சனி, 15 நவம்பர், 2014

வளர்க்க வேண்டிய வன்னிமரம்

வளர்க்க வேண்டிய வன்னிமரம்

இருபதாம் நூற்றாண்டில் உத்திராஞ்சல் மாநிலத்தில் ஒப்பந்தக்காரர்கள் இமயமலைப் பகுதி வனத்தில் உள்ள மரங்களை வெட்ட வந்தபோது, கிராமத்து மக்களே மரங்களை அணைத்து வெட்ட விடாமல் தடுத்த போராட்டமே சிப்கோ இயக்கம். இதுபோல் ஒரு போராட்டம் 18-ஆம் நூற்றாண்டில் மார்வாரி ராஜ்ஜியத்தில் நடந்தது.

கி.பி  1495இல் மராட்டிய வீரன் ஜாம்பாஜி உருவாக்கிய சித்தாந்தம் வன்னி மர வளர்ப்பு. எட்டாண்டு வறட்சியை இலந்தையும் வன்னியும் தாங்கி வளர்ந்ததையும் பஞ்ச காலத்தில் ஒன்றுமே கிடைக்காத சூழ்நிலையில் வன்னிப் பழங்களை உண்டு மக்கள் பசியாறியதையும் எண்ணி பிஷ்ணாய் சித்தாந்திகள் உருவானார்கள். 16 மைல் தூரத்துக்கு வன்னி மரக்காடுகள் உருவாயின.

பின்னர்  250 ஆண்டுகள் கழித்து, மராட்டிய மன்னர் சுண்ணாம்புக் காளவாய்க்கு   வன்னி மரக்காட்டை அழிக்க முடிவு செய்து சிப்பாய்களை அனுப்பினார். பிஷ்ணாய்கள் மரங்களைக் கட்டியணைத்தும் கூட அவர்கள் கொல்லப்பட்டு  

மரங்கள் வெட்டுண்டனவாம். இவ்வாறு உயிர்த்தியாகம் செய்த 363 பிஷ்ணாய்களுக்கும் 363 வன்னி மரங்கள்  1977இல் நடப்பட்டன. வறட்சி தாங்கிப் பாலைவனத்திலும் வளமையை வழங்கிய வரலாறு படைத்த இந்த முள்மரம் இங்கிருக்க எங்கிருந்தோ வந்த வேலிக்காத்தான் நம்மை ஆட்டிப் படைக்கிறதே.

“வம்பார் கொன்றை வன்னி மத்தம் மலர் தூவி.
நம்பாவென்ன நல்கும் பெருமான் உறைகோயில்
கொம்பார் குரவு கொகுடி முல்லை குவிந்தெங்கும்
மொய்ம்பார் சோவை வண்பொடும் மூதுகுன்றே” 
- திருஞான சம்பந்தர்

முதுகுன்றம் என்பது விருத்தாச்சலம். சம்பந்தர் சுவாமிகளால் பாடல் பெற்ற இந்த சிவத் தலத்தில் வன்னியே தல மரம். திருவான்மியூர், திருக்காட்டுப்பள்ளி, திருப்பூந்துருத்தி என்று கணக்கிலடங்கா பல சிவன் கோவில்களில் இதுவே தலமரம்.


வில்வம் இல்லாதபோது வன்னித் தழைகளாலும் சிவனை பூஜை செய்யலாம். வறட்சி தாங்கி வளரும் இம்மரத்தை சிலர் பரம்பு என்பார்கள். வளம் நிரம்பிய பரம்பு மலையில் தானே பாரி வாழ்ந்தான். பாரியை வள்ளலாக்கிய இம்மரத்தை நாம் ஏன் அலட்சியப் படுத்தினோம் என்பது புரியவில்லை.

விவசாயிகளுக்கு மிகவும் சிறப்பான உயிர்வேலியாகும். முள்ளுள்ள இலையுதிர் மரம் என்றாலும் இது அதிவேகமாகப் பக்கவாட்டில் படராமல் மேல்நோக்கிச் செல்லும் இயல்புடையது. இதன் முள் மென்மையானது.  25 அடிக்கு மேல் வளர்வது அபூர்வம். 2 முதல் 3 அடி விட்டம் வரை அடிமரம் பருக்கும். மழைக்காலம் முடிந்த பின் பூக்கும் மஞ்சள் நிறப் பூங்கொத்துக்கள் உருவாகும். மார்ச் முதல் மே வரை கனி கிட்டும். வன்னிப் பழத்தை சதையுடனும் விதையுடனும் பாலை நில மக்கள் விரும்பி உண்பர். குறிப்பாக, ராஜஸ்தான் (மார்வாரி) மக்களுக்கு வன்னி மரம் அவர்களின் உயிர் மரம். ராஜஸ்தானில் ஆடும், ஒட்டகமும் அதிகம் உயிர் வாழ இன்னமும் வன்னி மரங்களே காரணம்.

பஞ்ச காலத்தில் வாழ்வு தரும் வன்னிப் பழங்கள் சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும் புரதச் சக்தி தரும். கால்நடைகளுக்குத் தீவனம். அதிகம் நின்று எரியும் விறகு, பாலை நில மணலில் 60, 70 அடி வேர் ஊடுருவிச் செல்லும், இம் மரத்தின் இலைகள் உதிர்ந்த காட்டில் உள்ள மண்ணைச் சோதனை செய்த போது, ஏராளமான அங்ககப் பொருள்களுடன் எல்லாப் பேரூட்டங்களும் நுண்ணூட்டங்களும் இருந்தன. ஆகவே வன்னியை உயிர் வேலியாக விவசாயிகள் வைத்து வளம் பெறலாம்.

வன்னி மரத்தின் எல்லாப் பாகங்களுமே மருந்துகள். தினமும் ஒரு வன்னிக் கொழுந்தை பூ, காய், பட்டை, வேர் ஆகியவற்றை விழுதாக அரைத்து ஒரு கொட்டைப் பாக்கு அளவு எடுத்து 100 மி.லி. பாலில் கலக்கி வடிகட்டி அருந்தி வந்தால் ஆயுள் விருத்தி ஆகும். நோயில்லாமல் வாழலாம். சொறி, சிறங்கு, கபம், பித்தம் எல்லாம் தணியும். வாதம் நீங்கும்.

வன்னிப் பட்டையை கால் கிலோ எடுத்து பஞ்சு போல் நசுக்கவும்.. ஒரு லிட்டர் விளக்கெண்ணையில் நன்கு காய்ச்சி வடித்து எடுத்துக் கொண்டு தினமும் காலை 25 மி.லி. வீதம் ஒரு வாரம் வரை பெண்கள் அருந்தினால், வெள்ளைப்படுவதும் நீங்கும், கருச்சிதைவு ஏற்படாது. பட்டைக் கஷாயம் தொண்டைப்புண்ணுக்கும் மருந்து.

வன்னிமரம் சிவபெருமானுக்கும் சனி பகவானுக்கும் உரிய மரம். உள்ளுக்குச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்.   பல வகையிலும் பயனுள்ள இம்மரத்தை ஊர்தோறும் வளர்த்து தமிழ்நாட்டில் ஆங்காங்கே அருமையான புதர்க்காட்டை உருவாக்கலாம். வனத்துறையை அணுகினால் விதை அல்லது கன்றுகள் கிட்டும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக