வெள்ளி, 28 ஜூன், 2013

செஞ்சிப் பெரியவர் குலசேகரன் நீங்காத நினைவு..


“அச்சமில்லை ஆசிரியர் இறைவனா?”
“ஆமாங்க.. நீங்க யாருங்க?”
“நான் செஞ்சி குலசேகரன். என் மக வீட்டுக்கு சென்னைக்கு வந்திருக்கிறேன் அச்சமில்லை இதழுக்கு 1000 ரூபாய் தர வேண்டும் வந்து வாங்கிக்க முடியுங்களா?”
“நானும் வன்னியர் மகாசங்கத் தலைவர் பலராமனும் ‡ திருக்கழுங்குன்ற பள்ளி நிகழ்ச்சிக்கு புறப்பட்டுக் கொண்டிருக்கிறோம். நாளை வந்து வாங்கிக்கலாமா?”
“உங்களைப் பார்த்து இந்தப் பணத்தை கொடுத்துவிட்டு நான் செஞ்சிக்குப் போகணும்.. எனக்கு வயது 86. இல்லேன்னா நானே நேரில் வந்து கொடுத்துடுவேன்..”

-சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்குள் நடந்த தொலைபேசி உரையாடல் இது.
வயது 86 என்றதுமே நான் நெகிழ்ந்து விட்டேன். இந்த வயதில் அச்சமில்லை இதழுக்கு ரூ 1000/- தர ஆர்வமா என்பதே என் நெகிழ்ச்சிக்கு காரணம்.
“ஐயா, இப்போதே நேரில் வந்து விடுகிறேன்” எனச் சொல்லிவிட்டு; நானும் மகாசங்கத் தலைவர் பலராமனும் சைதாப்பேட்டையில் உள்ள அவரது மகள் வீட்டுக்கு சென்று அவரைச் சந்தித்தோம்.

நாங்கள் உடனே அவர் வீட்டுக்குப் போனதில் அவருக்கு மகிழ்ச்சி. எங்களுக்கு அவரைப் பார்த்ததே பெரும் மகிழ்ச்சி.
எங்கள் நலம் குறித்த விசாரணைகளுக்குப்பின் ‡ தேனீர் கொடுத்து உபசரிப்பு. “நீங்கள் திருக்கழுங் குன்றம் நிகழ்ச்சிக்குப் போகும் அவசரத்தில் இருப்பீர்கள். நீண்ட நேரம் பேச இது நேரமில்லை. இதழ் சிறப்பாக வருகிறது. விடாமல் கொண்டு வாருங்கள்” என்று ஒரு கவரை எடுத்துக் கொடுத்து, இது என் சிறு உதவி என்றார்.

“ஐயா, அச்சமில்லை ஆயுள் சந்தாவே ரூ600தான் இந்த வயதில் 1000 ரூபாயா” என்றேன்?

“இது என் ஆயுள் சந்தாவோ? அச்சமில்லை ஆயுள் சந்தாவோ இல்லை. இதழ் தொடர்ந்து வர என்னாலான சிறு உதவி” என்றார். மேலும் இது குறித்து என்ன பேச?
நாங்கள் விடைபெற்றோம்.

திருக்கழுங்குன்றம் நிகழ்ச்சி முடிந்து இரவு வீடு வந்ததும்...
“செஞ்சி குலசேகரன் என்ற பெரியவர் ஒருவர் வந்து ரூ 400/- கொடுத்து விட்டு உங்களோடு பேசிக் கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்த ஆட்டோவிலேயே போய்விட்டார்” என்றார் என் மனைவி.

எதுக்கு இது என்று ஒன்றுமே புரியவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்டு, “இறைவன்” என்றதுதான்... “ஒரு கவரை கொடுத்து ரூ1000/‡ என்று சொன்னேன் இல்லயா? உங்களை அனுப்பிட்டு பார்த்தால் பையின் ஒரு மூலையில் ரூ400 அப்படியே கிடந்தது..”

“அதனால என்னங்கய்யா? அதுக்காக என் வீடுவரை அலையணுமா?”
“அப்படி இல்லைங்க தம்பி.. ஆயிரம்னு சொல்லிட்டு 600 கொடுத்தா நீங்க என்ன நினைப்பீங்க? நீங்க நினைக்கிறது இருக்கட்டும்.. அது நாணயமில்ல இல்லயா? அதனாலதான் உடனடியா வீட்டுக்கு வந்து கொடுத்தேன்” என்றார். அவர் மீதான மரியாதை மேலும் உயர்த்தியது இச்சம்பவம்.

---
அதற்குப் பிறகு-

அவரது மகன் வேலைபார்த்த சிதம்பரம்; புதுச்சேரி என ஊர் ஊராக அவருடன் குடி பெயர்ந்த போதெல்லாம், தவறாமல் முகவரி மாற்றம் குறித்து கடிதம் எழுதுவார். இது அச்சமில்லை மீது அவர் கொண்ட தனியாத ஆர்வத்துக்கான அடையாளம்.

இதற்குப் பிறகும் -
மூன்று நான்கு முறை 400, 500 என அவ்வப்போது மணியார்டரில் பணம் அனுப்புவார். வேண்டாம் என்று ஓரிரு முறை சொல்லியும் அவர் கேட்கவில்லை.

முதல் சந்திப்புக்கு சுமார் 10 வருடத்திற்கு பிறகு, 2012 டிசம்பரில் ஒரு கடிதம் எழுதி இருந்தார். அதில் தனக்கு சிறு அறுவை சிகிச்சை நடந்ததாகவும் அதில் உடல்நலம் தேறிவிட்டாலும் மருத்துவர்கள் வெளியூர் பயணம் கூடாது என்று தடுப்பதாகவும் எழுதி விட்டு; உங்களைப் பார்க்க வேண்டும் போல் இருக்கிறது வர முடியுமா என்று எழுதியிருந்தார். “இன்னும் ஒரு வாரத்தில் 22.12.2012 அன்று வீரபாண்டியார் படத்திறப்பு நிகழ்ச்சிக்கு விழுப்புரம் வரவேண்டியுள்ளது அப்போது உங்களைச் சந்திக்கிறேன்” என தொலைபேசியில் தெரிவித்தேன்.

படத்திறப்பு நிகழ்ச்சியில் வன்னியர் மகாசங்கத் தலைவர் பலராமன் அவர்களும் கலந்து கொள்வதால் 22.12.2012 அன்று மதியம் செஞ்சிக்குப் போய் அவரைச் சந்தித்தோம். நாங்கள் 7 பேர் இருந்ததால், உணவு விடுதியில் உணவினை முடித்துவிட்டு சென்றோம். மிகவும் கோபித்துக் கொண்டார். “எத்தனை பேர் இருந்தால் என்ன? இங்குதானே சாப்பிட்டிருக்க ¼ண்டும்?” என்றார்.

பிறகு அவரது உடல்நலம் குறித்தும் பிற பொது செய்திகள் குறித்தும் 15 நிமிடம் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது பலராமன் அவர்கள் “டிசம்பர் 30ஆம் தேதி வன்னியர் மகாசங்க ஆண்டு விழா நடக்கிறது” என்று சொன்னவுடன்... “நான் அவசியம் வருகிறேன்” என்று சொல்லிவிட்டு “மகாசங்கத் தலைவர் பலராமன் எப்படி இருக்கிறார்” என்று கேட்டதும், “இவர்தாங்க பலராமன்” என்றதும் அவரது கையைப் பிடித்துக்கொண்டு “ரொம்ப நாளைக்கு முன்பு உங்க ஸ்டீல் பட்டறைக்கு வந்து உங்களோடு பேசியிருக்கிறேன்.. உருவம் மறந்து போச்சு” என்றார்.

இவருடனான என் இரண்டு சந்திப்பிலும் மகாசங்கத் தலைவர் பலராமனும் உடனிருந்தது எதிர்பாராத ஒரு வாய்ப்பு.

அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டோம்.
“தம்பி கொஞ்சம் நில்லுங்க” எனச் சொல்லி என்னை நிறுத்திவிட்டு தலையணை உறைக்குள் எதையோ தேடி எடுத்து என் கைக்குள் திணித்தார்.
பார்த்தால் 500 ரூபாய் நோட்டு.
“இந்த அன்புக்கும் முன்னால் கோடிகளுக்கும் மதிப்பு குறைவே” என்று பேசிக்கொண்டே நடந்தோம்.

யார் துணையும் இல்லாமல் கார் வரை வந்து எங்களை வழியனுப்பி வைத்தார்.

அந்தக் காட்சி மறையவில்லை..
அவர் மறைந்து விட்டார் என்கிறார்கள்..

நீங்கா நினைவாக அவர் என்றும் இருப்பார்.
- ந.இறைவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக