வெள்ளி, 28 ஜூன், 2013

மரக்காணம் கலவரம் பாதிக்கப்பட்டோரிடம் களஆய்வு..

அச்சமில்லை ஆசிரியர் குழுவைச் சேர்ந்த, ந.இறைவன், வேலூர் சிவா, ஜெகநாதன், மாரிமுத்து ஜவகர், பொன்.ஆறுமுகம், நீலமேகம், குடந்தை வெங்கட்ராமன் ஆகியோர் மரக்காணம் கலவரத்தில் பாதிக்கப்பட்டோரிடம் 10.5.2013, 11.5.2013 ஆகிய இரு நாட்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்

கலவரத்தில் கொல்லப்பட்ட
தேவனாஞ்சேரி விவேக்
குடும்பத்தினருடன் சந்திப்பு.


குடந்தை அருகே உள்ள தேவனாஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த செல்வேந்திரன் - அமுதா ஆகியோரின் இரண்டாவது மகன் விவேக் (வயது 18). இவரது மரணம் குறித்து இவர் கூடச் சென்றவர்கள் மற்றும் குடும்பத்தினரை 10.5.2013 அன்று மாலை 4 மணியளவில் சந்தித்து அச்சமில்லை ஆசிரியர் குழு சேகரித்த விபரம்.

விவேக்கிற்கு வினோத் என்ற ஒரு அண்ணன் இருந்தாலும்; கும்பகோணம் தாராசுரம் மார்க்கெட்டில் கருவேப்பிலை கொத்தமல்லி வியாபாரம் செய்து விவேக் கொண்டு வரும் பணத்தை வைத்துதான் குடும்பம் நடைபெற்றுள்ளது. வேறு யாரும் சம்பாதிப்பவர்களாக இல்லை.

25.4.2013 அன்று தேவனாஞ்சேரியிலிருந்து 20 வயதுக்கு உட்பட்ட 15 இளைஞர்கள் விழாவுக்குச் சென்றிருக்கிறார்கள். மரக்காணத்திற்கு நான்கைந்து கிலோமீட்டருக்கு முன்பே வன்டிகள் தடுத்து நிறுத்தப்பட்டு கலவரம் நடந்திருக்கிறது. கலவரக்காரர்கள் வேனின் முன் பக்க கண்ணாடியை உடைத்துவிட்டதால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் இறங்கி ஓட ஆரம்பித்து விட்டனர்.

சிறிது நேரத்தில் - நடு ரோட்டில் ஒருவர் விழுந்து கிடப்பதைப் பார்த்து ஓடிப்போய் பார்த்தோம். காதுகளிலும் வாயிலும் ரத்தம் சொட்ட விழுந்து கிடந்தான் விவேக். அவனை வேனில் தூக்கிப் போட்டுக் கொண்டு புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு போனால் விவேக் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினார்கள்.


காவல்துறையிடம் இருந்து கடிதம் வாங்கி வந்தால்தான் உடலை ஒப்படைக்க முடியும் என மருத்துவர்கள் சொல்லிவிட்டதால் மரக்காணம் காவல்நிலையத்திற்கு போனோம். அங்கே கலவரத்தில் இறந்ததாகச் சொன்னால் வழக்குப் பதிய முடியாது என்றும் விபத்து என்று எழுதிக் கொடுங்கள் வழக்கு பதிவு செய்கிறோம் என்று சொல்லி விட்டார்கள். வேறு வழி இல்லாமல் விபத்தில் இறந்து விட்டான் என்று எழுதிக் கொடுத்து எஃப்.ஐ.ஆர். காப்பியை வாங்கிப் போய் மருத்துவமனையில் கொடுத்தோம். என்கிறார்கள்.


குரு வந்து பார்த்து 25,000 ரூபாய் ஈமச்சடங்கிற்கு கொடுத்ததாகச் சொன்னார்கள். சம்பாதிக்கும் மகனை இழந்து அனாதையாக தவிக்கிறது விவேக்கின் குடும்பம்.

10.5.2013 மாலை 6 மணி அளவில்
வெண்மான்கொண்டானில்
செல்வராஜின் குடும்பத்தினரை சந்தித்து
ஆறுதல் கூறினோம்.


செல்வராஜ் லாரி ஓட்டுனராகப் பணி செய்துள்ளார். வெளி மாநிலங்களுக்கு சென்று திரும்பியவரை - நண்பர்கள் வற்புறுத்தி மாமல்லபுரம் விழாவுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். செல்வராஜ் வயது 40 இருக்கும், அவரது மனைவி சித்ரா இவர்களுக்கு 4 வயது; 6 வயது; 8 வயதில் மூன்று ஆண் குழந்தைகள். குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒரே நபர் செல்வராஜ் மட்டுமே. அவரை இழந்ததால் அவரது குடும்பம் அநாதையாகித் தவிக்கிறது.


வெண்மான்கொண்டானைச் சேர்ந்தவர்கள் 14 பேர் சேர்ந்து ஒரு மகேந்திரா வேனை எடுத்துக் கொண்டு விழாவுக்குப் போயிருக்கிறார்கள். செல்வராஜின் தம்பி செல்வமும் கூடப் போயிருக்கிறார். அவர் சொல்கிறார். மரக்காணத்திற்கு 2 கிலோமீட்டர் தூரத்தில் வண்டிகள் முன்னும் பின்னும் நகர முடியாமல் 2 மணி நேரம் நின்றிருக்கிறது. வண்டியிலிருந்த அண்ணன் செல்வராஜ் உள்ளிட்ட 7 பேர் வண்டியை விட்டு இறங்கி என்ன நடக்கிறது என்று பார்க்கப் போயிருக்கிறார்கள். சிறிது நேரத்தில் பிரச்சனை அதிகமானது. வண்டி மீது கல்லால் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். கண்ணாடிகள் உடைந்து போனதால் அங்கு வண்டியை நிறுத்த இயலாதநிலை. வெளியில் போனவர்கள் எப்படியும் தப்பித்து வந்து விடுவார்கள் என்று கருதி நாங்கள் மட்டும் திருப்பிக் கொண்டு சென்றோம். வழி நெடுக கல்லால் அடித்தார்கள். உணவுக்கு கொண்டு சென்ற மூடியை (பேசின்) வைத்து மறைத்துக் கொண்டு தப்பிச் சென்றோம். வரும் வழியில் எங்கள் கூட வந்த ராமச்சந்திரன் என்பவர் வெளியே போன அனைவருக்கும் போன் செய்தார். அப்போது செல்வராஜ் அண்ணன் போன் மட்டும் ரிங் போய்க் கொண்டே இருந்தது. எடுக்கவில்லை.
இரவு 8 மணியளவில் பாண்டிச்சேரியை நெருங்கும்போது ராமச்சந்திரன் செல்லுக்கு அண்ணன் நம்பரிலிருந்து போன் வந்தது. அதிலிருந்து பேசியவன், டேய் ஒங்க ஆள வெட்டிக் குமிச்சி போட்டுருக்கோம் தைரியம் இருந்தா வந்து அள்ளிக்கங்கடா வன்னியத் தே... பசங்களா என்று சொல்லி இருக்கிறான்.
இது உண்மையா? செல்லை திருடிகிட்டு எவனாவது இப்படி பேசுறானோ என்று சந்தேகம். எங்களால் நம்பவும் முடியல நம்பாம இருக்கவும் முடியல.
இதற்குப் பிறகு தொடர்பே இல்லை. காவல்துறையினருடன் வருவாய்த்துறை அதிகாரிகள் செல்வராஜின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் மருத்துவமனையில் போஸ்ட்மார்ட்டம் செய்திருக்கிற செய்தி கேள்விப்பட்டு உடலை வாங்கி வந்திருக்கிறார்கள்.


செல்வராஜின் தம்பி செல்வம் சிபிஐ விசாரணை கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட்டிருக்கிறார்.

தலை, கைகளில் வெட்டுப்பட்ட
அரியலூர் மாவட்டம்
சிறுகடம்பூர் லெட்சுமணன் சந்திப்பு
10.5.2013 இரவு 8 மணி

சிறுகடம்பூரில் இருந்து நண்பர்களுடன் மாமல்லபுரம் விழாவுக்குச் சென்றவர் லெட்சுமணன் வயது 25. மரக்காணத்திற்கு கொஞ்ச தூரத்தில் சாலை மறியல் நடந்ததால் வேன் நிறுத்தப்படுகிறது. இறங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறார். சாலையின் இருபுறமும் யூக்கலிப்டஸ் தோப்பு. அப்போது இவர் தலையில் ஒருவர் தாக்கியதால் மயக்கமடைந்து விழந்து விட்டிருக்கிறார். சிறிது நேரம் கழித்து மயக்கம் தெளிந்து பார்த்த போது தலை கைகளில் வெட்டுக் காயங்கள்.. தட்டுத் தடுமாறி எழுந்து கொஞ்ச தூரம் சென்று மறுபடியும் மயங்கி விழுந்திருக்கிறார். மயங்கி விழந்தவரை போலீஸ் அடித்திருக்கிறார்கள். அதைப் பார்த்த இவர் உடன் சென்ற குமார் ஓடிச் சென்று அவரை தூக்கி இருக்கிறார். அவரையும் போலீசார் லத்தியால் தாக்கி இருக்கிறார்கள். போலீஸ் அடியை தாங்கிக் கொண்டு லட்சுமணனை தூக்கிக் கொண்டு வந்திருக்கிறார். பிறகு அனைவரும் சேர்ந்து இவரை அருகில் உள்ள காலாபட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். சீரியஸான கேஸ் எனவே பாண்டிச் சேரி அழைத்துச் செல்லுங்கள் என்று குளுக்கோஸ் மட்டும் ஏற்றி அனுப்பி விட்டார்கள்.

அங்கிருந்து புதுவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். அங்கே கூடி இருந்த சிலர் மாநாட்டுக்கு வந்தவங்களாடா? என்று மருத்துவனையில் சேர்க்க விடாமல் பிரச்சனை செய்ய தொடங்கி இருக்கிறார்கள். அவர்களிடம் விபத்தில அடிபட்டு விட்டது என்று பொய் கூறி மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள். அங்கே இரண்டு நாட்கள் தங்கி இருந்து விட்டு சிகிச்சை சரியில்லாததால் அதன்பிறகு திருச்சி கே.எம்.சி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நலம் தேற குறைந்தது இரண்டு மூன்று மாதங்கள் ஆகும் என்கிறார்களாம் மருத்துவர்கள்.

நக்கம்பாடி செல்லப்பெருமாள்
குடும்பத்திற்கு ஆறுதல் கூறினோம்.

நக்கம்பாடி செல்லப்பெருமாள் ராமதாசு கைது அதிர்ச்சி தாங்காமல் 6.5.2013 அன்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார். 10.5.2013 அன்று இரவு 10 மணியளவில் அவரது குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறினோம்.

வடலூர் வினாயகமூர்த்தி குடும்பத்தினரை
11.5.2013 மதியம் 1 மணிக்கு சந்தித்து
ஆறுதல் கூறினோம்.

க.வினாயகமூர்த்தி வயது 42. வடலூரில் பார்வதிபுரத்தில் குடியிருக்கிறார். வடலூர் நகர வன்னியர் சங்க செயலாளராக இருக்கிறார். விவசாயி. இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள். மகன் +1 படிக்கிறான். இன்னொரு மகன் 9ஆம் வகுப்பு. மகள் 8ஆம் வகுப்பு படிக்கறார்.

இவர் இவரது நண்பர்களான கோபி; கொளஞ்சி; ரிசிகேசன்; சுப்பிரமணி ஆகியோருடன் பேருந்தில் சென்றிருக்கிறார்கள்.
கல்வீச்சில் பலமாக மண்டையில் அடிபட்டதால் - வலது பக்க கைகால் வரவில்லை. பேச்சும் வரவில்லை. வலது தோள்பட்டையும் இறங்கியுள்ளது. கலவரத்தில் அடிபட்டதாகச் சொன்னால் மருத்துவமனையில் சேர்க்க மறுத்துவிட்டார்கள்இ அதனால் விபத்து என்று கூறி முதலில் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று, திருப்தி இல்லாததால் -
மகாத்மாகாந்தி மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மருத்துவ செலவுக்கு கடன் வாங்கிதான் பார்த்து வருகிறார்கள்.

வடலூர் சிறுதொண்டமாதேவி
மாணவர் வீரமணி

சிறுதொண்டமாதேவி தமிழ்வாணன் மகன் வீரமணி 20 வயது இளைஞர் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் பிபிஏ., இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர். இவர் விழாவுக்கு சென்று கலவரத்தில் சிக்கிக் கொண்டு துப்பாக்கி சூட்டில் காலில் குண்டு பாய்ந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தவரை -போலீஸ் டிஸ்சார்ஜ் செய்யச் சொல்லி வற்புறுத்தி அழைத்து வந்து, காவல்துறை துணை ஆய்வாளரை கத்தியைக் காட்டி மிரட்டியதாக சட்டப்பிரிவு307இன் கீழ் கொலை முயற்சி வழக்கு போட்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டம்
கோலியனூர் ஞானவேல்
வன்னியர் சங்க ஒன்றிய செயலாளர்.

இவர் வயது 28 கார் மெக்கானிக்காக வேலை செய்கிறார். மரக்காணம் பகுதியில் கலவரத்தில் சிக்கிக் கொண்ட போது தடியடிபட்டு தப்பி ஓடியபோது நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பின்புறம் இடுப்புக்கு கீழே வலது புறத்தில் ஒரு குண்டும்; வலது கால் முட்டிக்கு கீழே ஒரு குண்டும் பாய்ந்திருக்கிறது. இந்த இரண்டு குண்டுகளும் இன்னும் வெளியே எடுக்கப்படாமல் இருக்கின்றன. கணுக்கால் அருகே பாய்ந்த மற்றொரு குண்டு; துளைத்துக் கொண்டு வெளியேறிவிட்டது.

ஜிப்மர் மருத்துவமனையில் தங்கி சிகிக்சை பெற்று வந்தவரை சிகிச்சை தொடரமுடியாமல் காவல்துறை நெருக்கடி கொடுத்து - மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி பின்பு அவரை கைது செய்து 12 பிரிவுகளில் வழக்குப் போட்டு சிறையில் அடைத்திருக்கிறது. 28 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு தற்போது பெரம்பலூர் காவல் நிலையத்தில் தினமும் கையயழுத்து போடவேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் வெளி வந்திருக்கிறார்.

திருக்கோவிலூர் வட்டம்
மேலமங்கலம் சீனு என்கிற சீனிவாசன்

இவரது காலில் குண்டு பாய்ந்துள்ளது. கோலியனூர் ஞானவேலுவும் இவரும் ஜிப்மரில் மருத்துவம் பெற்று வந்தபோது இவரையும் ஞானவேலுவைப் போலவே மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி வைது செய்து வழக்குப் போட்டு சிறையில் அடைத்திருக்கிறது காவல்துறை. இவரும் பெரம்பலூர் காவல் நிலையத்தில் தினமும் கையயழுத்துப் போட்டு வருகிறார்.

நமக்குத் தெரிய வந்த கொடுமைகள் இவை..
நமக்குத் தெரியாதது இன்னும் எத்தனைகளோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக