சனி, 15 நவம்பர், 2014

யாரையும் விட சட்டம் மேலானது என்பதை நிரூபித்த தீர்ப்பு!

"யாரையும் விட
சட்டம் மேலானது”
என்பதை
நிரூபித்த தீர்ப்பு!



டான்சி வழக்கில் கவிழ்ந்த நீதியின் தலை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற வழக்கின் தீர்ப்பால் நிமிர்ந்திருக்கின்றது.

யாரையும் விலைக்கு வாங்கிவிடலாம்; எந்த வழக்கிலிருந்தும் தப்பிவிடலாம் என்ற மமதைக்கு விழுந்த மரண அடி. இந்தத் தீர்ப்பு.

ஜெயலலிதாவுக்கு எதிரானதுதான் இந்தத் தீர்ப்பு. வழக்கு தொடுத்த கருணாநிதியையே கலங்கடித்திருக்கிறது என்பதுதான் இந்தத் தீர்ப்பின் மகிமை.

வருவாய் வழிவகைக்கு மீறிய சொத்துக்குவிப்பு வழக்கில் - ஜெயலலிதா; அவரது தோழி சசிகலா; சசிகலாவின் உறவினர்களான சுதாகரன்; இளவரசி ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

ஜெயலலிதாவுக்கு நூறு கோடி அபராதம்; சசிகலா; இளவரசி; சுதாகரன் ஆகிய மூவருக்கும் தலா பத்துகோடி அபராதம்.

யாரிந்த மைக்கேல் டி.குன்ஹா?
இந்தியர்கள் மட்டுமல்ல, உலக  நாடுகளைச்  சேர்ந்தவர்களையும் இந்தக் கேள்வியைக் கேட்க வைத்திருக்கிறார் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் சிறப்பு நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி.குன்ஹா.

ஒரு ஊழல் வழக்கில் இவ்வளவு அழிச்சாட்டியங்களைச் செய்ய முடியுமா என உயர்நீதிமன்றங்கள் முதல் உச்சநீதிமன்றம் வரை வியக்கும் அளவுக்கு அத்தனை  சட்ட அழிச்சாட்டியங்களையும் செய்தார் ஜெயலலிதா.

66 கோடி ஊழல் வழக்கிலிருந்து தப்புவதற்காக ஆயிரங்கோடிக்கு மேல் செலவழித்திருப்பார் ஜெயலலிதா என்கிறார்கள். 

அப்பவும் தப்பமுடியவில்லை என்பதுதான் விதியோ?

எல்லோரையும் காலில் விழவைத்து பூரித்த ஜெயலலிதா .

இந்த வழக்கு போடப்பட்டபோது எனக்கு வயது 48, இப்போது 66. இந்த வழக்கு டார்ச்சர் காரணமாக எனக்கு ரத்த அழுத்தம்; சர்க்கரை நோய்; மனச்சோர்வு எனப் பல்வேறு பாதிப்புகளால் நிம்மதி இழந்துள்ளேன்.  இதைக் கவனத்தில் எடுத்துக் கொண்டு தண்டனை வழங்க வேண்டும் என -

நீதிபதி குன்ஹா முன்பு மமதை அழிந்து தெண்டனிட்டு நின்றாரே?

இதைவிட டி.குன்ஹா கொடுத்த 4 ஆண்டு சிறைத் தண்டனையும் நூறுகோடி அபராதமும் ஒன்றும் பெரிய தண்டனை அல்ல தான்.

இந்தத் தீர்ப்புக்குப் பின் -

29.9.2014 நாளிட்ட தமிழ் இந்து நாளிதழ், வாய்மை வெல்லட்டும் என்று ஒரு தலையங்கம் எழுதியுள்ளது. அந்தத் தலையங்கத்தின் இறுதி வரிகளில் இந்த வழக்கு எவ்வளவு அதிகார துஷ்ப்பிரயோகங்களைச் சந்தித்தது என்பது குறித்து இவ்வாறு எழுதுகிறது-

“ஏறத்தாழ 18 ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கு இது.

அதிகார உச்சத்தின் உக்கிரத்தை – அழுத்தங்களை

எண்ணற்ற நெருக்கடிகளை எதிர்கொண்ட விசாரணை. 

இறுதியில் –

அரசுத் தரப்பும்; இந்த வழக்கை வெவ்வேறு காலங்களில் விசாரித்த பல்வேறு நீதிபதிகளும் பல்வேறு தொல்லைகளுக்கு ஆளானார்கள்.  (அனுபவித்த) எல்லா இடர்பாடுகளையும் தாண்டி- தம்முடைய கடமைகளை நிறைவேற்றி இருக்கிறார்கள். நீதியின்முன் எல்லோரும் சமம் என்னும் ஒளிபொருந்திய உண்மை நிரூபிக்கப் பட்டிருக்கிறது. இந்திய நீதித்துறையின் பணி இந்திய ஜனநாயகத்தின் மீதான கம்பீரத்தை மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது.

எப்போதும் வாய்மையே வெல்லட்டும்."

அதிகார உச்சத்தின் உக்கிரத்தை; அழுத்தங்களை; நெருக்கடிகளை-

என்ற ஒவ்வொரு வார்த்தை குறித்தும் நூற்றுக்கணக்கான பக்கங்களை எழுதலாம்.

என்றாலும் -

இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக அரசு சார்பில் நியமிக்கப்பட்ட பி.வி.ஆச்சாரியாவுக்கு ஜெயலலிதா தரப்பிலிருந்து எவ்வளவு தொல்லைகள் கொடுக்கப்பட்டது என்பது குறித்து தெரிந்து கொண்டால்-

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளுக்கு எவ்வளவு அழுத்தங்கள்; எவ்வளவு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டிருக்கும்என்பதை யூகித்துக் கொள்ளலாம்.

ஆச்சாரியா நேர்மையான; திறமையான; கறாரான வழக்கறிஞர். ஜெயலலிதாவின் டான்சி வழக்கு பார்முலாவுக்கு மசியாதவர். இவர் தொடர்ந்து இந்த வழக்கில் அரசு வழக்கறிஞராக நீடித்தால் வழக்கு சீக்கிரம் முடிந்து தண்டனை கிடைத்துவிடும் என்ற முடிவுக்கு வந்த ஜெயலலிதா-

அதிமுக தேசிய அளவில் பிஜேபியோடு கொண்டிருந்த நெருக்கமான உறவைப் பயன்படுத்தி- 

கர்நாடக மாநில பிஜேபி அரசு மூலம் இவரை நீக்க அழுத்தம் கொடுத்தார்.

பி.வி.ஆச்சாரியா கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரலாகவும்; இந்த வழக்கின் ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டராகவும் இருந்ததால்-

அப்போதைய கர்நாடக மாநில முதல்வர் சதானந்த கெளடா மூலம் ஏதாவது ஒரு பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளும்படி அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இவர்கள் நினைத்தார்கள்-

கர்நாடக மாநில அட்வகேட் ஜெனரல் பதவியை வைத்துக் கொண்டு சொத்துக் குவிப்பு வழக்கின் ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவியை ஆச்சார்யா விட்டு விடுவார் என்று. 

ஆனால்-

பி.வி.ஆச்சார்யா ஸ்பெஷல் பப்ளிக் பிராசிக்யூட்டர் பதவியை வைத்துக் கொண்டு கர்நாடக அரசின் அட்வகேட் ஜெனரல் பதவியை பிப்ரவரி 2012இல் ராஜினாமா செய்து விட்டார்.

அதன்பிறகும் ஆச்சார்யா அனுபவித்த தொல்லைக்கு அளவே இல்லை.

ஆச்சார்யா பி.எம்.எஸ்.கல்வி   அறக்கட்டளையின் தலைவராக இருந்தார். அதில் மாணவர்களைச் சேர்ப்பதில் முறைகேடு செய்கிறார் என்று லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் தனிநபர்புகார் ஒன்றைக்கொடுக்க வைத்தார்கள். லோக் ஆயுக்தா விசாரணைக்கு உத்தரவிட்டதும் . இதனை எதிர்த்து உயர்நீதிமன்றம் போனார் ஆச்சார்யா. இவர் மீதான புகாரைத் தள்ளுபடி செய்ததோடு வழக்குத் தொடுத்தவர் ரூ 50,000/. ஆச்சார்யாவுக்குக் கொடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இப்படி மன உளைச்சலுக்கு ஆளான ஆச்சார்யா ஜூலை  2012இல் சிறப்பு அரசு வழக்கறிஞர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். 

அதுபற்றியயல்லாம் இப்போது நான் பேச விரும்பவில்லை   என்கிறார் ஆச்சார்யா.

இதன்பிறகுதான் பவானிசிங் சிறப்பு அரசு வழக்கறிஞராக வந்தார்.

அரசு வழக்கறிஞருக்கே இத்தனை தொல்லை கொடுத்தவர்கள்; இந்த வழக்கை விசாரித்த  நீதிபதிகளுக்கும்; இறுதி நிலையை எட்டி தீர்ப்பு வழங்கிய நீதிபதி டி.குன்ஹாவுக்கும் எவ்வளவு தொல்லை கொடுத்திருக்கும் ஜெயலலிதா தரப்பு என்பதை கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான்.

கற்பனை செய்தாலும் கற்பனைக்கும் எட்டாததாகவே இருக்கும் ஜெயலலிதா தரப்பு நீதிபதி டி.குன்ஹாவுக்கு கொடுத்திருக்கக் கூடிய தொல்லைகள்.

இத்தனையையும் மீறி-

சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. தீர்ப்பின் மூலம் ஜெயலலிதா சில வரலாறுகளைப் படைத்துள்ளார்.

1.முதல்வராக இருக்கும்போது ஊழல் வழக்குத் தீர்ப்பால் பதவி இழந்த முதல் முதல்வர் இந்திய அளவில் ஜெயலலிதா மட்டுமே.

2.ஏற்கனவே டான்சி ஊழல் வழக்கில் முதல்வர் பதவியை 2001இல் இழந்துள்ளார் என்பதால் ஊழல் வழக்கால் முதல்வர் பதவியை இரண்டு முறை இழந்தவரும் ஜெயலலிதா மட்டுமே.

3.இந்த வழக்கில் யாரும் பெறாத அளவுக்கு ரூ 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டவரும் ஜெயலலிதா மட்டுமே. இவ்வளவு பெரிய அபராதத் தொகை இதுவரை எந்த ஊழல் வழக்கிலும் விதிக்கப்பட்டதில்லை. இதன் மூலமும்   ஜெயலலிதா வரலாறு படைத்துள்ளார்.

4.டான்சி வழக்கு; பிளசண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு; கலர் டிவி வழக்கு; லண்டன் ஓட்டல் வழக்கு; பிறந்தநாள் பரிசு வழக்கு என இத்தனை ஊழல் வழக்குகள் இந்திய வரலாற்றில் வேறு எந்த முதல்வர் மீதும் போடப்பட்டதில்லை.


மற்றவர்கள் மீதான அடக்குமுறையில் ஜெயலலிதா படைத்த வரலாறு.

தடா; பொடா; தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றில் அதிக வழக்குகள் போட்டு சர்வாதிகார வரலாறு படைத்தவர் ஜெயலலிதா.

1.தமிழறிஞர் பெருஞ்சித்திரனாரை 1993இல் தடா சட்டத்தின் கீழ் கைது செய்து ஏழு மாதங்கள் சிறையில் அடைத்தார். சிறையிலிருந்து வெளிவந்த சிறிது காலத்தில் பெருஞ்சித்திரனார் மரணமடைந்தார்.

அவர் மீது அடுக்கடுக்கான வழக்குகளைப் போட்டு ஒரு தமிழறிஞரை சாகடித்த பெருமை ஜெயலலிதாவிற்கு உரியது.

பொடா சட்டத்தின் கீழ்:-
வைகோவை - 570 நாட்கள் (19 மாதம்) சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

பழ.நெடுமாறனை - 510 நாட்கள்  (17 மாதம்) சிறையல் அடைத்து கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

புதுக்கோட்டை பாவாணனை - 527 நாட்கள் (17 1/2 மாதம்) சிறையில் அடைத்து கொடுமைப் படுத்தியவர் ஜெயலலிதா.

சுப.வீரபாண்டியனை -  494 நாட்கள்  (16  1/2 மாதங்கள்) சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

நக்கீரன் கோபாலை  - பத்திரிகையாளரை  252 நாட்கள்  (8  1/2 மாதங்கள்) சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் :
காடுவெட்டி குருவை தேசியப்பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்து மீண்டும் மீண்டும் வெவ்வேறு வழக்குகளை போட்டு 4 முறை   தேசிய பாதுகாப்புச்  சட்டத்தின் கீழ் கைது செய்து  219 நாட்கள் சிறையில் அடைத்து கொடுமைப்படுத்தியவர் ஜெயலலிதா.

இது மட்டுமல்லாமல் ராமதாசு கைதின் போது 130 க்கும் மேற்பட்ட வன்னியர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து வரலாறு படைத்தவரும் ஜெயலலிதாதான்.

வீரபாண்டியார் மீது நில அபகரிப்பு வழக்குப்போட்டு கைது செய்து அலைக்கழித்து, அவர் மரணமடையக் காரணமாக இருந்தவர் ஜெயலலிதா.

தனக்கு பிடிக்காதவர்களை பழிவாங்க நினைத்து (வளர்ப்பு மகன் சுதாகரன் உட்பட) போடப்பட்ட கஞ்சா வழக்குகள் ஏராளம்.

எத்தனை எத்தனை பொய் வழக்குகள்? 

ஒரு ஜனநாயக நாட்டின் முதல்வராக இருக்கும் போதே . தடா, பொடா, என்.எஸ்.ஏ சட்டங்களின் பெயரால் இவ்வளவு பேர்களைக் கைது செய்து இவ்வளவு அக்கிரமங்களை செய்திருக்கிறார் என்றால்;

இவர் ஒரு சர்வாதிகாரியாக இருக்க நேர்ந்தால் உலக சர்வாதிகாரிகளை மிஞ்சி வரலாறு படைத்திருக்க மாட்டாரா?

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜெயலலிதா கட்சியினர் போராட்டம் நடத்துவதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால்- நடிகர்கள்; திரையரங்கு உரிமையாளர்கள்; தனியார் பேருந்து உரிமையாளர்கள்; தனியார் பள்ளிகள் ஆகியோர்-

உண்ணாவிரதம்; கடையடைப்பு; விடுமுறை என்று போராட்டங்கள் நடத்துவதைப் பற்றி என்ன சொல்ல?


இவ்வளவு அராஜகங்களை செய்து; ஆண்டுக் கணக்கில் மற்றவர்களை சிறையில் அடைத்த ஜெயலலிதா; தனக்கு தண்டனை என்றவுடன் மறுநாளே ஜாமீனில் வந்துவிட வேண்டும் என்று லண்டனில் இருந்து  ராம்ஜெத் மலானியைக் கூப்பிடுகிறார் என்பது-

தான் மட்டும் சட்டத்திற்கு மேலானவர் என்ற நினைப்பில் ஜெயலலிதா இன்னமும் இருக்கிறார் என்பதையே காட்டுகிறது.

BE YOU EVER SO HIGH,
THE LAW IS ABOVE YOU

“நீங்கள் எவ்வளவு உயர்ந்தவராகவும் இருங்கள் உங்களை விட சட்டம் உயர்வானது”

என உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.என்.வரியவா, ஹெச்.கே.சேமா ஆகியோர்   ஜெயலலிதா வழக்கில் எச்சரித்து சொன்ன வாசகங்கள்.

தற்போதைய தீர்ப்பு, அந்த எச்சரிக்கையை நிரூபித்திருக்கிறது என்பதை இனியாவது ஜெயலலிதா நினைவில் கொள்ள வேண்டும்.

- ஆசிரியர் குழு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக