ஞாயிறு, 16 நவம்பர், 2014

அழிக்கப்படவேண்டிய நச்சுமரம் வேலிக்காத்தான் - பெ.பழநிச்சாமி

அழிக்கப்படவேண்டிய நச்சுமரம்
வேலிக்காத்தான்

வேலிக்காத்தான் - சீமை வேலிக்காத்தான், வேலிக்கருவை எனப் பல பெயர்களில் தமிழ்நாட்டின் பல பாகங்களிலும் நிலங்களில் மட்டுமல்லாது காடுகளிலும் மிக வேகமாகப் பரவி வருகிறது. இத்தாவரத்தின் தாயகம் மெக்சிகோ, இந்த நச்சு மரம் தென் அமெரிக்காவிலிருந்து இங்கு பரவி வளர்கின்றது.

இந்த வேலிக்காத்தான் மக்களுக்கும் வேளாண்மைக்கும் எதிரிெயன தாவரவியல் கூறுகின்றது. நிலத்தடி நீர் வளப் பெருக்கத்திற்கு இது எதிரி. நிலத்தடி நீரை 175 அடி வரை தனது வேரை பூமியின் அடியில் செலுத்தி அங்குள்ள நீரையயல்லாம் உறிஞ்சி விடுகின்றது. மேலும் காற்று வெளியில் உள்ள தண்ணீரையும் உறிஞ்சி விடுகின்றது. எனவே இது உள்ள இடம் விரைவில் வறண்ட பிரதேசமாகின்றது.

இது வறண்ட பாலை நிலத்திலும் உவர்ப்பு மண்ணிலும் கூட நன்றாக வளர்கின்றது. சுமார் 50 டிகிரி செல்சியஸ் வெப்பத்திலும்  நன்றாக வளர்கின்றது.

டாக்டர் ஆண்டர்சன் என்பவர் இத்தாவரம், பொருளாதார மற்றும் வேளாண்மை சீர்கேட்டை உண்டுபண்ணுவதாகக் கூறுகின்றார். வேளாண் உற்பத்தி பாதிக்கப்படுகின்றது. மேய்ச்சல் நிலத்தில் உள்ள புல் பூண்டுகள் கூட அழிகின்றன. நீரை உறிஞ்சி பூமியைப் பாலையாக்குகின்றது. கால்நடைகள் இதனை உண்டு நச்சுத் தன்மையால் வயிற்றுப் போக்கு உண்டாகி இறந்து போகின்றன. இவை போன்றவை அவரது கண்டுபிடிப்புகளாகும். 

1950களில் பயிர்களுக்கு வேலியாக அடைக்கலாமென்ற மிகத் தவறான புரிதல் காரணமாக கொண்டு வரப்பட்டது. மிக வேகமாகப் பரவி தமிழக நிலங்களையும் காடுகளையும் அழித்துக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவில், இத்தாவரம் வேளாண்மைக்கு எதிரி என அறிவிக்கப்பட்டு கண்காட்சிகளில் மட்டும் மக்களின் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. 

நீர்மிகு மாநிலம் கேரளா, மிக அதிகமாக தண்ணீர் கிடைக்கின்ற நம் அண்டை மாநிலமான கேரளாவில் முழுமையாக இது அழிக்கப்பட்டு விட்டது. 

கேரளாவில் இவை வேறோடு பிடுங்கி எறியப்பட்டு விட்டன. திரும்ப இவை வளரா வண்ணம் பாதுகாக்கப்படுகின்றது. ஆனால் தமிழ்நாட்டில் விளை நிலங்களில் இவை 25 விழுக்காடு பயிரிட முடியாமல் நிலத்தையே பாழ்படுத்தி   வருகின்றன. 

மழை பெய்யவில்லை எனினும், நிலத்தடி நீரை உறிஞ்சி தனது இலைகளை செழுமையாக வைத்துக் கொள்கின்றது. இதனை எந்த நோயும் பூச்சியும் தாக்குவதில்லை. எந்த இடத்திலும் இது மற்ற தாவரங்களை அழித்து விட்டு வளர்கின்றது.

 வேலிக்காத்தானால் ஏற்படும் தீமைகள் :

 1.நிலத்தை வீணாக்குகிறது.

 2.நிலத்தடி நீரை உறிஞ்சி விடுகின்றது.

 3.விவசாயம் செய்யவிடாமல் எல்லா செடிகளையும் அழித்து விடுகின்றது.

 4.புல் அடியோடு வளரவிடாமல் கால் நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.

 5.இது உள்ள ஊரே நீரின்றி பாலைவனம் போலச் செய்யவல்லமை கொண்டது.

 6.நஞ்சு மிகுந்த முள்ளால் மக்களுக்கும் விலங்குகளுக்கும் ஆபத்து.

 7.நிலத்தடி நீர் குறைவதால் அரிய வகை மூலிகைகள் அழிகின்றன.

 8.பிற தாவரத்துடன் கலந்து இதனை உண்ணும் கால்நடைகள் உயிரிழப்பு மற்றும் வயிற்றுக் கோளாறுகளால் பாதிக்கப்படுகின்றன.

 9.இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி விடுவதால் இதனை சுற்றிலும் வெப்பநிலை அதிகரிக்கின்றது.

வேலிக்காத்தானை அழிக்கும் முறை :

இயந்திரங்களைக் கொண்டும் கூரிய ஆயுதம் கொண்டும் இம்மரங்களை வெட்டி வீழ்த்தி அழிக்கலாம். வெட்டிய பிறகு அதன் வேர்களை வெட்டி எடுத்து முற்றுமாக எரித்து விடுவதே நிரந்தரத் தடுப்புக்கு வழி.

முதலில் காடுகளில் உள்ள இந்த நச்சுத் தாவரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் வனத்துறை பிடுங்கி எறிய வேண்டும். பிடுங்கிய பின்னர் காட்டில், பத்திரமாக மற்ற மரங்களை சேதப்படுத்தாமல், வேர்களை எரித்து முழுமையாக அழிக்க வேண்டும்.  காட்டைக் காப்பாற்றி மழை பெறும் வாய்ப்பை அதிகப்படுத்துவது வனத்துறையினரின் தலையாய கடமை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக