வெள்ளி, 28 ஜூன், 2013

சமுதாயப் போராளி பெ.ஜெகநாதன் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி



மறைந்த ஜெகநாதனின் இல்லத்தில் (இடைச்செறுவாய்) அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியும் படத்திறப்பு நிகழ்ச்சியும் ந.இறைவன் தலைமையில் நடைபெற்றது. அயன்தத்தனூர் நீலமேகம் அனைவரையும் வரவேற்றார். வன்னியகுல சத்திரிய மகாசங்கத் தலைவர் உ.பலராமன், மறைந்த ஜெகநாதனின் படத்தை திறந்து வைத்து உரை நிகழ்த்தினார்.

வேலி அமைப்பின் தலைவர் டாக்டர் விமுனாமூர்த்தி, பேராசிரியர் கவிஞர் பழமலய், பாமக தேர்தல் பணிக்குழு செயலாளர் சே.தனபால், வேலி அமைப்பின் செயலாளர் ஜே.கே.படையாட்சி, பாமக மாவட்ட தலைவர் செ.க.ஆடியபாதம், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சின்னத்துரை வன்னியகுல சத்திரிய மகாசங்கத் துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம், விவசாய சங்கத் தலைவர் ந.ப.அன்பழகன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நல்லூர் ஒன்றியச் செயலாளர் ஆர்.மகாலிங்கம் ஆசிரியர் சதாசிவம், வழக்கறிஞர் கார்த்திக், சாமி கச்சிராயர், உலகத்தமிழர் பாதுகாப்பு இயக்க செயலாளர் ராஜா ஸ்டாலின், ஆகியோர் இரங்கல் உரை ஆற்றினார்கள்.

வடதமிழ்நாடு மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த தோழர்கள் ஜீவனாதன், ஆத்தூர் முருகன், மாரிமுத்து ஜவகர், கே.வி.கவுண்டர், மாணிக்கவாசகம், யுவராஜ், அரவிந்த், ஆத்தூர் நாராயணன், மாங்கனி மாணிக்கவேல், கடிச்சம்பாடி வெங்கட்ராமன், ஆகியோர் படத்திறப்பு நிகழ்வில் கலந்து கொண்டனர். 
அச்சமில்லை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மறைந்த ஜெகநாதன் குடும்பத்திற்கு ரூ.1,10,000/- (ரூ.ஒரு லட்சத்து பத்தாயிரம்) நிதி வழங்கப்பட்டது.
 அச்சமில்லை சார்பாக மகாசங்கத் தலைவர் உ.பலராமனும், வேலி அமைப்பின் தலைவர் டாக்டர் விமுனாமூர்த்தியும் நிதிக்கான காசோலையை வழங்கினார்கள்.

(குறிப்பு: 31.5.2013 அன்று ரொக்கமாக ரு.10,000 ஜெகநாதன் துணைவியாரிடம் வழங்கப்பட்டது.
1.7.2013 நாளிட்ட 1லட்சத்திற்கான காசோலையாக 14.6.2013 அன்று வழங்கப்பட்டது.)

தம்பி ஜெகநாதன்
அணையா விளக்கு
அருட்பெரும் ஒளி...

ந.இறைவன்




வன்னியர் சமூகத்தின்மீது அளவிட முடியாத அக்கறை கொண்டவர் ஜெகநாதன்.
வன்னியர் ஒற்றுமை, வன்னியர் பாதுகாப்பு, வன்னியர் முன்னேற்றம், ஆகியவை குறித்து சதா காலமும் சிந்தித்து செயல்பட்ட இளம் சமூகப் போராளி,
அச்சமில்லை ஆரம்ப காலம் முதற்கொண்டு எங்களோடு செயல்பட்டவர்.
“வன்னியர் சமூகத்தின் போர்வாள்
அச்சமில்லை படியுங்கள்”
என தன் வீட்டு சுவற்றில் அச்சமில்லை பற்றிய முதல் சுவர் விளம்பரத்தை எழுதி மகிழ்ந்தவர்.
அச்சமில்லை வளர்ச்சி; வடதமிழ்நாடு மக்கள் இயக்க வளர்ச்சி ஆகியவற்றில் ஆயிரம் கனவுகளோடு அவரும்; அவர் குறித்த ஆயிரம் கனவுளோடு நாங்களும் இருந்தோம்.
இன்று தம்பி ஜெகநாதன் இல்லை. எங்கள் கனவுகளும் நொறுங்கிக் கிடக்கின்றன.
கடந்த மே 22 ஆம் தேதி நக்கம்பாடி செல்லப் பெருமாள் நினைவேந்தல் நிகழ்ச்சியில் என்னோடு கலந்துகொண்டு பேசுகிறார்.
அடுத்த 8ஆம் நாள் மே 30 அன்று ஜெகநாதனை லாரி ஏற்றிக் கொன்று விட்டார்கள் என்ற செய்தி இடியாய் இறங்கி எங்கள் நம்பிக்கைகள் சிலவற்றை சிதைத்து விட்டது. இன்னமும் ஜெகநாதன் இல்லை என்ற அதிர்ச்சியிருந்து மீள முடியவில்லை.
எங்களுக்கே இப்படி என்றால்?
ஒரு வயதுக் குழந்தையை வைத்துக் கொண்டு தவிக்கும் அவரது மனைவிக்கும்; அவரது குடும்பத்திற்கும் என்ன ஆறுதலைச் சொல்லிவிட முடியும் எங்களால்?
------
வன்னியர்களில் இவர் திமுக, இவர் அதிமுக, இவர் பாமக என்ற வேற்றுமைகளை எல்லாம் அவர் பார்த்ததே இல்லை. வன்னியர் என்றால் வன்னியர்தான் என்ற ஒரே அடையாளத்தை மட்டுமே பார்ப்பார். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில் அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டிருப்பது அதனால்தான்.

மாற்றுக் கருத்தைக் கூட ஒரு குறுஞ்சிரிப்போடு சொல்லும் இயல்பு கொண்டவர் ஜெகநாதன்.
பேசும்போது குழந்தைத்தனம்.. செயல்படும் போது கொள்கை உறுதி. இதுதான் அவரை எல்லோரும் நேசித்ததற்கு காரணம்.

அவர் ஒரு எளிமையான மனிதர்.
ஒருநாள் என்னை தொலைபேசியில் அழைத்த ஜெகநாதன் திட்டக்குடியில் நாளைக்கு திருமணம் நீங்கள் வர வேண்டும் என்றார். யாருக்குத் திருமணம் என்றேன். எனக்குத்தான் ஐயா என்றார். என்ன ஜெகநாதன் பத்திரிகை கூட அனுப்பவில்லை என்றேன். பத்திரிகையயல்லாம் அடிக்கலைங்கய்யா என்றார். பத்திரிக்கை அடிக்காமல் திருமணமா? ஆச்சரியம்!

திருமணத்திற்கு போனேன். கோவிலில் இவரது மற்றும் இவரது துணைவியாரின் குடும்பத்தினர் மட்டுமே. நான் ஒருவன் தான் வெளியாள்.
திருமணம் எளிமையிலும் எளிமையாக நடந்தது.

அந்த எளிமை அவரது எல்லா செயல் பாடுகளிலும் இருந்தது.
எளிமையானவர் மட்டுமல்ல. சிக்கன மானவரும் கூட, சென்னைக்கு என்ன வேலையாக வந்தாலும் என்னை சந்திப்பார். சாப்பிடலாம் ஜெகநாதன் என்று அழைத்தால்... இல்லிங்கய்யா சாப்பாடு கொண்டு வந்திருக்கிறேன் என்று கட்டுச் சோற்றைப் பிரிப்பார்.

சென்னைக்கு வரும் ஒவ்வொரு முறையும் புறப்படும் போதும் ஒரு ஆயிரம் பணத்தை நீட்டுவார். எதற்கு ஜெகநாதன் என்றால்... அச்சமில்லை விற்ற காசுதான் என்பார். அத்தனையும் அச்சமில்லை விற்ற காசா என்றால் ஒரு சிரிப்பு மட்டுமே பதில். நான் அனுப்பிய நூறு படிகளை நிறைய பேருக்கு இலவசமாக படிக்கக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது எனக்குத் தெரியும்.

கல்லூரி கல்லூரியாய் அலைந்து நம் மாணவர்களைத் தேடிப்பிடித்து இலவசமாகக் கொடுத்துப் படிக்கச் சொல்லி வருகிறார் என்பதும் எனக்கும் தெரியும்.
--
அரியலூர், கடலூர் மாவட்டங்களில் எங்கே வன்னியருக்குப் பிரச்சனை என்றாலும்; பாதிப்பு என்றாலும் அங்கே முதல் ஆளாய்ப் போய் நிற்பார். அந்த பிரச்சனைகளைக் குறிப்பாக எழுதி அனுப்புவார். கட்டுரை எழுதும்போது கூடுதல் விபரம் தேவைப்பட்டால் கேட்பேன். மீண்டும் அந்த ஊருக்குச் சென்று விபரங்களைச் சேகரித்து அனுப்புவார். ஒரே கட்டுரைக்கு இரண்டு மூன்று முறை கூட கூடுதல் விபரங்களைக் கேட்டிருக்கிறேன். எத்தனை முறை கேட்டாலும் சலிக்காமல் மீண்டும் மீண்டும் அந்த ஊருக்குச் சென்று உரியவர்களைச் சந்தித்து விபரங்களைச் சேகரித்துத் தருவார்.
இதற்கெல்லாம் பணம் ஏது அவருக்கு?

தன் எளிமையின் மூலமும் சிக்கனத்தின் மூலமும் சேமித்த பணத்தை ‡ ஒரு வள்ளலைப் போல பொதுப் பணிக்காக செலவழித்த சமூகப் போராளி அவர்.
அவரைப் போல மாவட்டத்திற்கு பத்து பேர் இருந்தால் பத்து ஆண்டுகளில் இந்த சமூகத்தின் முகத்தையே மாற்றி விடலாம்.
அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல.. இந்த சமூகத்திற்கே அவரது இழப்பு ஈடு செய்ய முடியாதது.
தன் குடும்ப வளர்ச்சிக்கு செலவிட வேண்டிய பணத்தை இந்த சமூக மேம்பாட்டிற்கான பொதுப்பணிக்கு செலவழித்த அவரது குடும்பம் தவித்து நிற்கிறது.

அந்த தவிப்பை போக்க எங்களால் முடிந்த சிறு உதவியாக இப்போதைக்கு ஒரு லட்சத்தி பத்தாயிரம் நிதியளிக்கிறோம். அவரது ஒரு வயது மகனின் எதிர்காலப் படிப்பு செலவிலும் நாங்கள் பங்கேற்றுத் துணை நிற்போம். தம்பி ஜெகநாதனை மரணம் எங்களிடமிருந்து பிரித்துவிட முடியாது.

அருட்பெரும் ஒளியின்
அணையா விளக்காக
அவர் என்றும் எங்களுடனேயே இருக்கிறார் என்பதைத் தெரிவித்து.
அவரது குடும்ப நிதிக்கான காசோலையை அவரது துணைவியார் ராஜேஸ்வரியிடம் வன்னியர் மகாசங்கத் தலைவர் உ.பலராமன் அவர்களும்; வேலி அமைப்பின் தலைவர் டாக்டர் விமுனா மூர்த்தி அவர்களும் வழங்கவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

வன்னியர் சமூக முன்னேற்றத்திற்காக
உழைத்தவர் ஜெகநாதன்

த.பழமலய்


உள்ளூர்க்குளம் தீர்த்தக்குளம் ஆகாது என்பார்கள். ஆனால், அதன் வரலாற்றுச் சிறப்பை அறிந்து வெளி ஊர்களில் இருந்து வருவார்கள். இடைச்செறுவாய் ஊர் மக்கள் அன்பர் ஜெகநாதனின் அருமை பெருமைகளை அறியாதவர்களாக இருந்திருக்கலாம்.
இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியில், உள்ளூர் சுற்றமும் நட்பும் அல்லாமல், சென்னையில் இருந்து வன்னியகுல சத்ரிய மகா சங்கத்தின் தலைவர் உ.பலராமன் அவர்களும், துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம் அவர்களும், இன்னாளில் சென்னையில்இருக்கும் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அச்சமில்லை இதழ் ஆசிரியர் இறைவன் அவர்களும், விழுப்புரத்தைச் சேர்ந்தவரும் காஞ்சிபுரத்திலிருந்து வந்திருப்பவரும் வேலி அறக்கட்டளைத் தலைவர் மருத்துவர் விமுனா மூர்த்தி அவர்களும் இன்னும் பல ஊர்களில் இருந்து பல அமைப்புகளைச் சேர்ந்த பலரும் இங்கு வந்து கலந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் பரந்துபட்டவர்களாய் வாழும் வன்னியப் பெருங்குடி மக்களின் முன்னேற்றத்திற்காகச் செகநாதன் உழைத்திருக்கிறார். அதனால்தான் அவருக்கு இவர்கள் யாவரும் இரங்கள் தெரிவிக்கக் கூடியிருக்கிறார்கள்.
செகநாதன் பொருளாதார வசதி படைக்காத ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர், இக்காலத்தில் தன் முன்னேற்றத்தில் மட்டுமே குறியாக வாழாதவர். பலருக்கும் உதவியாக வாழ்ந்திருக்கிறார்.
இன்றைக்கு மரக்காணம் நிகழ்ச்சிக்குப் பிறகு வன்னியப் பெருமக்கள் பலரும் என்றைக்கும் இல்லாத அளவுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் குண்டர் சட்டத்திலும் பொதுவாகவும் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள். இவர்கள் குடும்பங்களுக்கு வன்னியர் சங்கமும்; பாமகவும் நிதி உதவி, வழக்கு நிதி, வழங்க முன்வந்திருப்பதைப் பாராட்டுகிறோம். வரவேற்கிறோம். இப்படி, இவ்வாறான சந்தர்ப்பங்களில் பாதிக்கப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதுதான் யாவரும் எதிர்பார்ப்பது ஆகும். இதையே வற்புறுத்துகிறோம்.
பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்களின் குடும்பங்கள் அவர்கள் காலத்திலோ அவர்கள் இறப்பிற்குப் பிறகோ தெருவில் நிற்கக் கூடாது. ஆதரிப்பார் இல்லாதவர்களாக. அவர்கள் குடும்பங்குளுக்கு உதவுபவர்கள் இல்லாதவர்களாக. கைவிடப் பட்டவர்களாக, அவல நிலைக்கு ஆளாகி விடக்கூடாது. இதற்காகத்தான் - இதை இன்றைக்கு மக்களுக்காக உழைப்பவர்களுக்கும், எதிர்காலத்தில் உழைக்க முன்வருபவர்களுக்கும் உணர்த்துவதற்காகத்தான் இவர்கள் கூடி இந்த ஒரு இலட்சம் ரூபாயைச் செகநாதன் குடும்ப நலனுக்கு உதவியிருக்கிறார்கள்.

இவர்கள் எங்கோ இருந்து வந்து உதவுகிறார்கள். இந்த வட்டாரத்தைச் சேர்ந்தவர்களும் இவ்வாறு உதவ வேண்டும். பங்காளிகளும் உறவு முறையினரும் அய்ந்நூறு ஆயிரம் என்று மொய் வைக்கலாம். ஆனால், அது போதாது.

செகநாதன் தன் சாதியினர் முன்னேற்றத்திற்கும் ஏன், பிற சாதியினர் முன்னேற்றத்திற்கும் கூட உழைத்தவர், போராடியவர். இவருக்கு இவர் சாதியினரும் பிற சாதியாரும் சுற்றமும் நட்பும் ஆயிரம் ஆயிரமாய் முன்வந்து உதவியும் இருக்கிறார்கள். இதுவே - இந்த புரிதலும் செயற்பாடுமே இவர் சாதியினருக்கும் பிற சாதியினருக்கும் விடுதலையாக இருக்க முடியும்.

பிறருக்காகவும் நாட்டுக்காகவும்
உழைத்தவர் ஜெகநாதன்

டாக்டர் விமுனாமூர்த்தி

மறைந்த இளைஞர் ஜெகநாதன் அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வின் தலைவர் அவர்களே, படத்தை திறந்து வைத்து உரையாற்றிய அன்புக்குரிய ஐயா உ.பலராமன் அவர்களே, ஜெகநாதன் குடும்பத்தினரே, குழுமியுள்ள சொந்தங்களே, தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என் கனிவான வணக்கங்கள்.

இது ஒரு துயரமான நிகழ்ச்சி. ஓவிய ஆசிரியர் ஒருவரை படமாகவும், ஓவியமாகவும் பார்க்கும் ஒரு துயர நிகழ்ச்சி. அச்சமில்லை இதழோடும், வடதமிழ்நாடு மக்கள் இயக்கத்தோடும் பணியாற்றிய ஒரு இளைஞரின் ஈடுசெய்ய முடியாத இழப்பின் துயரத்தில் பங்கேற்கக் கூடியிருக்கிறோம். அச்சமில்லை இதழின் ஆசிரியர் குழுவின் பட்டியலில் திட்டக்குடி ஜெகநாதன், ஆத்தூர் முருகன் என்ற பெயர்களை பார்க்கும்போதெல்லாம் இவர்கள் எல்லாம் வெகு தொலைவில் இருந்துகொண்டு அச்சமில்லை இதழுக்கு அயராது தங்களது பங்களிப்பை வழங்குகிறார்களே என்று வியந்து போவேன்.
ஈதல், இசைபட வாழ்தல் என்கிற குறளுக்கு இலக்கணமாக ஜெகநாதன் வாழ்ந்திருக்கிறார் என்பதை இங்கே பலர் ஆற்றிய உரையிலிருந்து அறிந்து கொண்டேன். சிலர் உலகை மாற்றப் போவதாகச் சொல்லிக்கொண்டு தங்கள் ஊரைக் கூட மறந்து விடுவார்கள். சிலர், அடுத்த தலைமுறைக்காக உழைப்பதாகச் சொல்லிக் கொண்டு அண்ணன் தம்பி துன்பங்களைக் கூட ஏறெடுத்துப் பார்க்க மாட்டார்கள். மறைந்த ஜெகநாதன், அப்படி எல்லாம் இல்லாமல் பிறருக்காகவும் நாட்டுக்காகவும், உழைத்த அதே சமயத்தில் தன் சொந்த ஊரில் நடந்த சிறு சிறு நிகழ்ச்சிகளிலும் அக்கறை செலுத்தியவர் என்பதை இவ்வூரில் உள்ள ஆசிரியர் பயிற்சிப் பள்ளிக் கட்டட முன்சுவரில் பதிக்கப்பட்ட நன்கொடைப் பட்டியல் மூலம் தெரிந்து கொண்டேன். கட்டப்படுவது அரசுப் பள்ளிக்கூடக் கட்டடம் என்றாலும், அதிலும் தன்னால் முடிந்த பங்களிப்பைச் செய்துள்ளார் என்பதைப் பார்க்கும் போது, அவருக்குப் பொதுநலத் தொண்டில் உள்ள ஈடுபாடு நன்கு புரிகிறது.

ஜெகநாதன் ஒரு விபத்தில் இறந்து போனார் என்று தான் இங்கு வரும் வரை நினைத்திருந்தேன். ஆனால் இங்கேபலர் குறிப்பிட்டுச் சொன்னதில் இருந்து அது திட்டமிட்ட விபத்து என்று ஐயம் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நடைபெறும் அதிகார அத்துமீறல்களை வன்னியர்கள் மீது நடத்தப்படுகிற வன்கொடுமைகளை அவர் அவ்வப்போது மிகத் துணிச்சலுடன் வெளிச்சத்துக்கு கொண்டு வந்தவர் என்பது எனக்குத் தெரியும். அது காரணமாக, அவர் கொல்லப்பட்டிருந்தால் அது அச்சமில்லை இதழுக்கு விடப்பட்ட சவாலாகக் கருதுகிறேன். எனவே நடந்தது விபத்துதானா என்பதை பல கோணங்களில் ஆய்வு செய்து, உண்மை நிலையை அறிந்து எச்சரிக்கையாய் இருக்கவும், எதிர்வினை ஆற்றவும் அவசியம் ஏற்பட்டுள்ளதாய் உணர்கிறேன். ஜெகநாதனின் இழப்பு, ஈடு செய்ய முடியாத இழப்பு என்பதை நன்கு உணர்ந்திருந்தாலும் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு, நடந்தது என்னவென்றே அறியாத அந்தப் பச்சிளம் பாலகனுக்கு அச்சமில்லை இதழும் வடதமிழ்நாடு மக்கள் இயக்கமும் பண உதவி செய்ய வந்திருப்பது வரவேற்கத் தக்கது. சமுதாயத்துக்காகப் பாடுபடுபவர்களுக்கு இழப்பு ஏற்படும் போது அவரோ அவரது குடும்பமோ தனியாக இல்லை, உதவிக்கு ஓடி வர தமிழகமெங்கும் உடன்பிறவாச் சொந்தங்கள் உள்ளனர் என்பதைக் காட்டுகின்ற ஓர் அடையாளம் தான் அது.
அன்பு எல்லோரிடமும் வேண்டும் என்று குறிப்பிட்டார்கள். அன்பு மட்டுமே போதாது. ஏனெனில் அருள் என்பதுதான் செயல்வடிவம். இன்னலைக் குறைக்கவல்லது. அருள் என்பது அன்பின் குழந்தை அந்த அருளும் பொருள் என்னும் செவிலியாலேயே நிலைபெறும். 

அருள் என்னும் அன்பீன் குழவி பொருள் என்னும் 
செல்வச் செவிலியால் உண்டு.
என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்.

எனவேதான், இதுபோன்ற இழப்புகளுக்கு பொருள் வழங்கிட யாரும் தயங்கவும் கூடாது, நாணவும் கூடாது, இயன்ற அளவுக்குச் செய்திட வேண்டும் என்று பேராசிரியர் பழமலய் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
மறைந்த ஜெகநாதனின் துணைவி மழலைச் செல்வன் தமிழ்வேல் அவருடைய தாய் தந்தையர் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து விடைபெறுகிறேன் நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக