ஞாயிறு, 2 நவம்பர், 2014

வடதமிழ்நாடு எங்கள் நாடு - காவிரிநீர் உரிமையைக் காவுகொடுத்த கருணாநிதியும் எம்.ஜி.ராமச்சந்திரனும். [தொடர்]

கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் பாய்ந்தோடும் ஒரே நதி காவிரி. இந்த இரு மாநிலங்களிலும் பாயும் இந்த நதியின் நீரை எப்படிப பங்கிட்டுக் கொள்வது?

ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகளில் பாய்ந்தோடும் ஒரு நதியின் நீரை, ஒவ்வொரு நாட்டிலும் அந்த நதி பாய்ந்தோடும் நீளத்தின் விகிதாச்சார அடிப்படையிலும் ஒவ்வொரு நாடும் பயன்படுத்தும் பாசனப் பரப்பு விகிதாச்சார அடிப்படையிலும் பரம்பரை பயன்பாட்டு உரிமை அடிப்படையிலும், அந்த நதியின் நீரை, அந்த நதி பாயும் நாடுகள் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பதுதான் சர்வதேச நதிநீர்க் கொள்கை.

ஒரே நாட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் பாய்ந்தோடும் நதிநீரை, அந்த மாநிலங்களுக்கு இடையில் பங்கிட்டுக் கொள்வதற்கான அடிப்படையாக இந்தச் சர்வதேச நதிநீர் கொள்கையைத்தான் உலக நாடுகள் இன்றளவும் பின்பற்றுகின்றன. இந்தச் சர்வதேச நதிநீர் கொள்கை அடிப்படையில், காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமை என்ன?

காவிரியாற்றின் மொத்த நீளம் 800 கி.மீ., இதில் 320 கி.மீ., தூரம் கர்நாடகாவிலும் 416 கி.மீ., தூரம் தமிழ்நாட்டிலும், 64 கி.மீ., தூரம் இரு மாநிலங்களின் எல்லையாகவும் இருக்கிறது.

பரம்பரை பயன்பாட்டு உரிமை என்று பார்த்தால்,  கரிகாலன் கல்லணையைக் கட்டிய காலத்திற்கு முன்பிருந்தே தமிழ்நாடுதான் காவிரி நீரை 100க்கு 100 பயன்படுத்தி வருகிறது.

பாசனப் பரப்பு என்று பார்த்தால், 1971இல் 4.42 இலட்சம் ஏக்கர் மட்டுமே கர்நாடகாவின் பாசனப்பரப்பு. அப்போது தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு  25.30 இலட்சம் ஏக்கர். 

மேற்கண்ட தமிழக உரிமை அடிப்படையிலும் சர்வதேச நதிநீர் கொள்கை அடிப்படையிலும், காவிரி நதி நீரில் தமிழ்நாட்டிற்கு 85.13 சதவீதமும் கர்நாடகாவிற்கு 14.87 சதவீத உரிமையும் உண்டு. 

1971 முதல் 1990 வரையிலான காலகட்டத்தில், சர்வதேச நதிநீர் கொள்கைப்படியும், 1924 காவிரி நதிநீர் ஒப்பந்தப்படியும், தமிழ்நாட்டுக்குக் காவிரி நதிநீரின் மீதான உரிமைகளை மதிக்காமல் தன் இஷ்டத்திற்கு காவிரியின் துணை நதிகளில் எல்லாம் பல அணைகளைக் கட்டி காவிரி நீரைத் தேக்கிக் கொண்டது கர்நாடகம்.

இதன்மூலம்  1971இல் 4.2 லட்சம் ஏக்கராக இருந்த தன் பாசனப்பரப்பை, 1990இல் 21.38 இலட்சம் ஏக்கராக விரிவுபடுத்திக் கொண்டது.  

1971இல் 110 டி.எம்.சி நீரை மட்டுமே பயன்படுத்திய கர்நாடகா 1990இல் 322.8 டி.எம்.சி நீர் அளவுக்கு பயன்படுத்தத் தொடங்கியது.

மேற்கண்ட கூடுதலான 212.8 டி.எம்.சி நீர், கர்நாடகத்திற்கு எங்கிருந்து வந்தது? தமிழ்நாட்டிற்கு உரிமையான காவிரி நீரிலிருந்து அபகரிக்கப்பட்ட துதானே இந்த 212.8 டி.எம்.சி நீர்? நம்மை விட இரு மடங்கு கூடுதலான நீராதாரமுடைய கர்நாடகா, அடாவடித்தனமாகச் சர்வதேச நதிநீர்க் கொள்கையையும் காவிரி நதிநீர் ஒப்பந்தத்தையும் மீறி நமக்கு உரிய காவிரி நீரை அபகரிக்கிறது.

நீர்வளத்தில் தமிழ்நாடு மிகவும் பின்தங்கிய மாநிலமாக இருக்கிறது. எனவே காவிரியில் தமிழ்நாட்டுக்கான உரிமையில் கர்நாடகா கை வைப்பது தமிழ்நாட்டின் உயிரைப் பறிப்பதற்குச் சமமானது.

தமிழ்நாட்டுக்கு உரிய காவிரி நீர்க் கொள்ளையைத் தடுக்க வேண்டியது தமிழ்நாட்டின் உயிர் நாடிப் பிரச்சனையும் மானப் பிரச்சனையுமாகும். ஆனால்...

தமிழ்நாட்டின் முதல் அமைச்சராக இருந்த கருணாநிதியும் எம்.ஜி. இராமச்சந்திரனும் என்ன செய்தார்கள்?

தமிழ்நாட்டின் உயிரைப் பறிக்கும் இந்தப் பிரச்சனையை முன்வைத்து, இந்தியாவே அதிரும் படியான போராட்டங்களை நடத்தினார்களா?

சிமெண்ட்டைக் கொடுத்து காவிரி நீர் பெறுவது, வைக்கோல் கொடுத்து காவிரி நீர் பெறுவது, மின்சாரம் கொடுத்து காவிரி நீர் பெறுவது என்று, கருணாநிதியும், எம்.ஜி. இராமச்சந்திரனும் மாறி மாறி தமிழ் நாட்டின் காவிரி நீர் உரிமையை நிலை நாட்ட வக்கில்லாமல், அதை நாம் விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருளாக்கினார்கள்.

இது மட்டுமா? கர்நாடகா கொடுக்கும் இடத்தில் இருக்கிறது. நாம் பெறும் இடத்தில் இருக்கிறோம். எனவே இதில் நாம் சற்று தாழ்ந்துதான் போக வேண்டும் என்று பேசி காவிரி நதி நீர் மீதான தமிழ் நாட்டின் உரிமையை, கர்நாடகாக்காரன் தமிழ்நாட்டுக்குப் போடும் பிச்சைப் பொருளாக்கினார் கருணாநிதி.

இதெல்லாம் தமிழ்நாட்டுக்கும், தமிழனுக்கும் கருணாநிதியும்; எம்.ஜி.இராமச்சந்திரனும் போட்டி போட்டுக் கொண்டு செய்த துரோகங்கள்.

காவிரி நடுவர் மன்றத் தலைவராக நீதிபதி முகர்ஜி இருந்தார். அவர் நியாயமானவர். நேர்மையானவர் அவர் நடுவர் மன்றத் தலைவராக இருந்தால் தமிழ்நாட்டுக்குக் காவிரி நதிநீர் உரிமை குறித்து நியாயமான தீர்ப்பை வழங்கி விடுவார். எனவே அவரைப் பதவியிலிருந்து விரட்டி அடித்து விட வேண்டும் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு தொடர்ந்து பொய்ப் புகார்களை அவர்மீது கூறித் திரிந்த நாணயங்கெட்ட கன்னட அரசியல்வாதி தேவகவுடா.

காவிரியிலிருந்து ஒரு சொட்டு தண்ணியைக் கூட தமிழ்நாட்டுக்குக் கொடுக்க மாட்டோம் என, மேடை தோறும் கூச்சல் போட்டுக் கொண்டிருந்த தமிழ்நாட்டு விரோதி தேவகவுடா. 

ஊரறிந்த உலகறிந்த தமிழ்நாட்டு விரோதியான இவரை, கருணாநிதியும் மூப்பனாரும் தூக்கி இந்தியப் பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்துப் பிரதமராக்கினார்கள்.

தேவகவுடா பிரதமரானவுடன் செய்த முதல் வேலை, காவிரி நடுவர் மன்றத் தலைவராக இருந்த நேர்மையானவரான நீதிபதி முகர்ஜியை நீக்கிவிட்டுத் தன் சொல் கேட்கிற என்.பி.சிங் என்பவரை காவிரி நடுவர் மன்றத்தின் தலைவர் ஆக்கியதுதான்.தேவகவுடா தயவால் காவிரி நடுவர் மன்றத் தலைவரான நீதிபதி என்.பி.சிங்கும், நன்றியுடன் கர்நாடகாவுக்குச் சாதகமான தீர்ப்பு வழங்கி, தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பலி கொண்டார். தமிழர்களின் கழுத்தறுத்தார்.

தமிழன் காவிரி நீரை விலை கொடுத்து வாங்கும் பொருளாக்கி, தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை முதல்பலி கொடுத் தவர், தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த எம்.ஜி. இராமச்சந்திரன்.

காவிரி நீரைக் கர்நாடகாக் காரனிடம் தாழ்ந்து நின்று பெற்றுக் கொள்ளும் பிச்சைப் பொருளாக்கி, தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை இரண்டாவது பலியிட்டவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி. 

தகுதியும் நன்றியும் இல்லாத வந்தேறிகளைத் தமிழ் நாட்டின் முதலமைச்சர்களாக்கியதால் வந்த வினை இது.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் மூலம், தமிழ்  நாட்டு நதிநீர் உரிமையை நிரந்தரப் பலிப்பொருளாக்குவதற்கு அடித்தளமிட்டவர்கள், முதலமைச்சர் கருணாநிதியும், மக்கள் தலைவர் என்ற பட்டம் சூட்டிக்கொண்ட மூப்பனாரும்தான். 

ஒரு மன்னனே தன் நாட்டுக்குத் துரோகம் செய்வதைப் போல பெரிய துரோகம் வேறொன்றும் இருக்க முடியாது. அதுபோல தமிழ்நாட்டை ஆண்டவர்களே தமிழ்நாட்டுக்குச் செய்தது சாதாரண துரோகமல்ல மகா துரோகம்.

எனவே, தமிழ்நாட்டிற்கான காவிரி நதிநீர் உரிமைக்கு, பகைவர்கள் கர்நாடகத் தலைவர்கள் மட்டுமல்ல. தமிழகத்தை ஆண்ட முதலமைச்சர்களும் தமிழக அரசியல் தலைவர்களும்தான்.

 உடன்பிறந்தே கொல்லும் இந்தத் துரோகிகளால்தான், காவிரி இன்று வறண்டு போனது. காவிரிப் பாசனப் பகுதியைக் கொண்ட வடதமிழ்நாடு பாதி பாலைவனமாகிக் கொண்டிருக்கிறது.

என்னதான் முயன்றாலும், கனமழை பெய்யும் ஆண்டுகளில், கர்நாடகாக்காரனால் தன் கோவணத்தில் காவிரியை முழுதாக முடிந்து கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்ட ஆண்டுகளில் காவிரியில் அளவுக்கு மீறி ஏற்படும வெள்ளப் பெருக்கால், தமிழ் நாட்டிற்கு வந்து சேரும் உபரி நீரையாவது சிந்தாமல் சிதறாமல் பயன்படுத்திக் கொள்ள, தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் திட்டம் தீட்டினார்களா?

தொடரும்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக