செவ்வாய், 9 டிசம்பர், 2014

[5] ஏன் வேண்டும் வடதமிழ்நாடு ? - உபரி நீரில் வடதமிழ்நாட்டுக்குத் துரோகம்




காவிரியில் தண்ணி இல்லை. நிலங்கள் மொத்தமும் பாளம் பாளமாக வெடித்துக் கிடக்கின்றன. எப்படிப் பிழைப்போம் என்ற ஓலங்களும்...

கடன் வாங்கிப் பயிர் வச்சோம். காவிரியில் வெள்ளப் பெருக்கால் பயிர்கள் எல்லாம் மூழ்கி அழுகிப் போய் விட்டன. கடனை எப்படி அடைப்போம்? வயிற்றை எப்படி நனைப்போம்? என்ற அழுகுரல்களும்...

ஆண்டாண்டு காலமாகக் காவிரி டெல்டாப் பகுதி விவசாயிகளிடமிருந்து நிரந்தரமாக ஒலித்துக் கொண்டே இருக்கிறது.

காவிரி காய்ந்தாலும் சோகம். வெள்ளம் பெருக்கெடுத்துக் கரைபுரண்டு பாய்ந்தாலும் சோகம், சோகம் நிரந்தரம் என்பது, டெல்டாப் பகுதி விவசாயிகளின் அழிக்க முடியாத தலையெழுத்தாகி விட்டது.

இதற்கு யார் காரணம்?

மண் பாசமோ ஒரு மாநிலத்தின் முதல்வராக ஆகுவதற்கான யோக்கியதையோ இல்லாதவர்கள் தமிழ்நாட்டை மாறி மாறி ஆண்டதுதான் காரணம்.

காவிரி நதிநீர் உரிமையைக் காக்கத்தான் நம்முடைய முதல்வர்களுக்கு யோக்கியதை இல்லை. எப்போதோ பெய்யும் கன மழையால், கர்நாடகக்காரனால் தடுத்து தேக்க முடியாமல் ஓடிவரும் உபரிநீரைப் பயன்படுத்திக் கொள்வதற்கான திட்டங்களைத் தீட்டும் யோக்கியதையாவது இவர்களிடம் இருந்ததா? இது எதுவுமே இல்லாதவர்கள்தான் தமிழ்நாட்டின் முதல்வரானார்கள் என்பதுதான் தமிழ்நாட்டின் சாபக்கேடு.

காவிரியில் ஒரு ஆண்டுக்குச்  சராசரியாக சற்றேறக்குறைய 100 டி.எம்.சி. அளவுக்கு அதிகமான உபரிநீர் தமிழகத்திற்கு வந்துள்ளது. அதைக் கடலில் கலக்கவிட்டு வீணடித்துவிட்டது தமிழக அரசு.

தமிழ்நாட்டை இருமடங்கு நீராதாரங்களைக் கொண்ட கர்நாடக மாநிலம் தனது நீராதாரங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வதோடு, நமக்கு உரிய காவிரி நீரையும் தடுத்துத் தேக்கி, தன் மாநிலத்தை வளமாக்க திட்டம் தீட்டி, கடுமையாகச் செயல்படுத்துகிறது.

இப்போதுகூட, ரூ 5000 கோடி மதிப்பீட்டில் 4000க்கும் மேற்பட்ட ஏரிகளை வெட்டிக் கொண்டிருப்பதாகவும், அந்த வேலை முடிந்தபிறகு, கனமழை பொழியும் ஆண்டுகளில் கூட காவிரியில் சொட்டுத் தண்ணி வராது என்றெல்லாம் பயமுறுத்துகிறார்கள்.

தமிழ்நாட்டின் எல்லைக்கு வந்த பிறகு காவிரிக்கு நீர்வரத்தைத் தரும் பகுதிகளாக இருக்கும், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம்,   நாமக்கல், பெரம்பலூர், கடலூர், அரியலூர் மாவட்டங்கள் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் வழி இல்லாமல் வறண்டு தவித்துக் கிடக்கின்றன.

காவிரியில் எப்போதோ வரும் உபரி நீரை, கடலில் கலந்து வீணடிக்காமல் தடுத்து நீரைத் தேக்கி வைக்க, இப்பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏரிகளை வெட்டியிருக்கலாம். இவ்வாறு கிடைக்கும் உபரி நீரை வைத்தே, வடதமிழ்நாட்டின் பெரும் பகுதியை வளம் கொழிக்கும் பூமியாக்கி இருக்கலாம்.

நீண்டகாலத் திட்டங்கள் எதையும் செய்யாமல், மக்களுக்குப் பல்பொடி தருகிறேன்... செருப்புத் தருகிறேன்... சேலை - வேட்டி தருகிறேன்... டி.வி. தருகிறேன் ஆடு தருகிறேன்.. பசுமாடு தருகிறேன்.. என்று அறிவித்து, பத்திரிகைகளுக்குப் போஸ் கொடுத்ததுதான் இவர்களின் சாதனை.

அச்சமில்லை இதழில் காவிரியின் உபரி நீரைப் பயன்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்து நாம் எழுதிய பிறகு -

ரூ. 400 கோடி மதிப்பீட்டில் காவிரி உபரி நீரைப் பயன்படுத்தி, சரபங்கா பகுதி ஏரிகள் இணைப்புத் திட்டத்தையும், மேட்டூர் அனல் மின் நிலைய சாம்பல் நீரேற்றும் திட்டத்தையும் நிறைவேற்றுவோம் என  31.1.2007 அன்று, பூலாம்பாடி என்ற ஊரில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஒரு திட்டத்தை அறிவித்தார். நமக்குத் தெரிந்து, காவிரியின் உபரிநீரைப் பயன்படுத்தும் ஒரு திட்டம் பற்றி, அமைச்சர் மட்டத்தில் பேசப்பட்ட முதல் பேச்சு இதுதான்.

இதற்குப் பிறகு, பா..  சட்டமன்ற உறுப்பினர்களான கண்ணன், தமிழரசு போன்றோர் அதிகாரிகளைச்  சந்தித்து, இத்திட்டத்தை வலியுறுத்தி இருக்கிறார்கள். பா.. சார்பில் ஒரு பேரணியும் நடத்தப்பட்டது.

இதையயல்லாம் பார்த்த முதல்வர் கருணாநிதி, இப்படியே விட்டால் காவிரி உபரி நீரைப் பயன்படுத்தி, சேலம் போன்ற வட மாவட்டங்களைச்   செழிக்க வைத்து விடுவார்கள் போலிருக்கிறதே? எனக் கருதி, இத்திட்டம் நடைமுறைச் சாத்தியமானதல்ல என்று சட்டமன்றத்திலேயே ஒரே போடாகப் போட்டு நிராகரித்து விட்டார்.

குஜராத் மாநிலத்தில் சர்தார் சரேவர் அணைக்கட்டுத் திட்டத்தில் நிலையங்களை அமைத்து. விநாடிக்கு 6 இலட்சத்து 30 ஆயிரம் லிட்டர் நீரேற்றி, 104 கி.மீ. தூரத்திற்கு வாய்க்கால் வெட்டி, அதன் வழியே 13 இலட்சம் ஏக்கர் பாசனத்திற்கும், 6420 கிராமங்கள் குடிநீர் வசதிக்கும் ஏற்பாடு செய்து சாதனை படைத்தார் குஜராத் மாநில முதல்வரான நரேந்திர மோடி. உலகிலேயே மிகப் பெரிய நீரேற்றுத் திட்டம் இது என, மோடி அரசு மார்தட்டிக் கொள்கிறது.

ஆனால், கருணாநிதியோ, சரபங்கா நீரேற்றுத் திட்டம் சாத்தியமில்லாதது எனக்கூறி நிராகரித்தார். 

காவிரியின் உபரி நீரை, காவிரி வைகை நதிகள் இணைப்புத் திட்டத்தின் கீழ், தென் மாவட்டங்களுக்குக் கடத்திச் செல்வதற்கான திட்டங்களை, 3 மாதங்களுக்குள் தயாரித்து அளிக்க வேண்டுமென 17.8.2007 அன்று அதிகாரிகளுக்குக் கட்டளையிட்டார்

அதிகாரிகளும் இதற்கான திட்டத்தைத் தயாரித்து, 7.11.2007 அன்று அளித்து விட்டதாக செய்தி வெளியிட் டுள்ளது இந்து பத்திரிகை.

இதையயல்லாம் வைத்துப் பார்க்கும்போது, வடமாவட்டங்களைப் பாலைவனமாக்கும் திட்டத்தோடுதான் காவிரி நதிநீர் மீதான உரிமையைக் கர்நாடாகாவுக்குக் காவு கொடுத் திருக்கிறார் கருணாநிதி என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டம் என்பது, 1965 முதலே, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் எழுப்பிவரும் கோரிக்கையாகும். ஏறத்தாழ 45 ஆண்டுகளாக இந்தத் திட்டம் நிலுவையில் இருக்கின்றது.

தருமபுரி, கிருஷ்ணகிரி பகுதிகள் தான் தமிழ்நாட்டிலேயே குடிநீர்ப் பற்றாக்குறையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதி. குடிக்கக் கிடைக்கிற கொஞ்ச நஞ்சம் குடிநீரிலும், ஒரு பி.பி.எம் அளவுக்குக் குறைவாக இருக்க வேண்டிய புளோரைடு, 1.5 பி.பி.எம் முதல் 9 பி.பி.எம். வரை இருப்பதால், தமிழ்நாட்டிலேயே மிக அதிகமான சுகாதாரக் கேடான குடிநீராக இப்பகுதி குடிநீரே இருக்கிறது என அரசு சுகாதார அமைப்புகளும், அரசு சாராத சுகாதார அமைப்புகளும் ஆய்வு செய்து, தமிழக அரசுக்கு அறிக்கைகள் அனுப்பியுள்ளன.

இந்தக் குடிநீரைப் பயன்படுத்துவதால், பல் சம்பந்தமான நோய்களும்; முதுகெலும்பு வளைந்து கூன் விழுவது போன்ற தீராத நோய்களும் ஏற்படுகின்றன எனவும் அந்த ஆய்வறிக்கைகள் சுட்டிக் காட்டியுள்ளன.

எனவே அதிக முக்கியத்துவமும் முன்னுரிமையும் கொடுத்து நிறைவேற்ற வேண்டிய குடிநீர்த் திட்டம் ஒன்று உண்டானால் அது ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டமே. அப்படி இருந்தும், இத்திட்டத்தை ஆண்டுகளாக நிலுவையில் வைத்து விட்டனர் நமது ஆட்சியாளர்கள்.

ஆனால்,  2006 நிதிநிலை அறிக்கையில், இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் வேண்டுமெனச் சட்டமன்றத்தில் ஒரு கோரிக்கையை வைக்கிறார் அமைச்சர் சுப.தங்கவேலன். அந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே, இந்தத் திட்டத்திற்கு அவசர அவசரமாக நிதி ஒதுக்கி, 2007 ஜனவரியில் அடிக்கல் நாட்டுகிறார்கள். ஒரே ஆண்டில் திட்டம் நிறைவேற்றப்பட்டு திறப்பு விழாவும் நடத்தி விட்டார்கள்.

இப்படி...

காவிரியில் உபரி நீரா? அதைச் சேலத்துக்குக் கொடுக்காதே. வைகை நதியோடு இணைத்து ராமநாதபுரத்தை வளப்படுத்து.

குடிநீர்த் திட்டமா? வட மாவட்டங்களுக்குப் பயன்படும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் குப்பைக் கூடையில் போடு. இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை உடனே நிறைவேற்று என்கிறார் கருணாநிதி.

இவர், தென்தமிழ்நாட்டுக்கு மட்டுமான  முதல்வரா? வடதமிழ்நாட்டையும் சேர்ந்த ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதல்வரா? தெரியவில்லை.

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் மாவட்டங்களில் பெய்யும் மழையால் காவிரிக்கு வரும் நீரை, சேலத்துக்கோ, தருமபுரிக்கோ, கிருஷ்ணகிரிக்கோ பயன்பட விடமாட்டேன்...

மதுரை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கான திட்டங்களைத்தான் செயல்படுத்துவேன்... என்று கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படும் கருணாநிதியைப் பார்த்து, வடதமிழ்நாட்டு மக்கள்..

[ ந.இறைவன் ]
கருணாநிதியே, கருணாநிதியே...
கடத்தாதே கடத்தாதே...
தென் மாவட்டங்களுக்குக்
காவிரியைக் கடத்தாதே.
அழிக்காதே..அழிக்காதே...
வடமாவட்டங்களைப்
பாலைவனமாக்கி அழிக்காதே.

என்று விண்ணதிர முழங்கி, கருணாநிதியின் சதித் திட்டங்களுக்கு எதிராகப் போராட வேண்டிய நிர்ப்பந்தங்களைத் தொடர்ந்து ஏற்படுத்தி  வருகிறார்.

இப்படி -

தொடர்ந்து எங்களுக்குத் துரோகம் செய்து எங்கள் வாழ்வாதாரங்களை அழிப்பதைத் தடுத்து நிறுத்திட; வடதமிழ்நாட்டு மக்களை அழிவின் விளிம்பிலிருந்து காத்திட; தனி மாநிலம் கேட்டால் அது தேசவிரோதக் குற்றமா?

பாராட்டத்தக்கது ஷீரின் பணி

முழுக்க முழுக்க வடதமிழ்நாட்டில் மட்டுமே பாய்கிற பாலாற்றின் மீது தமிழ்நாட்டிற்கு இருந்து வந்த உரிமை என்ன? அந்த உரிமைகளைப் பாதுகாக்கத் தவறியவர்கள் யார்?

கர்நாடக மாநிலத்தின் நந்தி மலைகளில் உற்பத்தியாகிறது பாலாறு. கர்நாடகாவில் 90 கி.மீ. தூரம் பாய்ந்து, ஆந்திர எல்லையைத் தொட்டபின் அம்மாநிலத்தில்  33 கி.மீ. பாய்ந்து, தமிழக எல்லையில் நுழைந்து, 220 கி.மீ. தூரம் பாய்ந்தோடி கடலில் கலக்கிறது பாலாறு.

சர்வதேச நதிநீர்க் கொள்கையின்படி, பாலாற்று நீரில் தமிழ்நாட்டிற்கு  64 சதவிகித உரிமையும், கர்நாடகாவிற்கு  26  சதவிகித உரிமையும், ஆந்திராவிற்கு 10 சதவிகித உரிமையும் உண்டு.

ஒரு காலத்தில், பாலாற்றங்கரைகளை ஒட்டி 1500க்கும் மேற்பட்ட பாசன ஏரிகளை அமைத்து, பாலாற்றின் நீரை அவற்றில் தேக்கி, பாசனத்திற்குப் பயன்படுத்தியது தமிழ்நாடு. பாலாற்றங்கரையோரக் கிராமங்களில் உள்ள நிலங்களில் முப்போகமும் விளைந்தன. பாலாறு தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய ஜீவநதியாக அன்று இருந்தது.

இன்று அந்த ஜீவநதி, கானல் நீரோடும் மணலாறாகித் தகிக்கிறது. என்ன காரணம்? காவிரியைப் போலவே, பெரும் மழைக் காலங்களில் கர்நாடகக்காரனால் தேக்க முடியாத மழைக்கால  வெள்ளத்தின் வடிகால் வாய்க்காலாக்கப் பட்டது பாலாறு. இதுவும் கூட இருபது ஆண்டுகளுக்கு முழுக்க முழுக்க வடதமிழ்நாட்டில் மட்டுமே முன்பு இருந்த நிலைமை.

ஆந்திராக்காரன் பார்த்தான், தமிழ்நாட்டின் பாலாற்று நதிநீர் உரிமையைக் கர்நாடகக்காரன் மடடும்தான் அபகரிக்க வேண்டுமா? நாம் மட்டும் ஏமாந்தவர்களா? நாமும் அபகரிப்போம் என்று ஆரம்பித்துவிட்டான்.

ஆந்திர எல்லையில் 33 கி.மீ. தூரம் மட்டுமே பாயும் பாலாற்றின் குறுக்கே, 32 தடுப்பணைகளைக கட்டி 50க்கும் மேற்பட்ட புதிய ஏரிகளை வெட்டி, கர்நாடகம் தேக்க முடியாத நீரை, ஆந்திர அரசு தேக்கிக் கொண்டது.

இதனால், கர்நாடகாவிலும், ஆந்திராவிலும் உளள பாலாற்றங்கரையை ஒட்டி முன்பு தரிசாகக் கடந்த நிலங்கள் இப்போது நஞ்சையாகி, முப்போகமும் விளையும் வளம் கொழிக்கும் பூமியானது.

முன்பு முப்போகமும் விளைந்து வளம் கொழிக்கும் பூமியாக இருந்த தமிழகப் பாலாற்றங்கரையோர கிராமங்களுக்குச் சொந்தமான பல இலட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இப்போது தரிசாகிப் போனது. சீமைக் கருவேல முள் மரங்கள் பயிராகும் கட்டாந் தரையாக்கப்பட்டுவிட்டது பாலாறு.

தமிழக எல்லையைத் தொடும்வரை இன்றும் ஜீவநதியாகவே இருக்கும் பாலாறு தமிழக எல்லைக்கு வந்தவுடன் பாலைவன நீரோடையாகி, ஆறு இருந்ததற்கான வெறும் அடையாளமாக மட்டுமே உள்ளது.

வடதமிழ்நாட்டிற்கு ஈடு செய்ய முடியாத இந்தத் துரோகத்தைச் செய்தது யார்? தமிழ்நாட்டின் மாண்புமிகு முதல்வர்கள் தாம்.

சுதந்திரத்திற்கு முன்பு சென்னை ராஜதானியாக இருந்தபோது, அதன் நிர்வாகப் பொறுப்பிலிருந்த முதல்வர் கருணாநிதிக்குக் கோரிக்கை மனுக்களை வெள்ளையர்கள் தமிழ் மண்ணிற்குச் சம்பந்தமில்லாதவர்கள். அவர்கள் பாலாற்றின் மீது தமிழ்நாட்டிற்கு உள்ள உரிமைகளைக் காக்கப் போராடி, கர்நாடகக கரர்களின் அத்துமீறலைத் தடுத்திருக்கிறார்கள்.

சுதந்திரம் வந்தது, கர்நாடகக்காரர்கள் கேள்வி கேட்பாரற்று, பாலாற்றின் மீதான தமிழ்நாட்டின் உரிமையை மீற ஆரம்பித்தார்கள். பாலாற்றங்கரை  நெடுகிலும் பெரிய பெரிய ஏரிகளை வெட்டி, பாலாற்றின் நீரைத் தேக்க ஆரம்பித்தார்கள். பாலாற்றில் நீர்வரத்து குறைய ஆரம்பித்தது.

இந்த அபாயத்தை உணர்ந்த வேலூர் செங்கற்பட்டு மாவட்ட விவசாயிகள் மாநாடு கூட்டி, கர்நாடகாவின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி, தமிழக அரசுக்கு நேரில் கொண்டு போய் மனு கொடுத்து, தக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்கள். இந்தப் பிரச்சனையை அப்போது பச்சைத் தமிழர் காமராசர் தான் மாண்புமிகு தமிழக முதல்வர். அவர் இந்தப் பிரச்சனையைக் கண்டு கொள்ளவே இல்லை.

இதைப் பார்த்த கர்நாடகக்காரன் தமிழ்நாடு வேலியில்லாத பூமி. பாலாற்றை முழுதாக மறித்தாலும் அதைத் தட்டிக் கேட்க நாதியில்லை.. என்பதைப் புரிந்து கொண்டு, வேக வேகமாக நூற்றுக்கணக்கான ஏரிகளை வெட்டிப் பாலாற்று நீரை, முடிந்தவரை தேக்கிக் கொண்டான்.

எப்போதாவது மழைக்காலங்களில் மட்டுமே சுடுமணலை ஈர மணலாக்கிவிட்டுப் போக, வெள்ளம் பாலாற்றில் வருகிறது. பாலாற்றில் வெள்ளம் வருவதைப் பார்க்க தேர்த் திருவிழாவுக்கு வருவது போல மக்கள் வருகிறார்கள். பாலாற்றின் கரை நோக்கி.

இதைக் கூட விட்டு வைக்கக் கூடாது என்று கருதிய, ஆந்திர முதல்வரான மறைந்த இராஜசேகர ரெட்டி, குப்பம் நகரத்துக்கு அருகே கணேசபுரம் என்ற இடத்தில் பெரிய அணையைக் கட்டத் திட்டம் தீட்டி, செயலில் இறங்கினார்.

இதைப் பார்த்து தமிழக முதல்வர் கருணாநிதி பதறவில்லை. தமிழகத்துக்கு அண்டை மாநிலத்தவர்களால் ஏற்படுத்தப்படும் எந்தப் பாதிப்புகளைப் பார்த்துதான் அவர் பதறி இருக்கிறார்?

அவர் பதறுவதெல்லாம், தனக்கும் தன் குடும்பததினருக்கும் பதவிகள் கிடைக்காதபோது மட்டுமே.

பலாற்றுப் பாதுகாப்பு மக்கள் தலைவராக இருக்கும் வாணியம்பாடி எம்.எம்.பஷீர் பதறினார். அபாய சங்கை ஊதினார்.

பலாற்றுப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பாக, முதல்வர் கருணாநிதிக்குக் கோரிக்கை மனுக்களை  அனுப்பிப் பார்த்தார். தங்கள் மாவட்ட அமைச்சர் என்ற முறையிலும், பொதுப்பணித்துறை அமைச்சர் என்ற முறையிலும் அமைச்சர் துரைமுருகனை நேரில் சந்தித்துப் பலமுறை முறையிட்டுப் பார்த்தார்.

எந்த ஜென்மமும் அசையவில்லை, காவிரி போனால் என்ன? பாலாறு வறண்டால் என்ன? இலவச டி.வி. வழங்கினால் 1 கிலோ அரிசியை ஒரு ரூபாய்க்கு வழங்கினால், ஓட்டுப் போட்டுவிடப் போகிறார்கள். நாம் ஆட்சிக்கு வந்துவிடப் போகிறோம். இதற்கு எதற்காக நதிநீர் உரிமைகாப்பு அது இது எல்லாம் என்ற மிதப்பில் இருந்தார்கள்.

இனியும் தமிழ்நாட்டினை ஆளும் துரோக சக்திகளை நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்த எம்.எம்.ஷீர், தன் தள்ளாத  80 வயதிலும், விழிப்புணர்வுப் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தினார். கோரிக்கை விளக்கப் பொதுக்கூட்டங்கள் நடத்தினார். உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தினார்.  10 லட்சம் விவசாய மக்களிடம் கையயழுத்து வாங்கி மத்திய மாநில அரசுகளுக்கு அனுப்பினார்.

இப்படி, இந்தப் பெரியவர் எம்.எம். ஷீர் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்ட பிறகுதான் தமிழக அரசியல் கட்சிகளுக்கு விபரீதம் புரிந்தது. சட்டமன்றத்தில் கேள்விகள் எழுந்தன. அணை கட்டும் பகுதி நோக்கிக் பேரணிகள் நடந்தன. ஆந்திர அரசுக்கு எதிராகவும் தமிழக அரசுக்கு ஆதரவாகவும் கணடன முழக்கங்கள் வெடித்துக் கிளம்பின.

ஆட்சிக் கட்டிலில் தூங்கிக் கிடந்த தமிழக அரசு, இதற்குப் பிறகுமா தூங்க முடியும்?
- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக