புதன், 12 நவம்பர், 2014

பல்லவர்கள் தமிழரல்லர் என்பது தமிழினத்துக்குச்செய்யும் துரோகம்



பல்லவர்கள் தமிழரல்லர் என்பது
தமிழினத்துக்குச்செய்யும் துரோகம்

டாக்டர் மா.இராசமாணிக்கனார் என்பவர் பல்லவர் வரலாறு என்ற ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் பல்லவர் தமிழர் அல்லர்  என்றும் தமிழரில் வேறுபட்டவர் என்றும் எழுதுகிறார்.

பல்லவர்கள் யார்? பல்லவர்கள் எங்கிருந்து வந்தவர்கள்? என்பதெல்லாம் தெரியவில்லை என்கிறார்.

வின்செண்ட் ஸ்மித் என்கிற இந்திய வரலாற்று ஆசிரியர் தனது  ‘பழைய இந்திய வரலாறு’ என்ற நூலில் பல்லவர்கள் தென் இந்தியர் என்று கூறியுள்ள கருத்தே பெரிதும் ஏற்கத் தக்கதாக இருக்கிறது என்றும் ராசமாணிக்கனார்  எழுதுகிறார்.

பல்லவர்கள் தமிழரல்ல என்று எழுதிவிட்டு;  பல்லவர்கள் தென் இந்தியர் என்ற வின்செண்ட் ஸ்மித் கூறும் கருத்தே ஏற்கத் தக்கதாக இருக்கிறது என்று ராசமாணிக்கம் கூறுவதிலிருந்து இவரது இந்தக் கருத்துக்கு ஏதோ உள்நோக்கம் இருக்கிறது என்று சந்தேகப்பட வைக்கிறது.

அது என்ன உள் நோக்கம்?

வின்செண்ட் ஸ்மித் பல்லவர்கள் தென் இந்தியர் எனக் கூறியிருப்பது பொதுவானதுதானே?

தென் இந்தியாவில் இருக்கும் தமிழர்களாகவோ; தெலுங்கர்களாகவோ; மலையாளிகளாகவோ; கன்னடராகவோ இருக்கலாம் என்ற பொருளுடையது தானே!

அப்படி இருக்கும்போது-

பல்லவர்கள் தமிழர் அல்லர் என்று கூறிவிட்டு; பல்லவர்கள் தென் இந்தியர் என்று கூறும் ஸ்மித் கருத்தை ஏற்கிறேன் என்கிறாரே ஏன் என்ற கேள்வி எழுகிறது?

வின்செண்ட் ஸ்மித் பல்லவர் தமிழர் அல்லாத மற்ற தென்னிந்தியர் என்று கூறாதபோது-

இவர் ஏன் பல்லவர் தமிழரில்லை என்று கூறித் தமிழரை ஒதுக்கிவிட்டு . பல்லவர் தென் இந்தியர் என்ற கருத்தை ஏற்கிறேன் என்கிறார்.

தமிழரை நீக்கிய பிறகு- தென் இந்தியர்களில் மிஞ்சி இருப்பவர் யார்? மலையாளி; கன்னடர்; தெலுங்கர் இவர்கள்தானே?

அப்படியானால் பல்லவர் மலையாளியா? கன்னடரா? தெலுங்கரா?

பல்லவர் சத்திரியர் என்று கதம்ப மயூரசன்மன் கூறியதாக தாளகுண்டாக் கல்வெட்டு கூறுகிறது என்றும்; தமிழ் வேந்தர்கள் ஆல்; வேம்பு; பனை இவற்றைத் தம் தமிழ் மரபுக்கு அடையாளமாகக் கொண்டதைப் போல ஆந்திர நாட்டில் இருந்து வந்த பல்லவரும் தமிழ்முறையைப் பின்பற்றி - பல்லவர் கொடி - தொண்டைக் கொடி என்பதால் தங்களைப் பல்லவர் என அழைத்துக் கொண்டனர் என்கிறார் ராசமாணிக்கனார்.

பல்லவர்களை ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கர் என்ற தன் உள்நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காக . வின்செண்ட் ஸ்மித் கூறியபடி பல்லவர் தென் இந்தியர் என்பதே பெரிதும் ஏற்கத் தக்கது 

என்கிறார். பிறகு பல்லவர் தமிழரல்லர் எனக்கூறி தமிழரை பல்லவர் தென்னிந்தியர் என்ற வட்டத்திலிருந்து நீக்குகிறார்.


இதன் பிறகு-

ஆந்திராவிலிருந்து வந்தவர் பல்லவர் எனக கூறுவது அவருக்கு எளிதாகிவிடுகிறது. பல்லவர் ஆந்திரர் ஆக்குவதற்கு ராஜமாணிக்கனார் செய்த மிகப்பெரிய தகிடுதத்தம் இது. எனவே இவரது தகிடுதத்தத்தை அம்பலப்படுத்துவது நமக்கு அவசியமாகிறது.

பல்லவர் தமிழர் அல்லர் என்பதற்கு இவர் கூறும் காரணம் என்ன?

பல்லவர் காலப் பட்டயங்கள் அனைத்தும் பிராகிருத மொழியிலும்;  சமஸ்கிருத மொழியிலும் இருக்கின்றன. தமிழர் வழியில் வந்தவர்களாக இருந்திருந்தால் பட்டயங்களைத் தமிழில் எழுதாமல் தமிழ் மக்கட்கே புரியாத பிராகிருத மொழியிலும்; வடமொழியிலும்  எழுதியிருப்பார்களா என்கிறார்?

மேலும்; பல்லவர் ஆட்சியில் வடமொழிதான் கோலோச்சியது. வடமொழிப் புலவர்களான பாரவி; தண்டி போன்றோரே பல்லவர் ஆட்சியில் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இதுவும் இது போன்ற காரணங்களாலும் பல்லவர் தமிழரல்லர் என்பதையும்; பல்லவர் தமிழரின் வேறு பட்டவர் என்பதையும் தெளிவாகக் காணலாம் என்கிறார் ராசமாணிக்கனார்.

தமிழர் மீதும் தமிழ் மொழி மீதும் அக்கறை கொண்டவர்போல காட்டிக் கொண்டு; பல்லவர் தமிழர் அல்லர் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கும் ராசமாணிக்கனாருக்கு ஒரு கேள்வி?

இதே அளவுகோலை தெலுங்கர்களுக்குப் பொருத்தி;

இவர்கள் ஆந்திராவிலிருந்து வந்த தெலுங்கராயின்; தங்கள் பட்டயங்களைத் தெலுங்கில் எழுதாததை வைத்தும்; இவர்கள் ஆட்சியில் பிராகிருதமும் வடமொழியும் கோலோச்சியதை வைத்தும்; இவர்கள் ஆட்சியில் தெலுங்குப் புலவர்களை முன்னிறுத்தாததை வைத்தும் பாரவி; தண்டி போன்ற வடமொழிப் புலவர்களுக்கே செல்வாக்கு இருந்ததை வைத்தும் பல்லவர்கள் தெலுங்கர் அல்லர் என்ற அறிவிப்பை உங்களால் ஏன் வெளியிட முடியவில்லை ராசமாணிக்கனாரே?

எனவே-

நீங்கள் யார்? தமிழரா தெலுங்கரா? என்று  கேட்பது தவிர்க்க முடியாததாகிறது? இந்த ஆராய்ச்சியில் இறங்குவதற்கு முதலில் . உங்கள் நூலில் இருந்தே சில கேள்விகள்-

 தொண்டமான் இளந்திரையன் என்பவன்தான் பல்லவகுல அரசர்களில் முதலாம் அரசன் என இலங்கையின் சிறந்த வரலாற்று
ஆய்வாளரான இராசநாயகம் என்பவர் கூறியுள்ளதாக உங்கள் நூலில் கூறி இருக்கிறீர்கள் .

அந்த தொண்டைமான் இளந்திரையன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட தமிழ் அரசன் என சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை சிறப்பிக்கின்றது.

ஆற்றுப்படை நூல்கள் என்பது . ஒரு மன்னனிடம் பரிசு பெற்று வந்து கொண்டிருக்கும் பாணன் எதிரிலே வரும் வேற்று பாணர்களை இன்ன மன்னனிடம் செல்லுங்கள் உங்கள் வறுமை நீங்கப் பரிசளிப்பான் எனக்கூறி ஆற்றுப்படுத்துவது தொடர்பான நூல்கள் என்பதே பொருள்.

எனவே ஆற்றுப்படை என்ற நூல்களை  எழுதுபவர்கள் பெரும்பாலும் அந்த ஆற்றுப்படை நூலின் பாட்டுடைத் தலைவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர்களாகவே இருப்பர்.

அந்த வகையில் -

பெரும்பாணாற்றுப்படை நூலின் தலைவனான தொண்டைமான் இளந்திரையனைப் பாடிய புலவர் கடியலூர் உருத்திரங் கண்ணனார் அவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவர். தொண்டைமான் இளந்திரையனை தமிழ் அரசன் என்று உருத்திரங் கண்ணனார்
கூறியதை ஏற்காமல்-

ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த வெளிநாட்டு நூலாசிரியரான வின்செண்ட் ஸ்மித் கூறிய பல்லவர் தென்னிந்தியர் என்ற கருத்தே ஏற்புடையதாக இருக்கிறது என- ராசமாணிக்கனார் கூறுவதற்கு என்ன காரணம்?

பல்லவர்களைத் தென் இந்தியர் என்று  ஆக்கினால்தான் அவர்கள் தமிழர்கள் இல்லை - என்று கூறவும்; பின்னர் அவர்களை ஆந்திராவில் இருந்து வந்த தெலுங்கர் என சாயம் பூசவும் வசதியாக இருக்கும் என்பதற்காகத்தான்- வின்செண்ட் ஸ்மித்தின் பல்லவர் தென்னிந்தியர் என்ற கருத்தே பெரிதும் ஏற்புடையது என்று கூறினீர்களோ ராசமாணிக்கம்?

அதிலும் உங்களுக்கு ஒரு சறுக்கல் இருக்கிறதே ராசமாணிக்கம்?

இந்திய வரலாற்று நூலாசிரியரான வின்செண்ட் ஸ்மித் என்பவர் தான் எழுதிய ‘பழைய இந்திய வரலாறு’ என்னும் நூலின் முதற்  பதிப்பில் -

பல்லவர் என்பவர் பஹ்லவர் என்னும் பாரசீக மரபினர் என்று கூறுகிறார்.

இந்த நூலின் இரண்டாம் பதிப்பில் அதே ஸ்மித்; பல்லவர் என்பவர் தென் இந்தியாவிற்கே  உரியவர் அவர்கள் கோதாவரிக்கும் கிருஷ்ணா நதிக்கும் இடைப்பட்ட வேங்கி நாட்டவராக  இருக்கலாம் என்று கூறுகிறார்.

அதே ஸ்மித் தன் நூலின் மூன்றாம் பதிப்பில் பஹ்லவர் என்ற சொல்லை பல்லவர் என்ற  சொல்லோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவ ஒப்புமையை மட்டுமே கொண்டு பல்லவர் பாரசீக மரபினர் எனக் கூறியது தவறு; பல்லவர் என்பவர் தென்னிந்தியரே ஆவர் என்று கூறுகிறார்.

ஒரே நூலின் ஒவ்வொரு பதிப்பிலும் பல்லவர்க்கு வேறு வேறு இன அடையாளத்தை மாற்றி மாற்றி எழுதுகிற - வின்செண்ட் ஸ்மித்  எப்படி ஒரு நம்பகமான வரலாற்று ஆசிரியராக இருக்க முடியும்?

இது மட்டுமல்ல-

முதல் பதிப்பில் பல்லவர் பாரசீக மரபினர் என்று எழுதியதை மாற்றி-

இரண்டாம் பதிப்பில் வேங்கி நாட்டவராக இருக்கலாம் என்று எழுதிய பின்-

வேங்கி நாட்டவராக இருக்கலாம் என இரண்டாம் பதிப்பில் எழுதியதையும் மாற்றி;  மூன்றாம் பதிப்பில் வெறும் தென்னிந்தியர் என மாற்றி எழுதியதைப் போல-

வின்செண்ட் ஸ்மித் தன் நான்காம் பதிப்பின் போது உயிரோடு இருந்திருந்து; அவருக்குப் பெரும்பாணாற்றுப்படை நூலறிவு எட்டியிருந்தால்;

மூன்றாம் பதிப்பில் பல்லவர் தென்னிந்தியர் என எழுதியதை மாற்றி

நான்காம் பதிப்பில் பல்லவர் தமிழரே என்று எழுதியிருக்க மாட்டார் என்பதற்கு என்ன நிச்சயம்?
நல்ல வேளை-

நான்காம் பதிப்பு வரை அவர் உயிரோடு இல்லாமல் போனது-

பல்லவர்கள் தமிழரில்லை என்று கூறுவதற்கும்; பல்லவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனக்கூறி பல்லவர்களை தெலுங்கர்களாக்கி வரலாற்று மோசடி செய்வதற்கும் உங்களுக்கு வசதியாகப் போய்விட்டது.
·          
தொண்டைமான் இளந்திரையனை முதல் பல்லவ அரசனாகக் கொண்டு கி.பி.250 வாக்கில் தோன்றிய பல்லவர் பேரரசு கி.பி.900 வரை சுமார் 700 ஆண்டுகள் தமிழ்நாட்டில் நீடித்து நிலைத்த புகழோடு இருந்துள்ளது.

-கி.பி. 250 முதல் கி.பி 340 வரை ஆண்ட பல்லவர்கள் முற்காலப் பல்லவர்கள் எனவும்;

-கி.பி.340 முதல் கி.பி. 575 வரை ஆண்ட பல்லவர்கள் இடைக்காலப் பல்லவர்கள் எனவும்.

-கி.பி.575 முதல் கி.பி.900 வரை ஆண்ட பல்லவர்கள் பிற்காலப் பல்லவர்கள் எனவும்-

உங்கள் நூலில் வகைப்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட காலங்களில் மன்னர் மன்னர்களாக, பேரரசர்களாக இருந்த பல்லவர் ஆட்சிக்காலம்  கி.பி.900 ஆம் ஆண்டோடு முடிந்து விட்டது.

இதற்குப் பின்னரும் -

பழைய தென்னாற்காடு மாவட்டப் பகுதிகளில் காடவர்கோன் என்ற பெயரில் ஆண்ட சிற்றரசர்களும்-

பழைய வடாற்காடு மாவட்டப் பகுதிகளில் சம்புவரையர்கள் என்ற பெயரில் ஆண்ட
சிற்றரசர்களும்-

பல்லவர் குல வழியினரே என்பதற்கு ஏராளமான கல்வெட்டு சான்றுகள் உள்ளன.

காடவர்கோன் பட்டப் பெயரில் ஆண்ட சிற்றரசர்களில் ஐயடிகள் காடவர்கோன்
என்பவர்தான் முதல் சிற்றரசர்.

“வையம் திகழ் பல்லவர் குலத்துவந்த
மாமணி மாநிலம் முழுதும் மகிழ்ந்துகாக்கும்
ஐயடிகள் காடவர்கோன் அருளால்...”

என்கிற உமாபதி சிவவாக்கியர் பாடல் மூலம் காடவர்கள் என்ற பட்டப் பெயரில் ஆண்ட சிற்றரசர்களும் பல்லவர் குலத்தவரே என்பதுமேலும் உறுதிப்படுகின்றது. 

இந்த சிற்றரசர்கள் ஆட்சி ஏறத்தாழ கி.பி. 14ஆம் நூற்றாண்டின் இறுதி வரை நடைபெற்றிருக்கிறது.

பேரரசர்களாகவும்; சிற்றரசர்களாகவும் இருந்து பல்லவர்கள் ஏறத்தாழ 12 நூற்றாண்டுகள் தமிழகத்தை ஆண்டிருக்கிறார்கள்.

இவ்வளவு நீண்டகாலம் ஒரு வம்சத்தினர் ஒரு நாட்டை ஆண்டதற்கு பல்லவர் ஆட்சியைத் தவிர இந்திய வரலாற்றில் வேறு ஒரு உதாரணம் இல்லை.

மண்ணின் மைந்தர்களைத் தவிர வேறு நாட்டிலிருந்து வந்த ஒரு வம்சத்தினரால்
தொடர்ந்து  12 நூற்றாண்டுகள் மற்றொரு நாட்டை ஆண்டதற்கு இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றிலும் சான்றுகள் ஏதுமில்லை.

வரலாறு இப்படி இருக்கையில்-

பல்லவர்கள் ஆந்திராவில் இருந்து வந்தவர்கள் எனக்கூறி தமிழர்களின்  12 நூற்றாண்டு கால பெருமை மிக்க வரலாற்றை தெலுங்கர்களுக்கு உரியதாக்க  ராசமாணிக்கம் போன்றோர்  முயல்வது எவ்வளவு பெரிய வரலாற்று மோசடி?

இந்த மோசடியை ராசமாணிக்கனார் செய்யத் துணிந்ததற்கு இரண்டு காரணங்களை மட்டுமே நம்மால் யூகிக்க முடிகிறது.

ராசமாணிக்கம் தமிழரல்லாத தெலுங்கராக இருக்க வேண்டும். அதன் காரணமாகவே தமிழர்களின் 1200 ஆண்டுக்காலம் நீடித்த புகழ் கொண்ட பல்லவ தமிழராட்சியை தெலுங்கர் ஆட்சி எனக்கூறி தெலுங்கர்களுக்குப் புகழ் சேர்க்கும் வரலாற்று மோசடிக்கு ராசமாணிக்கம் முயன்றிருக்க வேண்டும் என்பது முதல் காரணம்.


இல்லை... இல்லை.. அவர் தமிழர்தான் என்றால் அவர் வன்னியர் விரோதியாக இருக்க வேண்டும். ஏன்?


பல்லவர்கள் தமிழர்கள் என்பது சங்க இலக்கியங்களுள் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை நூலின் மூலம் நிரூபிக்கப் பட்டிருக்கும்
உண்மை.

கருணாகரத் தொண்டைமானை கலிங்கத்துப்பரணி 535ஆவது பாடலில் பல்லவர்  தோன்றலைப் பாடீரோ என்கிறார் ஜெயங்கொண்டார்.


இதே கருணாகரத் தொண்டைமானை சிலை எழுபது நூலின் 68ஆவது பாடலில்-

" புவிக்காயிரம் பொன் இறைநீக்கி
கவிக்காயிரம் பொன் பரிசளித்தான்
கருணாகரத் தொண்டை வன்னியனே "
 எனக் கவிச்சக்கரவர்த்தி கம்பர் பாடுகிறார்


கவிச்சக்கரவர்த்தி ஜெயங்கொண்டார் கருணாகரத் தொண்டைமானைப் பல்லவர் என்று அடையாளப்படுத்துகிறார்.

அதே தொண்டைமான் வன்னியர் என்றும் கவிச்சக்கரவர்த்தி கம்பர் அடையாளப்
படுத்துகிறார். ஒரு கவிச்சக்கரவர்த்திக்கு இரு கவிச்சக்கரவர்த்திகள் பல்லவர் வன்னியரே என்பதை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள்.

காடவர்கள் என்ற பெயரில் ஆண்டவர்களும்

சம்புவரையர்கள் என்ற பெயரில் ஆண்டவர்களும்

பல்லவர்கள் என்ற பெயரில் ஆண்டவர்களும்

வன்னியர்கள் என்றால் தமிழகத்தை நீண்ட காலம் ஆண்ட பரம்பரை என்ற புகழ் வன்னியருக்குப் போய்விடுகிறதே.. இதை என்ன மோசடி செய்தேனும் மாற்றியாக வேண்டும் என நிறையபேர் தமிழ்நாட்டில் கங்கணம் கட்டிக் கொண்டு திரிகிறார்கள்.

அவர்கள் எல்லோரும் எந்த பொய்யை சொல்லியேனும்; எந்த வரலாற்றுப் புரட்டை
செய்தேனும் வன்னியர்கள் தமிழர்கள் அல்லர் என்ற பொய்யை நிலை நாட்டிவிட வேண்டும் என செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மன அழுக்காறு பிடித்த இந்த வன்னியர் விரோத கும்பலோடு சேர்ந்து . தானும் ஒரு
வன்னிய விரோதியே என்று காட்டிக் கொள்ளும் முயற்சியே . ராசமாணிக்கனாரின் பல்லவர்கள் தெலுங்கர்கள் என்ற வரலாற்று ஆய்வு மோசடி!

பல்லவத் தமிழர் வரலாற்றை தெலுங்கர் வரலாறாக்கியேனும் வன்னியர் பெருமையைக் குலைத்து விட வேண்டும் என்பதற்காக எழுதப்பட்ட நூலே ராசமாணிக்கனாரின் பல்லவர் வரலாறு என்ற நூல்.

மகன் செத்தாலும் பரவாயில்லை. மருமகள் தாலியறுத்தே ஆக வேண்டும் என்ற வக்கிரம் வரலாற்று ஆய்வாளரான மா.ராசமாணிக்கனார் போன்றோருக்கு வருவது மிகப்பெரிய அவலம் மட்டுமல்ல இது தமிழினத்துக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

- ந.இறைவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக