வெள்ளி, 28 ஜூன், 2013

வன்னியகுல சத்திரிய மகா சங்க 125வது ஆண்டு விழா இசைநிகழ்ச்சி அனுபவங்களும் சிந்தனைகளும்..

வன்னியகுல சத்திரிய மகாசங்கம் 1888இல் தோற்றுவிக்கப்பட்டது. அதன் வயது இப்போது 125. வரும் டிசம்பரில் மகாசங்கத்தின் 125வது ஆண்டுவிழாவைச் சிறப்பாக ஒருநாள் மாநாடாக நடத்துவது என செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

அந்த மாநாட்டில் வன்னிய சமூகச் சான்றோர்கள், ஆன்மீகவாதிகள், படைப்பாளிகள், அரசியல்வாதிகள், சமூகச் சிந்தனையாளர்கள்,  சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பற்றிய விபரங்களைக் கொண்ட வன்னியர் சமூக வரலாற்று ஆவணமாக 500 பக்கத்திற்கும் மேற்பட்ட மாநாட்டு மலர் ஒன்றை வெளியிடுவதெனவும் செயற்குழுவில் முடிவானது.
இதற்கான நிதி திரட்ட இசைநிகழ்ச்சி ஒன்றை நடத்துவது; டிக்கெட் விற்பனை, நன்கொடை ஆகியவை மூலம் நிதி திரட்டுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இதன்படி -
லெட்சுமன் சுருதி இசை நிகழ்ச்சியை 1.6.2013 அன்று தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் நடத்தினோம்.

அரங்கம் நிறையவில்லையே என்ற ஒரு குறையைத் தவிர மற்றபடி இசைநிகழ்ச்சி நிறைவாகவே நடந்து முடிந்தது.
அரங்கம் நிறையவில்லை என்ற தகவலில் - நிதி திரட்டுவதில் நாங்கள் வெற்றி பெறவில்லை என்ற செய்தியும் அடக்கம்.
டிக்கெட் புத்தகத்தை வாங்கிச் சென்ற பெரும்பாலோர் அப்படியே திருப்பித் தந்து விட்டதால்; இதில் சொல்லிக் கொள்ளும்படி அனுபவம் ஒன்றும் பெரிதாக இல்லை.

ஆனால் நன்கொடை பெறுவதில் நிறைய அனுபவங்கள்; முன்னாள் சட்டமன்ற உறுப்பினர என்ற வகையிலும்; தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயலாளர் என்ற வகையிலும் தனக்குப் பழக்கமான சமுதாய உணர்வாளர்களிடம் மட்டும் நன்கொடை கேட்டுக் கொண்டிருந்தார் பலராமன்.
சென்ற ஆண்டு சேலம் சென்றிருந்தபோது சேலம் வாகீஸ்வரி வித்யாலயா பற்றி மாலைப் பத்திரிகை ஒன்றில் இரண்டு பக்க கலர் விளம்பரம் வந்திருந்தது. பள்ளிக்கட்டிடம் முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டது என்றும்; பள்ளி சர்வதேச தரத்திலானது என்றும் விளம்பர செய்தி சொல்லியது.

இந்த விளம்பரத்தைப் பார்த்ததிலிருந்து இந்த பள்ளியின் உரிமையாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.ஆர்.சேகரன் குறித்த பெருமித உணர்வு. முகம் தெரியாத அந்த மனிதன் மீது நான் இவ்வளவு பெருமித உணர்வு கொண்டதற்கு - நம்மவரில் ஒருவரான இவர் கொங்கு வேளாளர் பள்ளிகளுக்கு இணையான ஒரு பள்ளியை நடத்துகிறார் என்பதே காரணம்.
இந்த அதீத பெருமை உணர்வு காரணமாக - ஆர்.ஆர்.சேகரனிடம் நிதி கேட்கும்படி பலராமனை வற்புறுத்தினேன்.

அவரோடு அவ்வளவாகப் பழக்கமில்லை எனறு சொல்லிவிட்டு மிகுந்த தயக்கத்தோடேயே நன்கொடை கேட்டார்.
சேலம் வரும்போது வாங்க தருகிறேன் என்றாராம். நாம்தான் நன்கொடை கேட்கத் தயங்குகிறோம். கேட்ட எல்லோருமே தருகிறேன் என்கிறார்கள் என பலராமன் மிகுந்த மகிழ்ச்சியுடன் கூறினார்.

7.5.2013 அன்று தலைவர் பலராமன்; துணைத்தலைவர் பொன்.ஆறுமுகம், நான் மூவரும் சேலம் சென்றோம். காலையில் இருந்து ஒவ்வொருவராக தொலைபேசியில் தொடர்புகொண்ட போது ஒவ்வொருவரும் ராமதாசு கைது கலவரம் தொடர்பாக போலீஸ் தொந்தரவுக்குப் பயந்து வெளியூரில் இருக்கிறோம் என்று சொல்லி வைத்தாற்போல் அனைவரிடம் இருந்தும் ஒரே பதில். ஆர்.ஆர்.சேகரனும் வெளியூரில் இருப்பதாகவும் 2 நாட்கள் கழித்தே வர இருப்பதாகவும் சொன்னார்.

8.5.2013 அன்று தருமபுரி சென்றோம். ஹரிகிருஷ்ணன் என்ற காங்கிரஸ் தோழர் DNC, DNV என்ற தொழிலதிபர்களிடமெல்லாம் அழைத்துச் சென்றார். ஹரிகிருஷ்ணனிடம் கொடுத்து அனுப்புகிறோம் என்ற பதிலையே சொன்னார்கள்.

சேலம், தர்மபுரி சந்திப்புகளில் பணம் ஏதும் பைக்கு வரவில்லை என்றாலும்.. நம்பிக்கைகள் மட்டும் நிறைந்து வழிந்த பைகளோடு சென்னை திரும்பினோம்.
மீண்டும் 20.5.2013 அன்று சேலம் தருமபுரி போவதென திட்டமிட்டபோது. நான் வரவில்லை நீங்கள் போய் வாருங்கள் எனக்கூறிவிட்டார் பலராமன்.
நானும் பொன்.ஆறுமுகமும் திட்டமிட்டபடி 20.5.2013 அன்று சேலம் சென்றோம். தொலைபேசியில் தொடர்பு கொண்டவர்களில் சிலர் நீங்கள் வரவேண்டாம் நாங்களே வருகிறோம் என்று சொல்லி இரவு வரை காக்க வைத்தார்கள். ஆர்.ஆர்.சேகரனைத் தொடர்பு கொண்டபோது வெளியூரில் இருக்கிறேன் நாளை வருகிறேன் என்றார்.

சேலத்தில் எங்கள் அமைப்பைச் சேர்ந்த தோழர் இரவு எங்களைச் சந்திக்க விடுதிக்கு வந்தார். எல்லாம் தோல்வியாக இருக்கிறது, சேகரன் தான் நாளை காலை வந்து விடுவதாகக் கூறியுள்ளார். அவர்தான் நம் ஒரே நம்பிக்கை என்றேன். சேலம் தோழர் சிரித்தார். ஏன் சிரிக்கிறீர்கள் என்றேன். அவரைச் சந்திப்பது வீண் வேறு யாரையாவது பாருங்கள் என்றார்.

ஏன் என்றேன்.

கடந்த 4 வருடமாக அச்சமில்லை பத்திரிகையை அவரிடம் நேரில் கொடுத்து ஆயுள் சந்தா கொடுங்கள் என்று கேட்டு வருகிறேன். ஒவ்வொருமுறையும் அடுத்த மாதம் தருகிறேன் என்று சொல்வாரே தவிர தந்ததே இல்லை.
போனவருடம் இறுதியில் கேட்டபோது. நீ கொடுக்கிற பத்திரிகையை படிக்கிறதுக்காக எடுத்து எடுத்து வைக்கிறேன், யாராவது வருகிறவர்கள் தூக்கிக் கொண்டு போய் விடுகிறார்கள். படிக்கவே முடியலயே தம்பி என்றார்.
இப்படி சொல்கிறாரே என்று -

என்னிடமிருந்த 15 அச்சமில்லை பத்திரிகைகளை பைண்டிங் செய்து கொண்டுபோய் கொடுத்து படிங்கய்யா என்றேன். அதற்குப் பிறகும் 3 பத்திரிகைகளை கொடுத்துவிட்டேன். இதுவரை தருகிறேன் தருகிறேன் என்று இழுத்தடிக்கிறாரே தவிர தந்த பாடில்லை. ஒரு 1200 ரூபாய் ஆயுள் சந்தா தராதவரா உங்களுக்கு நன்கொடை கொடுக்கப் போகிறார்? என்றார்.
எல்லோரும் அச்சமில்லை இதழை ஏற்பார்கள் என்று சொல்ல முடியாது. சிலருக்குப் பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. எனவே இதை வைத்து மகாசங்கத்திற்கு நன்கொடை தரமாட்டார் என்ற முடிவுக்கு வர வேண்டாம். நாளை காலை 9 மணிக்கு எங்களோடு வந்து அவர் அலுவலகத்தைக் காட்டுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டேன்.

இரவெல்லாம் எனக்குத் தூக்கம் வரவில்லை.

1998 நவம்பர் முதல் வாரம் என்பதாக நினைவு. அச்சமில்லை முதல் இதழை நம் சமூகத் தலைவர் ஒருவரிடம் நேரில் கொடுக்க வேண்டும் என்பது என் அடங்கா ஆசையாக இருந்தது. அவர் ராணிப்பேட்டையில் தன் அமைப்பின் பொதுக்குழு கூட்டம் நடத்தும் செய்தியைப் பார்த்து, நேரே ராணிப்பேட்டைக்குப் போய் அவரது கூட்டத்தில் கலந்து கொண்டு வாய்ப்பு கிடைக்கும் போது அச்சமில்லை இதழை கொடுப்போம்  என்று காலையில் எழுந்து பேருந்தைப் பிடித்து ‡ ராணிப்பேட்டைக்குப் போய்விட்டேன். கூட்டம் நடக்கும்போது கொடுக்க சந்தர்ப்பம் ஏற்படவில்லை. அவரது அமைப்பின் மாவட்ட செயலாளர் வீட்டில் மதிய உணவு சாப்பிடுகிறார். அங்கே ஓய்வெடுப்பார் அப்போ அங்கே போய் கொடுங்கள் என ஒருவர் வழிகாட்டினார்.

சமுதாயத் தலைவர் மதிய உணவிற்குப் பின் வராந்தாவில் உட்கார்ந்து ஓய்வாகப் பேசிக்கொண்டிருந்தார்.
உள்ளே போய் வணக்கம் சொல்லிவிட்டு நம் சமூகத்திற்காக இந்த இதழைத் தொடங்கி இருக்கிறோம். உங்களிடம் முதல் இதழை நேரில் கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சென்னையில் இருந்து வந்திருக்கிறேன் என்றேன். ஒன்றுமே பேசவில்லை.

உங்களைப் பற்றி ஒரு பொதுவுடைமைவாதி செய்த விமர்சனத்திற்கு மறுப்பு வைத்திருக்கிறோம் என்றேன். அதற்கும் பதில் பேசவில்லை. புத்தகத்தை பிரிக்காமலேயே முன் அட்டையையும், பின் அட்டையையும் திருப்பி திருப்பி பார்த்தார். போகச் சொல்வது போல் தலையசைத்து சைகை காட்டினார். புரியாமல் நின்றேன். அய்யா போகச் சொல்லிவிட்டாரே அப்புறம் ஏன் நிற்கிறீர்கள் போங்கள் என்றார் ஒருவர் கழுத்தைப் பிடித்து தள்ளாத குறையாக.

அவரது அலட்சியம் என்னை அணு அணுவாக அவமானப்படுத்தியது.
வெளியே வந்து எனக்கு நானே ஒரு சபதம் செய்துகொண்டேன். இனி எக்காரணம் கொண்டும் இந்த ஆளை நான் பார்க்க மாட்டேன். இந்த ஆளே அழைத்தாலும் இந்த ஆளைப் பார்க்க போகமாட்டேன் என்பதுதான் அந்த சபதம்.

அவருக்கு அவருடைய கர்வம் முக்கியம் என்றால், அதைவிட எனக்கு என் சுயமரியாதை முக்கியம்.

இடைப்பட்ட 10 ஆண்டுகளில் நான்குமுறை என்னை ஆள் மூலம் அழைத்தார். நான்கு முறையும் அவரைப் பார்க்க மறுத்துவிட்டேன். 
நாம் இப்படித் தன்மானத்தோடு இருக்கும் போது-

நமது அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் இப்படி அவமரியாதைக்கு ஆளாகலாமா என்ற வருத்தம் ஏற்பட்டது.

காலையில் சேலம் தோழர் வந்தவுடன் இரவு என் தூக்கத்தை கெடுத்த இந்த நிகழ்ச்சியைச் சொல்லி - இனி நீங்கள் அச்சமில்லை இதழைக் கொடுப்பதற்காக எந்த பணக்காரன் வீட்டுப் படியும் ஏறக்கூடாது, இந்த பத்திரிக்கை எந்த பணக்காரனின் தயவிலும் நடக்கவில்லை. 96 வயது செஞ்சிப் பெரியவர் குலசேகரன் போன்றோரின் அளவில்லா அன்பாலும், ஒரே இதழைப் படித்து விட்டு ஆயுள் சந்தா அனுப்பி வாழ்த்தும் அந்த முகம் தெரியாத வள்ளல்களாலும்தான் வாழ்கிறது -

காசு கொடுத்து வாங்க முடியாத ஏழைகள் கேட்டால் இலவசமாகக் கொடுங்கள். பள்ளி; கல்லூரி பிள்ளைகளுக்கு இலவசமாகக் கொடுங்கள் என்று கூறிவிட்டு புறப்படலாம் என்றேன்.

எங்கே? என்றார்.

ஆர்.ஆர்.சேகரனைப்பார்க்க, என்றேன். இவ்வளவும் சொல்லிவிட்டு திரும்ப அவர் வீட்டுக்குப் போகவேண்டும் என்கிறீர்களே என்றார்.

அச்சமில்லைக்கு அவர் கொடுக்கவில்லை என்பதற்காகவே மகாசங்கத்திற்கும் அவர் கெடுக்க மாட்டார் என நாமே முடிவு செய்வது சரியல்ல. வாருங்கள் போகலாம் என்றேன்.

ஆர்.ஆர்.சேகரன் அலுவலகத்திற்குப் போனோம். அவரது மேனேஜர் இருந்தார். சார் ஊரில் இல்லைங்க என்றார். இல்லை அய்யா எங்களை காலையில் வரச்சொன்னார். அதனால்தான் வந்திருக்கிறோம் என்று சொன்னதும். மேனேஜர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். ஊரிலிருந்து இன்னும் வரவில்லை என்று சொல் என அவர் சொல்வது எங்களுக்கும் கேட்கிறது. இல்லை சார் நீங்கள் ஊரிலிருந்து வந்துவிட்டதை தெரிந்துகொண்டுதான் அவர்கள் வந்திருக்கிறார்கள் என்றார் மேனேஜர்.

இன்னும் இரண்டு நாள் ஆகும் என்று சொல்லி அனுப்பித் தொலய்யா என கோபமாகக் கத்துவது எங்களுக்கும் கேட்கிறது.
மேனேஜர் எங்களைப் பரிதாபமாகப் பார்க்கிறார்.
நாங்கள் அவரைப் பரிதாபமாகப் பார்க்கிறோம்.
பணக்காரப் பிச்சைக்காரன் என்று சொல்லிவிட்டு வெளியேறுகிறோம்.

-

அவர் சம்பாதித்த பணம். நன்கொடைகள் தருவதும் தர மறுப்பதும் அவரவர் விருப்பம் உரிமை.

இதற்கெல்லாம் தர முடியாது என்று சொல்கிற துணிவும்; நேர்மையும் அவனிடம் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களை நான் மதிக்கிறேன்.இன்றுவா நாளைவா என்று இழுத்தடித்து முக்காடு போட்டு ஒளிந்து கொள்ளும் இப்படிப்பட்டவரெல்லாம் - பாடுபட்டு சம்பாதித்த பணத்தை நீண்ட நாள் காக்க முடியாது என்று என் ஆற்றாமையை, கோபத்தை நண்பர்களிடம் கொட்டித் தீர்த்தேன்.

இப்படி இருந்தா நம்ம சமுதாயம் எப்படி அய்யா வளரும்? என்றார் தோழர்.

இந்த கோடிகளைக் காக்கும் பூதங்களால் இந்த சமுதாயம் என்றும் வளர்ந்ததில்லை. ஒருநாளும் வளராது.

புன்னமை தியாகராயநாயகர் என்பவர் கொத்தனார் மேஸ்திரி. அவர் வியர்வை சிந்தி சம்பாதித்த சொத்தை மகாசங்கத்துக்குப் பள்ளிகள் நடத்துவதற்காக எழுதி வைத்துவிட்டு போனார்.

அவர் பெயரில்...

காஞ்சிபுரத்தில் புன்னமை தியாகராயநாயகர் மேல்நிலைப்பள்ளி, திருக்கழுங்குன்றத்தில் புன்னமை தியாகராயநாயகர் உயர்நிலைப்பள்ளி நெமேலியில் புன்னமை தியாகராய நாயகர் ஆரம்பப்பள்ளி, என பள்ளிகள் நடக்கின்றன. ஒவ்வொரு வருடமும் இந்தப் பள்ளிகளிலிருந்து அவரது பெயரைச் சொல்லிக்கொண்டு இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள்  பள்ளிப் படிப்பை முடித்து வெளியேறுகிறார்கள்.

புன்னமை தியாகராயர் போன்ற குலதெய்வங்களின்  காவலில்தான் இந்த சமுதாயம் வாழ்கிறது, வளர்கிறது, ஆர்.ஆர்.சேகரன்களால் அல்ல  என்றேன்.

ஒரு செய்தி,
ஒரு குறள்,
ஒரு வேண்டுகோள்.


இது செய்தி:

தருமபுரி கலவரம் நடப்பதற்கு சில மாதங்கள் முன்பு ஆரம்பித்து நடந்த சம்பவம் இது.
தருமபுரியைச் சேர்ந்த மூன்றெழுத்துப் பெயர் கொண்ட தொழிலதிபர் பல கோடிக்கு அதிபதி.

அவர் மகள் சமீபத்தில் ஒரு தலித் சமூகத்து வாலிபர் மீது காதல் கொண்டு அவரோடு வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.
இதை தனக்கு நேர்ந்த அவமானமாகக் கருதிய அந்த தொழிலதிபர், இது தொடர்பாக தனக்குத் தெரிந்த அந்த தலித் அல்லாத அதிரடி அரசியல் தலைவரை அணுகினாராம்.

அதன் பின் தலித் கட்சித் தலைவர் ஒருவரும் அணுகப்பட்டார்.
இந்த இரு தரப்பையும் வைத்து இரு குடும்பங்களின் சூழ்நிலைகளையும் விளக்கிப் பேசி அந்த காதல் ஜோடியை சுமூகமாகப் பிரித்து வைக்க இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டார்களாம்.
ஓகோ.. இப்படியா செய்கிறார்கள்? அரசியல் தலைவர்கள்?
சும்மாவா செய்கிறார்கள்?

அந்த தலித் அல்லாத அதிரடிப் பிரமுகர்; தலித் கட்சிப் பிரமுகர் ஆகியோருக்கு தலா 5 கோடி பணம் கொடுத்தாராம் அந்த தொழிலதிபர்.

பத்து கோடி செலவழித்து தன் மகளை மீட்டிருக்கிறார் அந்த தொழிலதிபர்......

இது குறள்:

ஈர்ங்கை விதிரார் கயவர் கொடிருடைக்கும்
கூன் கையர் அல்லாதவர்க்கு.

எச்சில் கையால் காக்காய்கயை ஓட்டாத கயவர்கள்; கையை மடக்கி முகவாய்க்கட்டையை குத்தி உடைக்கும் கொடியவர்களுக்குத்தான் அள்ளி அள்ளிக் கொடுப்பார்கள் என்பது தான் இந்தக் குறளின் கருத்து.

இது வேண்டுகோள்:

கோடிகளைக் காக்கும் பூதங்களே...
பாடுபட்டுத் தேடிய பணத்தை யாரோ அனுபவிக்க கோடி கோடியாய்க் கொட்டிக் கொடுக்கும் பாவிகளே... 

கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்து; ஓடிப்போன உங்கள் மகளை மீட்டாலும், போன மானம் போனதுதானே?

உங்கள் இன்னொரு மகள் மூலமும் உங்களுக்கு இப்படி ஒரு அவமானம் நேராது என்பதற்கு என்ன உத்திரவாதம்?

அப்போதும் உங்கள் மகள்களைக் காக்க பத்து பத்து கோடிகளைக் கொடுத்துக் கொண்டே இருப்பீர்களா?

யாரோ அனுபவிக்கக் கொடுக்கும் இந்தப் பணத்தை நம் சமுதாயம் காக்கும் 100 சமுதாயப் போராளிகளை உருவாக்க ஏன் நீங்கள் செலவழிக்கக் கூடாது?
சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்.. மானம் மரியாதையோடு வாழுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக