க இந்த தேர்தலுக்கு பிறகுதான் வன்னியர் அரசியலின் பொற்காலமும் ஆரம்பம் ஆகிறது. அதை ஏற்படுத்தி தந்த பெருமை ரங்கசாமிக்கே உரியது.

வன்னியர் சமூகத்தின் முதல் முதல்வர் என்ற பெருமையையும் புதுவை மாநிலத்தின் முதல் பெரும்பான்மை சமூக முதல்வர் என்ற பெருமையையும் தந்தவர் ரங்கசாமிதான்.


இதனை வரவேற்று விழா எடுத்திருக்க வேண்டிய வன்னிய தலைவரான ராமதாஸ்; ரங்கசாமி பதவி ஏற்றவுடன். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 11 பேரும் உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் இல்லையேல் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடருவேன் என அறிக்கை விடுகிறார். இது குறித்து அச்சமில்லையில் “கொண்டாடும் வேளையில் கொள்ளி வைக்கலாமா” என்ற ஒரு கட்டுரையை அப்போது எழுதினோம்.

ரெங்கசாமியின் நல்லாட்சி தொடர்கிறது. 2 ஆண்டுகள் கடந்த நிலையில் புதுவைக்கு வந்த சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி கற்பக விநாயகம் - ராமராஜ்ஜியம் போல ரங்கராஜ்ஜியம் நடத்துகிறார் ரங்கசாமி என பாராட்டுகிறார்.

பாமகவின் புதுவை தலைவரான பன்னீர் செல்வம் ரங்கசாமி ராமராஜ்ஜியம் நடத்தவில்லை. ராங் ராஜ்யம் தான் நடத்துகிறார் என்று அறிக்கை விடுகிறார். 16.8.2003 நாளிட்ட இந்து பத்திரிகை “The icon of chief ministers” என்று ரங்கசாமியை புகழ்ந்து சிறப்பிதழ் வெளியிடுகிறது.

ஏழாண்டு காலம் வரை தொடர்ந்து ஆட்சியில் இருந்த ஒரே முதல்வர் ரெங்கசாமியே என்ற வரலாறு படைத்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் உள்ள எம்.எல்.ஏக்கள் தங்களை ஊழல் செய்ய அனுமதிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக இவரை நீக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்குகிறார்கள்.

ஆனால், திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் என அனைத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏக்களும் ரெங்கசாமியே முதல்வராகத் தொடர வேண்டும் என அறிக்கைகள் விட்ட நிலையிலும், ரெங்கசாமியை காங்கிரஸ் கட்சி பதவி நீக்கம் செய்கிறது.

இதற்கு பிறகு வைத்திலிங்க ரெட்டியை முதல்வராக்க முயற்சி நடக்கிறது. கூட்டணி கட்சியான திமுகவை சேர்ந்த ஜானகிராமனிடம் தனக்கான ஆதரவுக் கடிதத்தை கவர்னருக்கு அளிக்கும்படி வைத்திலிங்க ரெட்டியே நேரில் சென்று கேட்ட நிலையில்; வேண்டா வெறுப்பாக நான் போய் கவர்னரிடமெல்லாம் கொடுக்க முடியாது நீயே போய் கொடுத்துக் கொள் என அவரிடமே கடிதம் கொடுத்து தன் எரிச்சலை காட்டிக் கொள்கிறார்.

பாமகவிடம் வைத்திலிங்க ரெட்டி ஆதரவு கடிதம் கேட்காமலேயே, ஆதரவு கடிதத்தை கவர்னரிடம் நேரில் சென்று முதன் முதலில் அளித்தது பாமகதான். வன்னியர் வாழ்ந்தால் தட்டிக்கொடு; வீழ்ந்தால் முட்டுக் கொடு என்ற லட்சியத்தை முழக்கமாக கொண்ட பாமகவுக்கு இது எவ்வளவு பெரிய வீழ்ச்சி?

2001 தொடக்கத்தில் ரெங்கசாமியை முதல்வராக்குவது குறித்த பேச்சு காங்கரசில் எழுந்தபோது, பள்ளிப்பயலை எல்லாம் முதல்வராக்கிவிட்டு கைகட்டி நிற்க முடியுமா? என வன்னியர் சமூகத்தை இழிவாகப் பேசிய வைத்தியலிங்க ரெட்டியை முதல்வராக்குவதற்கு எவ்வளவு அக்கறை பாமகவுக்கு?

உதைக்கிற கால்களுக்கு முத்தமிடும் சுரணை கெட்ட சாதியாக வன்னியர் சாதியை மாற்றி விட்ட அவலம் அல்லவா இது?

இதற்கு பிறகு 2011இல் தேர்தல் வருகிறது. ரெங்கசாமி தேர்தலுக்கு ஒரு மாதத்திற்கு முன்பு என்.ஆர்.காங்கிரஸ் என்ற ஒரு கட்சியை தொடங்குகிறார்.

அதிமுகவுடன் கூட்டணி வைத்து 17 தொகுதிகளில் அவர் கட்சி போட்டியிடுகிறது. அதில் 15 இடங்களில் வெற்றி பெறுகிறது. இந்த தேர்தலில் தான் 10 வன்னியர் எம்.எல்.ஏக்கள் வெற்றி பெறுகிறார்கள். இதுவரை இல்லாத உச்சம் இது. வன்னியர் சமுதாயத்திற்கு ரெங்கசாமி பெற்று தந்த மற்றும் ஓர் பெருமை இது. இந்த வெற்றி குறித்து புதுவையில் வீசியது ரங்கசாமி அலை அல்ல, ரெங்கசாமி சுனாமி என்று எழுதியது தினமலர்.

ரெங்கசாமியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கிய காங்கிரஸ் அவமானத்தால் தலைகுனிந்து நின்றது.


ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பிறகு புதுவையில் அதிமுகவுக்கு 2 எம.எல்.ஏக்கள் பதவிக்கு மேல் கிடைத்ததே இல்லை. இந்த முறை அவர் கட்சிக்கு 5 எம்.எல்.ஏக்கள். இது அந்த கட்சிக்கு ரெங்கசாமியின் செல்வாக்கு தந்த பரிசு.




ரெங்கசாமி அமைச்சரவை அமைக்கிறார். அதில் கல்யாணசுந்தரம் என்ற வன்னியர் ஒரு அமைச்சர். பன்னீர் செல்வம் என்ற ஒரு வன்னியர் அமைச்சர், சந்திரகாசு, ராஜவேலு என்ற இரு தாழ்த்தப்பட்ட அமைச்சர்கள், தியாகராஜன் என்ற ஒரு கிராமணி சமூக அமைச்சர் என அனைத்து அமைச்சர்களுமே பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் என்பது இந்திய வரலாற்றில் வேறு எந்த மாநில அமைச்சரவையிலும் இல்லாத - ரெங்கசாமி ஏற்படுத்திய புதிய வரலாறாகும்.

சபாநாயகர், துணை சபாநாயகர், கொறடா என இவர்களும் வன்னியர்களே, இது மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட வாரிய தலைவர்களாக நியமிக்கப்பட்டவர்களில் 90 சதவீதம் பேர் வன்னியர்கள். இது பொற்காலத்தின் பொற்கால ஆட்சியாகும்.
இப்போதும் இவரை ஆதரிக்க மனமில்லாமல் இவரது ஆட்சியை குறை சொல்லி வைத்தியலிங்க ரெட்டி கொடுக்கிற அறிக்கைகளைத்தான் மக்கள் டிவி ஒளிபரப்பிக் கொண்டு இருக்கிறது.

இத்தகைய வரலாற்றுப் பிழைகளை திருத்திக் கொள்ளாமல் 2014 நாடாளுமன்ற தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டால் வன்னியர் சமூக எம்.பிக்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத ஜீரோ நிலையை அடைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.

டாக்டர் ராமதாஸ் வெற்றி பெறக் கூடாது என்பது எங்கள் நோக்கம் அல்ல டாக்டர் ராமதாஸ் வன்னியர் சமூகத்தைதோற்கடித்துவிடக் கூடாது என்பதே எங்கள் நோக்கம் எனத் தெரிவித்து விடை பெறுகிறேன்.

நன்றி வணக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக